Published:Updated:

‘சங்கர்ஷ்’... சாதிக்கும் சேவை உள்ளங்கள்!

அவள் டீன்ஸ்

‘சங்கர்ஷ்’... சாதிக்கும் சேவை உள்ளங்கள்!

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

டிக்கும் காலத்திலேயே சேவைகளில் ஈடுபடும் மாணவர்கள் பற்றி, இன்று பல திசைகளில் இருந்தும் செய்திகள் வந்துகொண்டே இருப்பது... பாராட்டப்பட வேண்டிய விஷயம். அந்த வரிசையில் ஒன்றுதான்... 'சங்கர்ஷ்’ (Sangarsh)  இசைக்குழு! சென்னை, அண்ணா பல்கலைக்கழக, கிண்டி பொறியியல் கல்லூரியின் மாணவர்களின் இசைக்குழு இது. இதன் மூலமாக இசை நிகழ்ச்சிகளை நடத்தி, திரளும் நிதியை வைத்து மற்றவர்களின் கஷ்டங்களை போக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

அமைப்பின் செயல்பாடுகள் பற்றி ஆர்வமாகப் பேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கீர்த்தி, ''எங்கள் கல்லூரியில் 'ரோட்ராக்ட் கிளப் ஆஃப் சிஇஜி' (Rotract Club of CEG) என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த எங்கள் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சேர்ந்து, தங்கள் உடன் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான உதவிகள் செய்வதற்கு நிதி திரட்ட முடிவு செய்தனர். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் 'சங்கர்ஷ்’ குழு. இது முழுக்க முழுக்க எங்கள் கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்படும் இசைக் குழு. சீனியர்கள் ஆரம்பித்ததை... ஜூனியர்கள் தொடர் ஓட்டம்போல தொடர்கிறோம்.

‘சங்கர்ஷ்’... சாதிக்கும் சேவை உள்ளங்கள்!

'சங்கர்ஷ்’ என்றால் 'போராடு’ என்று அர்த்தம். இதை, சமூக நலனுக்காக மாணவர்கள் கைகோத்து நடத்தும் ஒரு போராட்டம் என்றே சொல்லலாம். கல்லூரி அளவிலான உதவிகள் என்கிற 'சங்கர்ஷ்’-ன் நோக்கம், இந்த 10 ஆண்டுகளில், மெள்ள வளர்ந்து... சமூகத்துக்கான சேவைகளாக விரிந்துள்ளது. 2011-ம் ஆண்டு கமல்ஹாசனும், 2012-ம் ஆண்டு ஏ.ஆர். ரஹ்மானும் 'சங்கர்ஷ்’ இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முன்வந்து ஊக்குவித்ததை, எங்களுக்கான பெருமையான அங்கீகாரமாக நினைக்கிறோம்'' என்றார் பெருமிதத்துடன்.

இந்த 10 ஆண்டுகளில் 'சங்கர்ஷ்’ செய்துள்ள சேவைகள் ஏராளம். அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு பண உதவி, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் குடியிருப்புகள் கட்டித் தருவது, பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை ஆடியோ கேசட்டில் பதிந்து கொடுப்பது, போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உதவிகள்... இப்படி இவர்களின் சேவைக் கரம் ஒவ்வொரு ஆண்டும் நீண்டுகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் 2013-ம் ஆண்டுக்காக 'சங்கர்ஷ்’ எடுத்துக்கொண்ட புராஜெக்ட், 'தலசீமியா' எனும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உதவி.

ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான மூன்றாம் ஆண்டு மாணவர் பிரவீன் அதைப் பற்றி கூறும்போது, ''தலசீமியா என்பது ரத்தக் குறைபாடு நோய். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகாது. மாதம் ஒரு முறை உடலில் ரத்தத்தை மாற்றிக்கொள்வது மட்டுமே இவர்கள் உயிர் வாழ்வதற்கான ஒரே வழி. ஆசியாவில் மட்டும் இந்த நோயால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதைப் பற்றிய விழிப்பு உணர்வு நம் நாட்டில் குறைவாகவே உள்ளது.

‘சங்கர்ஷ்’... சாதிக்கும் சேவை உள்ளங்கள்!

இந்த ஆண்டு 'சங்கர்ஷ்’ மூலம் 'தலசீமியா' பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவெடுத்தோம். திரட்டிய பணத்தை, 'தலசீமியா நல சங்கம்' மூலமாக, மதுரையைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓராண்டுக்கான ரத்த மாற்று சிகிச்சைக்கு உதவினோம்'' என்று சொன்னார் தெம்பாக!

‘சங்கர்ஷ்’... சாதிக்கும் சேவை உள்ளங்கள்!

தொடர்ந்த கீர்த்தி, ''இந்த வருடம் நடந்த இசை நிகழ்ச்சியில் 'கடல்’ படத்தில் 'நெஞ்சுக்குள்ளே’ பாடலைப் பாடிய சக்திஸ்ரீ கோபாலன் , 'இரும்பிலே ஒரு இருதயம்’ பாடிய காஷ் என் கிருஷ்ஷி, ரஞ்சித், அஜிஸ் என்று பல பிரபல பாடகர்கள் பாடினார்கள். இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு இந்த சேவையில் பலமாக இருந்துவரும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். 'விழித்திரு’ என்கிற பெயரிலும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நாங்கள், அதன் மூலம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வழிகாட்டலுக்கும் உதவிக் கொண்டிருக்கிறோம்'' என்றவர்,

''மற்றவர்களுக்கு உதவும் ஆர்வமும் அக்கறையும் மாணவர்கள் பலரிடமும் இருக் கிறது. ஆனால் அவர்களை வழிநடத்தத்தான் ஆள் இல்லை. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை எங்கள் சீனியர்கள் வழிகாட்ட, இப்போது ஜூனியர்களுக்கு நாங்கள் வழிகாட்டியாக நிற்கிறோம்!'' என்றார் கீர்த்தி நிறைவாக.

- பி.செ.விஷ்ணு    படங்கள்:த.ரூபேந்தர்