Published:Updated:

ரெண்டு மாசத்துக்கு ஒரு ஜீன்ஸ்!

டீன்ஸ்

ரெண்டு மாசத்துக்கு ஒரு ஜீன்ஸ்!

டீன்ஸ்

Published:Updated:
##~##

விடுதி வாழ்க்கையோட இஷ்டங்கள், கஷ்டங்கள்... இதுதான் இந்த வாரம் 'டீன் டாக்’ டாபிக்!

சென்னை, எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த தேவி பாக்யா, கலைமதி, பிரத்யூஷா, க்ரிஸ்லின், ப்ரீத்தி, சுஷ்ருதா, சம்யுக்தா, கேத்ரீன் மற்றும் அமிர்தா ஆகியோர்தான் பங்கேற்பாளர்கள்!

''ஹாஸ்டல் லைஃப் மாதிரி மகிழ்ச்சியான, மகத்துவமான, பரிசுத்தமான வாழ்க்கை வேற எங்க கிடைக்கும் சபையோர்களே!''னு ஹாஸ்டல் ஆவிகளுக்கு அறிக்கைவிட்டு குத்துவிளக்கு ஏத்தி வெச்சாங்க க்ரிஸ்லின்.

ரெண்டு மாசத்துக்கு ஒரு ஜீன்ஸ்!

''எட்டு மணிக்கு காலேஜ்னா, ஏழே காலுக்குதான் அலாரம் அடிக்கும். எழுந்து கசங்கின கண்களோட கட்டில்ல உட்கார்ந்துட்டே உலகப் பொருளாதாரம், பூமி வெப்பமடைதல் போன்ற பிரச்னைகளை எல்லாம் தீர்க்க நாம என்ன பண்ணப் போறோம்னு யோசிச்சு முடிக்கறதுக்குள்ள... மணி ஏழே முக்கால் ஆகிடும். அப்புறம் குளிச்சு முடிச்சு, மேட்சிங்கா டிரெஸ் போட்டு, கண்ணாடி முன்னாடி கொஞ்ச நேரம் நின்னு, மெஸ்ல சாப்பிட்டு, ஒருவழியா எட்டு இருபதுக்கு கிளாஸ் வாசல்ல ஆஜர். சாருக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு, 'பாத்ரூம்ல தண்ணி வரல', 'மெஸ்ல சாப்பாடு வரல'னு ஏதாவது ஒரு சாக்கை சொல்லிட்டு... உள்ள போயிடுவோம். இப்படித்தான் தினமும் வண்டி ஓடிட்டு இருக்கு''னு ஒருவழியா முடிச்சு மூச்சுவிட்டார் சுஷ்ருதா.

''சரி, சாயங்காலம் அம்புட்டு நேரம் இருக்குமே... என்ன செய்வீங்க..?''னு கேட்டா,

''இதோ நான் சொல்றேன்!''னு கை தூக்கினாங்க ப்ரீத்தி.

''கிளாஸ் முடிஞ்சதும் நேரா ரூமுக்குப் போய் கதவை சாத்திட்டு, ஊதுபத்தி ஏத்திட்டு படிக்க உட்கார்ந்தா, உட்கார்ந்ததுதான். அப்புறம் எட்டு மணிக்கு சாப்பிடத்தான் எந்திரிப்போம்!'னு சொல்ல,

'அவ்வளவு நல்லவளா நீ?!’னு யாருக்கோ மைண்ட் வாய்ஸ்.

''அந்த போன் ஒயர் இன்னுமா பிய்யல''னு கேத்ரீன் குரல் கேட்டப்புறம்தான், அது 'லுல்லுல்லாயி’னு தெரிஞ்சுது.

ரெண்டு மாசத்துக்கு ஒரு ஜீன்ஸ்!

''மூன்றரை மணிக்கு கிளாஸ் முடிஞ்சதும் நேரா கேன்டீனுக்குப் போய் மொதல்ல ஜூஸ் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிச்சுப்போம் (லஞ்சுக்கு அப்புறம் ரெண்டு மணி நேரம் சாப்பிடாம இருந்தது உண்ணாவிரதமாம்!). அப்புறம் பானி பூரி அது இதுனு உள்ளே தள்ளுவோம். அப்பதானே தெம்பா கிரவுண்டுக்குப் போய் விளையாட முடியும்? ஸ்குவாஷ், வாலிபால்னு மெதுவா ஆரம்பிச்சு... பசங்களுக்கு இணையா மினி ஒலிம்பிக்ஸே நடக்கும்''னு சொல்ல வந்ததை சொல்லி முடிச்சார் ப்ரீத்தி.

