Published:Updated:

"வீட்டிலிருந்தே வேலை... ஆன்லைனில் சம்பளம்!”

செல் நெட் - 2013

"வீட்டிலிருந்தே வேலை... ஆன்லைனில் சம்பளம்!”

செல் நெட் - 2013

Published:Updated:
##~##

செல் இல்லாத கல்லூரி மாணவர்கள், இன்றில்லை. இதை, 'தொழில்நுட்ப வளர்ச்சி' என்று கொண்டாடும் அதேவேளையில், மாணவர்களுக்கு செல்போன் மற்றும் இன்டர்நெட் குறித்த சாதக பாதகங்களை கற்பிப்பதுதான்... இன்றைக்கு மிகமுக்கியமான பணியாகவே இருக்கிறது. கூடவே, இந்த செல் மற்றும் இன்டர்நெட் மூலமாக கிடைக்கும் தொழில், வேலை வாய்ப்புகளையும்... மறுக்கவே முடியாது.

எச்சரிக்கை மற்றும் வழிகாட்டல் இந்த இரண்டையும் இணைத்தால் எப்படி இருக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விஷயத்தைக் கையில் எடுத்த 'அவள் விகடன்’... சென்னை, பள்ளிக்கரணையில் இருக்கும் ஜெருசலம் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து, மார்ச் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களும்... 'செல் நெட்-2013' என்கிற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பல்வேறு போட்டிகள் மற்றும் செல்போன், இணைய தளம், தடயவியல் துறை என்று பல தளங்களில் இயங்கும் நிபுணர்களின் கருத்துரைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்று மாணவ - மாணவிகளுக்கு முழுமையான விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு. ஜெருசலம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஆர்.எம்.சுரேஷ் இதனை தொடங்கிவைத்தார்.

முதல் நாள் ஓவியம், கோலம், கவிதை, கட்டுரை, மேடை நாடகம் மட்டுமல்லாது... தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மொபைல் உள்ளிட்டவை மூலமாக சாதிக்கக் கூடிய விஷயங்களை மாதிரி வடிவங்களாக வடிவமைக்கும் போட்டிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து, செல்போனினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், செல்போன் தொழில்நுட்பங்கள் குறித்தும் வார்த்தைகளிலும், ஓவியங்களிலும், நடிப்பு மூலமாகவும் வெளிப்படுத்தினர் மாணவர்கள். இரண்டாம் நாள்... நிபுணர்களின் வழிகாட்டல்கள் மற்றும் பரிசளிப்பு ஆகியவை இடம்பிடித்தன.

"வீட்டிலிருந்தே வேலை... ஆன்லைனில் சம்பளம்!”

ஐ.டி. நிறுவனம் நடத்தும் 'காம்கேர்' கே.புவனேஸ்வரி... இணையம், செல்போன், பேங்க் கிரெடிட் கார்டுகள் குறித்த நுணுக்கமான விஷயங்களை வெளிச்சமிட்டார். இன்டர்நெட் மற்றும் மொபைல் போன்கள் மூலமாக விளையும் தீங்குகளை விளக்கும் வகையில், 'மெய்பொருள்’ எனும் குறும்படத்தை எடுத்துள்ளது தமிழகக் காவல்துறையின் 'சைபர் க்ரைம்'. இத்திரைப்படத்தையும் புவனேஸ்வரி திரையிட்டுக் காட்டியது... மாணவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதாகவே இருந்தது! கூடவே, தொழில் வாய்ப்புகள் பற்றியும் புவனேஸ்வரி தந்த டிப்ஸ்கள் அருமை!

''விளம்பரங்கள் எல்லாமே பத்திரிகைகளில் வந்து கொண்டிருப்பது ஒருபுறமிருக்க... இன்றைக்கு இன்டர்நெட் மூலமாகவும் அவை வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக ஃபேஸ் புக் போன்ற தளங்கள் இதற்கான ஊடகமாக இருக்கின்றன. இத்தகைய விளம்பரங்களை எல்லாம் வீட்டிலிருந்தபடியே மாணவர்களும், இல்லத்தரசிகளும் வடிவமைக்க முடியும். அதேபோல, தமிழ் டி.டிபி. வேலைக்கு தற்போது அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றன. வெப் டிசைனிங்கூட வீட்டிலிருந்தே செய்ய முடியும். இந்த வேலைகள் தொடர்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் வெப் சைட்டிலேயே இருக்கும். வேலையை முடித்துக் கொடுத்தால், அதற்குரிய சம்பளம் ஆன்லைன் மூலமே நம் கணக்குக்கு வந்துவிடும். இத்தகைய கம்பெனிகள் நம்மிடம் எந்தச் சூழ்நிலையிலும் பணம் கேட்பதில்லை'' என்றெல்லாம் வழிகாட்டிய புவனேஸ்வரி,

''அதேசமயம், 'மொபைல் பேஸ்டு ஜாப்... நீங்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்' என்று கூவிக்கூவி அழைக்கும் விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, என்னதான் செய்கிறார்கள் என்று கண்டறிவதற்காக... நானே நேரில் சென்றேன். '500 ரூபாய் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யுங்கள். நாங்களே வேலை தொடர்பாக தொடர்பு கொள்வோம்' என்றார்கள். அதன்படியே செய்துவிட்டு மூன்று மாதங்களாக காத்திருந்தும் எந்தப் பதிலுமில்லை. இப்படிப்பட்டவர்களிடம் ஏமாறாமலிருப்பதும் முக்கியம். பொதுவாக, வேலை தருகிறேன் என்று சொல்லி நம்முடைய பணத்தை கேட்டாலே உஷாராகிவிட வேண்டும்'' என்கிற எச்சரிக்கையையும் கொடுக்கத் தவறவில்லை.

"வீட்டிலிருந்தே வேலை... ஆன்லைனில் சம்பளம்!”

அடுத்து பேசியவர்... 'சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி' எனும் துப்பறியும் நிறுவனத்தின் நிறுவனர் வரதராஜன். இவர், தமிழக காவல்துறையின் தடயவியல் துறையில் ஏறத்தாழ 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

''முகம் தெரியாத பலரால் இணைய உலகத்தில் விரிக்கப்பட்டிருக்கும் அபாய வலைகள்... அநேகம். அதில் சிக்கிக் கொண்டு அவதிப்படுபவர்களும் அநேகமே!'' என்று சொல்லி, தாங்கள் கையில் எடுத்து விசாரணை நடத்தி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த பல உண்மைச் சம்பவங்களை எடுத்து வைத்தார்.

வரதராஜன் சொன்னதிலிருந்து ஒரு சாம்பிள்... ''ஃபேஸ் புக்கில் நிறைய நண்பர்கள் வேண்டும் என்று சதா கவலைப்படும் நபர் அந்த இளைஞன். குறிப்பாக, பெண் தோழி வேண்டும் என்கிற ஆசை அவனுக்கு அதிகம். இதைத் தெரிந்து கொண்ட ஒருவன், பெண்ணின் பெயரால் 'ஃபேஸ் புக்' கணக்கு ஆரம்பித்து, அவனுடன் நட்பு பாராட்டினான். இவனும் அதை நம்பிவிட... கடைசியில் வலைவிரித்து, அந்த இளைஞனை வரவழைத்து, ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய தொகையை கொள்ளைஅடித்துவிட்டான்... பெண் பெயரில் 'ஃபேஸ் புக்' வந்தவன்!''

"வீட்டிலிருந்தே வேலை... ஆன்லைனில் சம்பளம்!”

இன்றைய தொழில்துறை மற்றும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுவரும் முன்னேற் றங்கள் குறித்து பேசிய தொழில்நுட்ப ஆலோசகர் சுபாஷ்,  இத்துறையில் மாணவர்கள் அனைவரும் தங்கள் அறிவை அப்டேட் செய்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் புரியவைத்தார். கூடவே, ''வெளிநாட்டில் நான் அதிகம் பணி புரிந்துள்ளேன். அங்கெல்லாம் இந்தியர்களுக்கு வேலை தர பலரும் தயாராகவே இருக்கிறார்கள். காரணம்... நாம் அதிக நேரம் உழைப்பதுதான். இப்படி 100% உழைத்தாலும், நமக்கு கிடைக்கும் ஊதியம் என்னவோ... 5% அளவுக்குத்தான். அதனால், வெளிநாட்டு கம்பெனிகளுக்கு போக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அதே தொகையை... அதைவிடக் கூடுதலான தொகையை இங்கிருந்தே சம்பாதிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், தேடல் முக்கியம்!'' என்று சொன்னார்!

நிறைவாக, 'மொபைல் போன்களால் நன்மைகள் அதிகமா... தீமைகள் அதிகமா?' என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. லயோலா கல்லூரியின் சமூகப் பணித்துறை பேராசிரியர் அருள் காமராஜ் தலைமையில், நடந்த இப்பட்டிமன்றத்தில், மாணவர்கள் தங்களின் தீப்பறக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ''மொபைல் போன் என்பது தப்புத்தப்பாக பயன்படுத்தப்படுவது உண்மைதான். அதற்காக அது மட்டுமே இங்கே நடப்பதில்லையே... அதன் மூலமாக கிடைக்கும் நன்மைதானே அதிகமாக இருக்கிறது. எனவே, தீமையை மட்டுமே பெரிதுபடுத்தி பயமுறுத்துதல் கூடாது'' என்று தீர்ப்பளித்தார் நடுவர் அருள் காமராஜ்!

வெற்றியாளர்களுக்கு 'அவள் விகடன்' பரிசுகளை வழங்க... இனிதே நிறைவுற்றது நிகழ்வு!

- சா.வடிவரசு, உ.கு.சங்கவி