Published:Updated:

ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த சர்டிஃபிகேட்!

டீன்ஸ்

##~##

மாளவிகா மனோஜ்... சென்னை லயோலா கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு முடித்திருக்கும் இளம் பாடகி.

''இசை, என் வாழ்க்கையின் ஒரு பகுதி!'' என்று ரசித்து ஆரம்பிக்கிறார் பேச்சை. ''என் குடும் பத்துக்கு இசை புதுசு. ஆனாலும், அஞ்சு வயசுல நான் பியானோ வாசிச்சதைப் பார்த்து, எங்கிட்ட ஏதோ ஒரு இசைத் திறமை இருக்குனு உணர்ந்தவங்க... ரெண்டு வருஷம் கர்னாடிக் இசையும், ஒரு வருஷம் மேற்கத்திய இசையையும் படிக்க உறுதுணையா இருந்தாங்க... இன்னிக்கு வரை ஊக்குவிச்சிட்டும் இருக்காங்க. படிக்கிறபோதே நிறைய கவிதை போட்டிகள்ல கலந்துப்பேன். என்னோட 16-வது வயசுல அம்மாவுக்காக முதல் பாட்டை எழுதினேன். அதை அவங்களோட பிறந்த நாளன்னிக்கு படிச்சுக் காட்டினேன். அதில் இருந்து நானே எழுதிப் பாடிட்டு இருக்கேன். 'பேசின் பிரிட்ஜ்’ங்கற பேர்ல ஆரம்பிச்ச என்னோட மியூஸிக் பேண்ட் பாடல்களைக் கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் சார், 'நல்லா இருக்கு’னு ஃபேஸ்புக்ல சர்டிஃபிகேட் கொடுத்தது... மிகப்பெரிய சந்தோஷம்!

ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த சர்டிஃபிகேட்!

இசை மட்டும் இல்ல... படிப்பிலும் நான் சுட்டி. ஸ்கூல்ல ஆல் ரவுண்டர். அதனாலதான் 12-ம் வகுப்பு படிக்கும்போது அமெரிக்காவில் ஹார்வர்டு யுனிவர்சிட்டியில நடந்த 37 நாடுகள் பங்கேற்ற 'தலைவர்கள் உச்சி மாநாடு' (Leadership Summit) என்கிற நிகழ்ச்சிக்கு தேர்வாகி, அதுல கலந்துக்கிற வாய்ப்பும் கிடைச்சது. கல்வி முறை, மகளிர் முன்னேற்றம்னு உலகளவில் நான் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்ட பெரிய வாய்ப்பு அது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு’' என்று உற்சாகமாகப் பேசுபவர், சினிமாவில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த சர்டிஃபிகேட்!

''2011-லதான் சினிமாவில் முதல் வாய்ப்பு. '3' படத்தில் அனிருத் சார் இசையில் 'கமான் கேர்ள்ஸ்’ பாடினேன். 'ஹரிதாஸ்’ படத்தில் 'வாழ்க்கையே’ பாடல் எனக்கு நல்ல பேரை வாங்கித் தந்தது. 'கலியுகம்’ படத்தில் 'ஏடாகூடம்' பாடல் பாடியிருக்கேன். என்னோட தனி ஆல்பம் விரைவில் ரிலீஸ் ஆகப்போகுது. நானே எழுதி இசை அமைத்திருக்கும் ஆல்பம் அது. நல்ல ரிசல்ட் கிடைக்கணும்!’' என்று படபடப்போடு சொன்னவர்,

''என்னோட ஒவ்வொரு முயற்சியிலும் உறுதுணையா இருக்கும் குடும்பமும், ஒவ்வொரு முறை என் பாடல் வெளிவரும்போதும் அதை கொண்டாடும் ஃப்ரெண்ட்ஸும் எனக்கு கிடைச்ச வரம். வெளிநாட்டுக்குப் போய் மேற்படிப்பு படிக்கணும்கிறதுதான் லட்சியம். ஆனாலும், அப்பவும் எப்பவும் எனக்கு இசை வேணும். இசையில் என் தேடலும் வெற்றியும் தொடரும்!'' என்றார் அழகான புன்னகையுடன்!

- பி.என்.அர்ச்சனா,

படங்கள்: ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ்