Published:Updated:

கொஸ்‘டீன்ஸ்’

பிஹெச்.டி படிப்புக்கு... முழுமையாக வழிகாட்ட முடியுமா?

கொஸ்‘டீன்ஸ்’

பிஹெச்.டி படிப்புக்கு... முழுமையாக வழிகாட்ட முடியுமா?

Published:Updated:
##~##

''முதுகலை (எம்.ஏ.) இறுதியாண்டு மாணவியான என்னுடைய கனவு, கல்லூரி பேராசிரியர் ஆவது. ஆனால், குடும்பப் பொருளாதார தேவைக்காக முதுகலை பட்டத் தகுதியோடு உறவினரின் பள்ளியில் ஆசிரியராக சேரவிருக்கிறேன். பள்ளியில் பணியாற்றிக் கொண்டே, பகுதி நேர முனைவர் (பிஹெச்.டி.) பட்டம் பெற விரும்புகிறேன். இதற்கு தேவையான அனைத்து விவரங்களும் கிடைக்குமா?''

- கே.சாந்தினி, உளுந்தூர்பேட்டை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முனைவர் நா.இளங்கோ, பேராசிரியர், காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி

''நடைமுறையில் இருக்கும் பகுதி மற்றும் முழு நேர படிப்பு விவரங்களை இங்கே தருகிறேன். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்!

முனைவர் பட்ட மேற்படிப்பு மேற்கொள்வதற்கான கல்வித் தகுதியாக, முதுநிலை பட்டம் அல்லது ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்)எனப்படும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவர்கள் என்றால், முனைவர் பட்டப் படிப்பின் முதல் ஆண்டில் கூடுதலாக 3 தாள்களை எழுத வேண்டியிருக்கும்.

உதவித் தொகையுடன் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் முழுநேர மாணவராக சேர்ந்து இதைப் படிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதற்காக அனைவரும் தேர்ந்தெடுப்பது... நெட் தேர்வு (NET- National Eligibility Test). பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நடத்தும் தேசிய தகுதித் தேர்வுதான் 'நெட்’. கூடுதல் விவரங்களுக்கு,http://ugcnetonline.in/index.php என்கிற இணையதளத்தைப் பார்க்கவும்.

கொஸ்‘டீன்ஸ்’

'நெட்' தேர்வில் குறிப்பிட்ட 'கட் ஆஃப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு 'ஜேஆர்எஸ்' (Junior Research Fellowship) சான்றிதழ் கிடைக்கும். இதைக் கொண்டு அவர்கள் இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகத்திலும் அதன் காலியிடத்தைப் பொறுத்து, சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஜேஆர்எஸ் சான்றிதழோடு சேர்க்கை பெற்றவர்களுக்கு முனைவர் பட்ட மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். புத்தகங்கள் உள்ளிட்ட பிற செலவினங்களுக்காக தனியாக 30 ஆயிரம் ரூபாய் வருடாந்தர உதவித் தொகையாக கிடைக்கும்.

முனைவர் பட்ட ஆய்வு மேற்படிப்பை முடிப்பதற்கான கால வரையறை என்பது எம்.ஃபில். முடித்தவர்களுக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளாகவும் அதிகபட்சம் 5 ஆண்டுகளாகவும் இருக்கும். இதுவே முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 3 மற்றும் 6 ஆண்டுகளாக இருக்கும். அதாவது, முதுநிலைப் பட்டம் முடித்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் எம்.ஃபில் முடித்தவர்களுக்கு 2 ஆண்டுகளும் வருகைப்பதிவு கட்டாயம்.  உங்கள் ஆய்வு வழிகாட்டியான 'கைடு’ தரும் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நீட்டிப்பு சலுகையானது, எம்.ஃபில். முடித்தவர்களுக்கு ஓராண்டு மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் என்பதாக அமையும். ஆனால், சலுகை நீட்டிப்பு காலத்தில் உதவித்தொகை கிடைக்காது.

'யுஜிசி' நடத்தும் நெட் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும். இதைத் தவிர, பல்கலைக்கழகங்கள் தனிப்பட்ட வகையிலும் நுழைவுத்தேர்வு மூலம் பிஹெச்.டி. சேர்க்கையை மேற்கொள்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்பு (Affliated) பெற்ற கல்லூரிகளிலும் சேரலாம். இவர்களுக்கு பல்கலைக்கழகத்தை பொறுத்து உதவித்தொகை மாறுபடும்.

இனி, பகுதி நேர படிப்பாக முனைவர் ஆய்வு பட்ட மேற்படிப்பை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம். ஆய்வு மாணவராக விரும்புபவர், குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் விரிவுரையாளர் அல்லது உதவிப்பேராசிரியராக பணிபுரிபவராக இருப்பின் குறைந்தபட்ச பணிக்கால தகுதி 3 ஆண்டுகள். இதுவே பள்ளி ஆசிரியர்களுக்கு சற்று அதிகமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, புதுவை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச பணிக்கால தகுதி 5 ஆண்டுகள். கல்லூரி அல்லது பள்ளி நிர்வாகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் மற்றும் பணிச்சான்றிதழ் போன்றவை விண்ணப்பத்தோடு இணைக்கப்படுவது அவசியம். பகுதி நேரப்படிப்பில் உதவித்தொகை கிடையாது. வேண்டுமெனில், வங்கி மூலமாக கல்விக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு சார்ந்த சரியான 'கைடு’ ஒருவரே உங்களுக்கான ஆய்வு தலைப்பையும் தேர்ந்தெடுக்க உதவுவார். ஒரு 'கைடு’ ஒரு சமயத்தில் எட்டு மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்ட முடியும் என்பதாலும், வழிகாட்டியின் சித்தாந்தம், கொள்கை இவற்றோடு ஒத்திசைவாகும் மாணவரால் மட்டுமே லகுவாக ஆய்வை முடிக்க முடியும் என்பதாலும் 'கைடு’ தேர்வில் கவனமும் தேடலும் அவசியம்.''

'நெட்’ எனப்படும் தகுதித்தேர்வில் வெற்றி பெறுவதன் வாயிலாக கிடைக்கும் ஜேஆர்எஸ் சான்றிதழ் மூலம், உரிய கல்வி உதவித்தொகையில் பிஹெச்.டி. படிக்க முடியும் என்பதோடு, தேசிய அளவிலான கல்லூரிப் பேராசிரியர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கவும் இதுவே தகுதித் தேர்வாக அமைகிறது. அனைந்திந்திய அளவில் 'நெட்' என்பதுபோல, மாநில அளவில் 'ஸ்லெட்' (SLET -State Level Eligibility Test)  தேர்வு என்று தனியாக நடத்தப்படுகிறது. அதாவது மாநில அரசு அறிவிக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 'நெட்' அல்லது 'ஸ்லெட்' ஏதாவது ஒன்றில் தேறியிருந்தால் போதும். ஆனால், மாநிலம் தாண்டிய தேசத்தின் ஏனைய பிராந்திய கல்லூரிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 'நெட்' அத்தியாவசியம். இதை, பிஹெச்.டி-க்கான 'ஜேஆர்எஸ்' தகுதி சான்றிதழ் பெறுவதன் மூலமாக முன்கூட்டியே  சாத்தியமாக்கிக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism