Published:Updated:

குறும்பட தயாரிப்பு... வேலை வாய்ப்புக்கு உதவுமா?

டீன்ஸ்

குறும்பட தயாரிப்பு... வேலை வாய்ப்புக்கு உதவுமா?

டீன்ஸ்

Published:Updated:
##~##

''எங்கள் கல்லூரியின் விஸ்காம் மாணவிகள், குறும்படம் எடுத்து அசத்துகிறார்கள். அதைப் பார்த்ததிலிருந்து எகனாமிக்ஸ் மாணவிகளான எங்களுக்கும் அந்த ஆசை வந்திருக்கிறது. குறும்பட தயாரிப்புக்கு, ஆர்வம் தவிர்த்து வேறென்னென்ன விஷயங்கள் முக்கிய தேவைகளாக இருக்கின்றன? அதிக செலவில்லாது குறும்படம் எடுக்க என்ன வழி? குறும்படங்கள் மூலமாக எதிர்கால வாழ்க்கையையும் திட்டமிட முடியுமா?''

குறும்பட தயாரிப்பு... வேலை வாய்ப்புக்கு உதவுமா?

- கே.பவதாரிணி மற்றும் தோழிகள், வேலூர்

ப.திருநாவுக்கரசு, நிறுவனர், 'நிழல்’ குறும்பட பயிற்சிப் பட்டறை, சென்னை:

''குறும்படம் எடுக்க அத்தியாவசிய தேவை... படைப்பாற்றலும் அதை வெளிப்படுத்தும் முனைப்பும் மட்டுமே. செலவு, ஏற்பாடு, வெளியீடு அனைத்தும் அதற்குப் பிறகுதான். முதலில் நீங்கள் சொல்ல வரும் கருத்தை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். இதற்கு உங்கள் நட்புவட்ட தோழிகளில் இருந்து... ஒருமித்த அலைவரிசை உடையவர்களாகவும், தனது துறையில் திறன் உள்ளவர்களாகவும் பொறுக்கியெடுத்து ஒரு குழுவை உருவாக்குங்கள். இப்போது உங்கள் கைவசமிருக்கும் கருத்து/கதையை அவர்களுடன் விவாதித்து பட்டை  தீட்டுங்கள்.

குறும்படம் என்பது ஒரு நிமிடத்தில் துவங்கி, அதிகபட்சம் முப்பது நிமிடத்துக்குள் முடிவடைவதாக இருக்க வேண்டும் என்பது சர்வதேச விதி. துவக்கத்தில் பத்து நிமிடங்களுக்குள் குறும்படம் எடுத்துப் பழக வேண்டும். உங்கள் கைவசம் இருக்கும் கருத்தை/கதையை... திரைக்கதையாக மெருகேற்றியதும், அதை காட்சிகளாகவும், வெவ்வேறு கோணங்களிலும் கற்பனை செய்து, தனி நோட்டில் பிரித்து எழுதிக் கொள்ள வேண்டும். செல்போன் கேமராவைக் கொண்டு உத்தேச படப்பிடிப்பை நடத்திப் பார்ப்பதுகூட பயிற்சிக்கு உதவும்.

குறும்பட தயாரிப்பு... வேலை வாய்ப்புக்கு உதவுமா?

சிறு சிறு ஷாட்டுகள், மிகச்சிக்கனமான வசனங்கள் இவற்றைக் கொண்டு... நீங்கள் உணர்ந்த கருத்து, பாடம், வலி இப்படி எதுவானாலும் அதை பார்வையாளருக்கு எந்தளவுக்கு கடத்த முடியும் என்பதில்தான் குறும்படத்தின் வெற்றி இருக்கிறது. உங்கள் பயிற்சிக்கும் திட்டமிடலுக்கும் 'யூடியூப்' தளத்தில் காணக் கிடைக்கும் குறும்படங்கள் நிரம்பவே உதவும். குறும்பட தயாரிப்பு குறித்த தொழில்நுட்ப அம்சங்களும்கூட சிறு படப்பதிவுகளாக இங்கு காணக் கிடைக்கின்றன. இவற்றைப் பார்ப்பதும், நண்பர்களுடன் விவாதிப்பதும் உங்களை மேலும் செம்மைப்படுத்தும்.

துவக்கத்தில் மிகவும் குறைவான செலவு அல்லது 'ஜீரோ பட்ஜெட்’ எனப்படும் செலவே இல்லாத வகையில் படமெடுப்பது நல்லது. நடிக்க ஆர்வமிருக்கும் உங்கள் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களையே பயன்படுத்தலாம். படப்பிடிப்பு கேமராவை ஒரு நாள் வாடகைக்கோ அல்லது இரவலாகவோ வாங்கிக் கொள்ளுங்கள். திட்டமிட்டபடி படப்படிப்பை முடித்ததும், அதை கம்ப்யூட்டரில் ஏற்றிக்கொண்டு எடிட்டிங், இசை கோர்ப்பு, டப்பிங் வேலைகளை முடிக்க வேண்டும். இதற்கு இணையத்தில் இலவசமாக ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன. 'விண்டோஸ் மூவி மேக்கர்’ போன்றவையேகூட போதும்.

குறும்பட தயாரிப்பு... வேலை வாய்ப்புக்கு உதவுமா?

உங்கள் கல்லூரி விழாக்களில் அல்லது துறை சார் நிகழ்வுகளில் இந்தக் குறும்படத்தை வெளியிடலாம். உள்ளூர் சேனல்களும் இதற்கு உதவக்கூடும். உங்களுக்கான தனித்த பயனர் கணக்கை துவக்கி, 'யூடியூப்' தளத்தில் பதிவேற்றுவது உலகத்தையே உங்கள் படைப்பை திரும்பி பார்க்கச் செய்வதற்கான முதல் படி. சென்சார் சான்றிதழ் பெற்றால்... சி.டி அல்லது டி.வி.டி-யில் பதிந்து விற்பனைக்கு வெளியிடலாம். இதற்கென மாற்று சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பார்வையாளர் வட்டம் விரிவடைந்து வருகிறது. படைப்பு நன்றாக இருப்பின் மார்க்கெட்டிங் செய்வதற்கும்கூட நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

ஆரம்பத்தில் செலவில்லாது குறும்படம் எடுத்துப் பழகிய பின்னர், ஸ்பான்சர் கிடைக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட  பட்ஜெட்டில் குறும்படம் எடுக்கலாம். அதேபோக்கில் டெக்னிக்கலாக உங்களை வளர்த்துக் கொள்வதும் நல்லது. தமிழகம் முழுக்க குறும்பட ஆர்வலர்களால் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன. உங்கள் அருகிலிருக்கும் இம்மாதிரியான பயிற்சி பட்டறையில் கலந்துகொள்வது மேலும் உங்களை செம்மைப்படுத்தும். சர்வதேச அளவில் குறும்பட போட்டிகளுக்கு உங்கள் படைப்புகளை அனுப்புவது உங்களுக்கான அங்கீகார வட்டத்தை விரிவுபடுத்துவதோடு, கிடைக்கும் பரிசுகள் ஊக்கமூட்டுவதாக அமையும். துவக்க காலத்தில் பங்கேற்பாளர் கட்டணம் அல்லாத குறும்பட போட்டிகளில் கலந்துகொள்வது நல்லது.

பிறகு, குறும்பட தயாரிப்பில் இயக்கம், கேமரா, எடிட்டிங் என ஏதாவது ஒரு துறையில் எதிர்காலத்தை முடிவு செய்து உங்களை மேலும் பட்டை தீட்டிக் கொள்ளலாம். சிறப்பான குறும்பட வல்லுநராக உங்களை நிரூபித்த பின்... விளம்பரத்துறை, ஆவணப்படம், தொலைக்காட்சி தயாரிப்புகள் மற்றும் திரைத்துறையில் கால்பதிக்கலாம். அரசுத் துறையில் பணிவாய்ப்பு பெற... விஸ்காம், டி.எஃப்.டி போன்ற படிப்பை முடித்தவர்களே இயலும். ஆனாலும், இப்படிப்புகளை முடித்தவர்களைவிட... தனித்திறமை வளர்த்துக் கொண்டவர்களுக்கே தனியார் துறையில் வரவேற்பு அதிகம்.''