Published:Updated:

`நெல் பெயர்களை சொன்னா 2 கிலோ அரிசி!’ - 32 பாரம்பர்ய நெல் ரகங்கள் கொலு வைத்துள்ள பெண் இயற்கை விவசாயி

கொலுவில் பாரம்பர்யமான 32 வகை நெல் ரகங்கள்
News
கொலுவில் பாரம்பர்யமான 32 வகை நெல் ரகங்கள்

``எனக்கு இயற்கை விவசாயம் தெரியாது. யூடியூப் பார்த்தும், அம்பாசமுத்திரம் சுத்து வட்டாரப் பகுதி இயற்கை விவசாயிகளை சந்திச்சும் கத்துக்கிட்டேன். 2011-ல 40 சென்ட்ல ஆரம்பிச்ச இயற்கை முறை நெல் விவசாயம், இப்போ 7 ஏக்கரா விரிவடைஞ்சிருக்கு.'’

`நெல் பெயர்களை சொன்னா 2 கிலோ அரிசி!’ - 32 பாரம்பர்ய நெல் ரகங்கள் கொலு வைத்துள்ள பெண் இயற்கை விவசாயி

``எனக்கு இயற்கை விவசாயம் தெரியாது. யூடியூப் பார்த்தும், அம்பாசமுத்திரம் சுத்து வட்டாரப் பகுதி இயற்கை விவசாயிகளை சந்திச்சும் கத்துக்கிட்டேன். 2011-ல 40 சென்ட்ல ஆரம்பிச்ச இயற்கை முறை நெல் விவசாயம், இப்போ 7 ஏக்கரா விரிவடைஞ்சிருக்கு.'’

Published:Updated:
கொலுவில் பாரம்பர்யமான 32 வகை நெல் ரகங்கள்
News
கொலுவில் பாரம்பர்யமான 32 வகை நெல் ரகங்கள்

நவராத்திரி கொலுவில் பொம்மைகளை அடுக்கி 9 நாள்கள் வரை வீடுகளில் வழிபாடு செய்வார்கள் பெண்கள். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பெண் இயற்கை விவசாயியான லெட்சுமி தேவி, தன் வீட்டு கொலுவின் ஒரு பகுதியாக 32 பாரம்பர்ய நெல் ரகங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து லெட்சுமி தேவியிடம் பேசினோம்...``நான் 25 வருஷமா புரட்டாசி நவராத்திரி கொலு வச்சிட்டு வர்றேன். பி.எஸ்.என்.எல்-ல கிளார்க்கா வேலை பார்த்து 2010-ல் விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். வீட்ல இருக்குறது எனக்குப் பிடிக்கல.

கொலுவுடன் லெட்சுமி தேவி
கொலுவுடன் லெட்சுமி தேவி

சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல விருப்பம் அதிகம். நாளுக்கு நாள் நோய்களும் நோயாளிகளும் அதிகரிச்சுட்டு வர்றாங்க. ரசாயன உரத்தில் விளைந்த ஒட்டுரக நெல்லில் மதிப்புக்கூட்டப்பட்ட அரிசி உணவுகளை சாப்பிடுறதும் நோய் ஏற்படுறதுக்கு ஒரு காரணம்னு தெரிஞ்சுக்கிட்டேன். இயற்கை உணவுகள் மேல மக்களுக்கு திரும்பவும் நாட்டம் அதிகரிச்சிருக்கு. அதனால, நாம ஏன் விவசாயம் செய்யக்கூடாதுன்னு எனக்குள்ள ஒரு கேள்வி எழுந்துச்சு. என்னோட விவசாய விருப்பத்தை கணவர், மகள், மகன்கள்கிட்ட சொன்னேன்.

உடனே, எல்லாரும் சிரிச்சாங்க. ”உடல்நிலை சரியில்லன்னுதான வி.ஆர்.எஸ்... விவசாயத்தை எப்படி செய்வ? பேசாம வீட்ல இருங்கம்மா”னு சொன்னாங்க. ஆனா, விவசாயம் செய்யணும்கிறதுல நான் உறுதியா இருந்தேன். இயற்கை விவசாயம் செய்யுற யாரையும் எனக்குத் தெரியாது. யூடியூப் மூலமாத்தான் இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். 

அணிவகுக்கும் 32 நெல்  ரகங்கள்
அணிவகுக்கும் 32 நெல் ரகங்கள்

அம்பாசமுத்திரம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல இயற்கை விவசாயம் செய்யுற விவசாயிகளைச் சந்திச்சு விவசாய முறைகளைக் கத்துக்கிட்டேன்.  2011-ல, 40 சென்ட்ல ஆரம்பிச்ச  இயற்கை முறையில நெல் விவசாயம், இப்போ 7 ஏக்கர் பரப்பளவா விரிவடைஞ்சிருக்கு. பாரம்பர்ய ரக அரிசிக்கு மக்கள் மத்தியில வரவேற்பு அதிகரிச்சிட்டு வருது. குறிப்பா சுகர் நோயாளிகள் ரொம்பவே விரும்புறாங்க. அதனால, பாரம்பர்ய நெல் ரகங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்.

கொட்டாரச்சம்பா, காலாநமக்,  பால்குடவாழை, பனங்காட்டு குடவாழை, மிளகுச்சம்பா, பூங்கார், கருத்தக்கார், சித்திரைக் கார், கருப்புக்கவுனி, ஒரிசா குட்டை, ஒரிசா நெட்டை, ஒரிசா மணிச்சம்பா, ரத்தசாலி, வாசனைச் சீரகச்சம்பா,  செங்கல்பட்டு சிறுமணிச் சம்பா, நவரா, சிவன்சம்பா, வைகரைச் சம்பா, கொத்தமல்லிச் சம்பா, அறுபதாம் குறுவை, கருங்குறுவை, தங்கச்சம்பா, வாடன் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா,  மடுமுழுங்கி, பாசுமதி, சிவப்புக்கவுனி, தூயமல்லி, கல்சேரி, பிசினிச் சம்பா, புழுதிக்கார், கருடன் சம்பா, காட்டுயானம், மாப்பிளைச் சம்பா, இலுப்பைப்பூச் சம்பா என 32 ரகங்கள் எங்கிட்ட இருக்கு. இந்த ரகங்கள் ஒவ்வொண்ணையும் குறிப்பிட்ட பரப்பளவுல விதைச்சு, விதையாகவும் சேகரிச்சு வச்சிருக்கேன்.

லெட்சுமிதேவி வீட்டு கொலு
லெட்சுமிதேவி வீட்டு கொலு

விதைகள் தேவைப்படுற  விவசாயிகளுக்கும் கொடுத்துட்டு வர்றேன். இன்னமும் பல பாரம்பர்ய ரகங்கள் தேடுதல்ல இருக்கேன். நவராத்திரின்னாலே கொலுதான் எல்லாரோட நினைவுக்கு வரும். எங்க வீட்லயும் உருவ பொம்மைகளை படிகள்ல அடுக்கி வச்சுதான் வழிபாடு நடத்துவோம். ஆனா, இந்த வருஷம் கொலுவுல ஒரு பகுதியா நான் சேகரிச்சு, என்னோட  நிலத்துல இயற்கை முறையில சாகுபடி செஞ்ச மகசூல் நெல் ரகங்களையே  காட்சிப்படுத்தியிருக்கேன்.

ஒவ்வொரு நெல் ரகத்தின் பெயர்களையும் அடையாளத்துக்காக எழுதி வச்சிருக்கேன். எங்க வீட்டுக்கு கொலுவை பார்க்க வர்றவங்க இந்த நெல் ரகங்களை ஆச்சர்யமா பாக்குறாங்க. ஒவ்வொரு நெல் ரகத்துக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள் இருக்கு. இந்த 32 நெல் ரகங்களோட பெயர்களையும், அதோட மருத்துவ குணத்தையும் மனப்பாடமா சொல்லுறவங்களுக்கு அவங்க கேட்குற நெல்லின் அரிசி 2 கிலோவை பரிசாக் கொடுக்குறேன்னு சொல்லியிருக்கேன்” என்றவர் இறுதியாக,

கொலுவில் அணிவகுக்கும் 32 பாரம்பர்ய நெல் ரகங்கள்
கொலுவில் அணிவகுக்கும் 32 பாரம்பர்ய நெல் ரகங்கள்

”அந்தந்த மண்ணுக்கேத்த சுவை, மருத்துவ குணங்களை உடையவைதான் நம் பாரம்பர்ய நெல் ரகங்கள்.  ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர்கள், இளைஞர்கள்.. எனப் பல தரப்பினரும் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்புறது வரவேற்கத்தக்கது. ஆனா, விதைக்கும் நெல் ரகமும் பாரம்பர்ய ரகங்களா இருக்கணும்” என்கிறார் லெட்சுமிதேவி.