''எங்க ஹாஸ்டல்ல இன்டர்நெட் கனெக்ஷன் இருக்கு, அதனால நடுராத்திரி வரைக்கும் ஃபேஸ்புக், கம்ப்யூட்டர் கேம்ஸ்னு ஒரே லூட்டிதான்'னு தேவி பாக்யா 'இன்று ஒரு தகவல்’ சொல்ல, 'இன்டர்நெட் எல்லாமா!’னு ஆச்சர்யம் நமக்கு.

''இதுக்கே இப்படியா? ஒரு காலத்துல (கி.மு 450?) எங்க ஹாஸ்டல்ல பியூட்டி பார்லரே இருந்துச்சு தெரியுமா? இப்ப ஏனோ மூடுவிழா நடத்திட்டாங்க''னு சோகமானார் கலைமதி.

சம்யுக்தா சீரியஸ் டோன்ல ஏதோ மெஸேஜ் சொல்ல முற்பட, மொத்த கேங்கும் அவர்கிட்ட குளோஸ்-அப்.

ரெண்டு மாசத்துக்கு ஒரு ஜீன்ஸ்!

''ஹாஸ்டல்வாசிகளுக்கு கிடைச்ச வரம், சாபம் ரெண்டுமே... ரூம்மேட்தான். எல்லா உதவியும் பண்ணுவாங்க. ஆனா, ஒருநாள் நாம ஆசை ஆசையா அயர்ன் செய்து வெச்சிருந்த டாப், பேன்ட்டை பயபுள்ளைங்க சொல்லாம கொள்ளாம எடுத்துப் போட்டுட்டுப் போயிருவாளுக. அப்ப வரும் பாருங்க ஒரு உணர்வுப் பெருக்கு... அதுக்குப் பேர்தான் கொலவெறி!''னு குமுறினார் சம்யுக்தா. ''ரொம்ப எகிறாத. ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை துவைக்கிற உன் ஜீன்ஸையே எடுத்துட்டுப் போட்டுட்டுப் போறாளே, அவ நிலைமைதான் ரொம்ப பாவம்''னு அமிர்தா காலை வாரிவிட... ஏரியா கலகல.

ஹாஸ்டல்னாலே வார்டன்னு ஒருத்தர் இருப்பாரே? அந்த ஜீவனை பத்தி சொல்லாம விடுவாங்களா..?!

''நம்ம தேவி பாக்யா பிறந்தநாள் அன்னிக்கு பார்ட்டி கொண்டாடினோமா, டைம் பார்க்க மறந்துட்டோம், ஒன்பதரை மணிக்குதான் 'ஐயோ வார்டன்!’னு மண்டையில மணியடிச்சுச்சு. சரி, லேட்டாதான் போகப் போறோம், எதுக்கு சீக்கிரமா லேட்டா போணும்னு (!)... இன்னும் கொஞ்ச நேரம் சுத்திட்டு, பத்தரை மணிக்கு சுவர் ஏறி உள்ளே குதிச்சா, அங்க அய்யனாரா நிக்கிறாரு வார்டன்! அப்புறம் என்ன, எங்களுக்கு அன்னிக்கு தீபாவளிதான்!'னு விட்டத்தைப் பார்த்து சிரிச்சாங்க பிரத்யூஷா.

''எப்பவும் சந்தோஷமா இருப்போம். என்னிக்காச்சும் படிப்போம். ஏதேதோ ஊர்ல இருந்து வந்து, ஒருத்தர் ஊர் பாஷையை இன்னொருத்தர் கிண்டல் பண்ணி, அப்புறம் கத்துக்குவோம். அப்பப்போ அப்பா, அம்மா ஞாபகம் வந்துட்டா மட்டும் கலங்கிடுவோம்...''னு  கேத்ரீன் க்ளைமாக்ஸ் சீரியஸ் காட்ட,

''அவளா நீ?!''னு அவரை அடிச்சுத் துரத்துச்சு கூட்டம்!

- வ.விஷ்ணு