Published:Updated:

புதுமைப் பூவையர் - 2013...

விழுந்தது நம்பிக்கை விதை!

புதுமைப் பூவையர் - 2013...

விழுந்தது நம்பிக்கை விதை!

Published:Updated:

''எங்களுக்கு புதுப்புது பிஸினஸ் அனுபவம் கிடைக்கறதுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கு... 'இந்த புதுமைப் பூவையர்-2013' நிகழ்வு'' என்று இல்லத்தரசிகளும்...

''படிப்பை முடிச்சதுக்கு அப்புறம் ஏதாவது ஒரு நிறுவனத்தில்தான் வேலைக்கு சேரணும் என்கிற கட்டாயம் இல்லாம, சொந்தத் தொழில் செய்யலாம் என்கிற நம்பிக்கை விதை இதன் மூலமா எங்களுக்குள் விழுந்திருக்கு!'' என்று கல்லூரி மாணவ - மாணவிகளும் புளகாங்கிதப்பட்டுப் போனார்கள்... மார்ச் 15-ம் தேதியன்று! அன்றைய தினம், அவள் விகடன் - குமார ராணி மீனா முத்தையா கல்லூரி மற்றும் லயன்ஸ் கிளப் மூன்றும் இணைந்து.... மாபெரும் தொழிற்பயிற்சி அறிமுக முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. அதுதான்... புதுமைப் பூவையர்-2013!

சென்னை, அடையாறு, குமாரராணி மீனா முத்தையா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்... மாணவ - மாணவிகள் மற்றும் 'அவள்’ வாசகிகள் என பலரும், அவரவருக்கு தெரிந்த தொழில்களை முன் வைத்து, ஸ்டால்களையும் அமைத்திருந்தனர். கூடவே... சாக்லேட், பேப்பர் ஜுவல்லரி, நாப்கின், ஹெல்த் மிக்ஸ் ஆகியவை தயாரிப்பது பற்றியும் மொபைல் சர்வீஸ் பற்றியும் அறிமுக பயிற்சியும் அளிக்கப்பட்டது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுமைப் பூவையர் - 2013...

''கல்லூரியின் தாளாளர் குமார ராணி டாக்டர் மீனா முத்தையா அவர்களின் வழிகாட்டலுடன் நடக்கும் இந்த நிகழ்வில்... நாப்கின் தயாரிப்பு தவிர, மற்ற தொழில்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை. சில ஆயிரங்கள் இருந்தாலே போதும்'' என்று கல்லூரியின் முதல்வர் டாக்டர் விஜயஸ்ரீ மற்றும் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்த டாக்டர் சத்திய பிரேமா ஆகியோர் நம்பிக்கையூட்ட... பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன!

புதுமைப் பூவையர் - 2013...

மருத்துவமனைகளுக்குப் பயன்படும் 'ஹாஸ்பிட்டல் நாப்கின்' மற்றும் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் 'வின்ஸ் நாப்கின்' என இரண்டு வகையான நாப்கின் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி அளித்த நாகலட்சுமி, ''பொதுவாக பெண்கள் வீட்டு வேலை, சமையல் என மிகக் கடினமான வேலைகளைக்கூட சுலபமாக தினம் தினம் செய்கிறார்கள். அப்படியிருக்க... நாப்கின் தயாரிப்பு போன்ற சுலபமான சிறுதொழில் செய்வது மிகவும் எளிது. அந்த வகையில் அவர்களின் மிகக்குறைந்த ஓய்வுநேரத்தில்கூட நாப்கின் தொழில் செய்து நல்ல வருமானம் பெறலாம். ஹாஸ்பிட்டல் நாப்கின் பயன்பாடும் தேவையும் தற்போது மிக அதிகமாக உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வகை நாப்கின் அதிக வருமானத்தைத் தரும். இதை தயாரிப்பது மற்றும் சந்தைபடுத்துவதும் மிகவும் எளிது'' என்று அனைவரையும் ஈர்த்தார்.

புதுமைப் பூவையர் - 2013...

குரோம்பேட்டையிலிருந்து வந்து பங்கேற்ற இல்லத்தரசி மீனாட்சி, ''அவள் விகடன் மூலமாகத்தான் இங்க வந்தேன். காலையில கிளம்பும்போது, 'நம்மளாலயெல்லாம் சுயதொழில் செய்ய முடியுமா?'னு நம்பிக்கைஇல்லாமதான் புறப்பட்டேன். இங்க வந்த பிறகு, நம்பிக்கையூட்டும் விதமா பல்வேறு வகையான பயற்சிகளுக்கு அறிமுகம் கொடுத்திருக்காங்க. மொபைல் சர்வீஸ் பயிற்சி, சத்து மாவு பயிற்சி இது ரெண்டுலயும் என் கவனம் திரும்பியிருக்கு. குறைந்த முதலீட்டில் அதிகம் சம்பாதிக்கலாம்னு நெனைக்கிறேன். அவள் விகடனுக்கும் இந்தக் கல்லூரிக்கும் நன்றி'' என்று சொன்னார்.

''கஷ்டத்தில் இருக்கும் நபருக்கு மீன்பிடித்துக் கொடுப்பதைவிட, மீன்பிடிக்கக் கற்று கொடுப்பதே சிறந்தது என்று வெளிநாட்டு பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று, அவள் விகடன் அதை நிஜமாக்கி... எங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அளித்துள்ளது'' என்று வாழ்த்தியபடியே புறப்பட்டார் வாசகி கஸ்தூரி!  

- செ.திலீபன்