Published:Updated:

ஸ்வீட்டி... விருதுகளைக் குவிக்கும் விமானப் பெண்!

ஸ்வீட்டி... விருதுகளைக் குவிக்கும் விமானப் பெண்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''மனுஷன் நிலவில் காலடி எடுத்து வெச்சப்போதான், நம்ம நாட்டுல அநேக பெண்கள்... வீட்டு வாசலிலேயே காலடி எடுத்து வைக்க ஆரம்பிச்சாங்க''

- தமிழ்த் திரைப்படம் ஒன்றில் வரும் வசனம் இது. ஆனால், இன்று விண்வெளி அறிவியலிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள் நம் பெண்கள். அதில் ஒருவர்தான், ஸ்வீட்டி பாடே. சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் நான்காம் ஆண்டு மாணவி. உலக அளவில் விண்வெளி சம்பந்தமான போட்டிகளில் கலக்கும் இளம் நட்சத்திரம்!  

ஸ்வீட்டி... விருதுகளைக் குவிக்கும் விமானப் பெண்!

மகாராஷ்டிரா பெண்ணான ஸ்வீட்டி பாடே, மென் குரலில் பேசினார். ''ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்து வியக்கும் சிறுமிகளில் ஒருத்தியாக இருந்த எனக்கு, அந்த ஆச்சர்யம் அத்துடன் அடங்கிவிடவில்லை. பள்ளியில் படிக்கும்போதே ரிமோட்டில் பறக்கும் சின்னச் சின்ன விமானங்கள் செய்தேன். வீட்டில் உற்சாகப்படுத்தவே... அது லட்சியமாக வளர்ந்தது. விளைவு, கல்லூரியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்'' எனும் ஸ்வீட்டி, 'சுற்றுச்சூழலைப் பாதிக்காத பசுமை வான்வழி போக்குவரத்து' குறித்து உலக அளவில் 'நாசா' நடத்தும் போட்டியில் (Green Aviation) கடந்த இரண்டு வருடங்களாக பரிசுகள் பெற்றுள்ளார்.

''2011-ம் ஆண்டு 'நாசா' நடத்திய போட்டியில் 'செரா' (SERA-SRM Environmentally Responsible Airliner) என்று பெயரிடப்பட்ட எங்களின் விமான செய்முறைத் திட்டம், அயல் நாட்டுப் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றது. டால்பின் வடிவில் வடிவமைக்கப்பட்ட எங்கள் விமானம், தற்போதுள்ள விமானங்களைக் காட்டிலும் செயல்திறன் மிக்க, அதிக எரிபொருள் திறன்மிக்கதாக சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டது. 200 பேர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்துக்கு குறைந்தபட்ச ஓடுதளமே போதுமானது.

2012-ம் ஆண்டு எங்களின் 'செரா கருடா-2.0' (SERA GARUDA- 2.0) அயல் நாட்டுப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இது  பல்வேறு சிறப்பம்சங்களோடு, விமானத்தை கையாளும்போது ஏற்படும் செலவுகளையும் குறைக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டது'' என்று தொழில்நுட்பமும் பேசும் ஸ்வீட்டி, 'அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அஸ்ட்ரோனாடிக்ஸ் ஃபவுண்டேஷன்' (AIAA - USA) நடத்திய விண்வெளி விமான வடிவமைப்பு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

''விண்வெளிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் 'நவசிட்ஜிவாஹா' (Navshitijvahak) என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட விமானம், என் தலைமையில்

ஸ்வீட்டி... விருதுகளைக் குவிக்கும் விமானப் பெண்!

சமர்ப்பிக்கப்பட்டது. உலகெங்கும் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 300 வடிவமைப்புகளில், எங்களின் விமானம் மூன்றாம் இடத்தை வென்று, பெருமை சேர்த்திருக்கிறது!'' என்று கண்களும் சிரிக்க பேசும் ஸ்வீட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தின் 'சானே குருஜி இளம் விஞ்ஞானி’. ஐ.சி.ஓ.என் ஃபவுண்டேஷன் வழங்கிய 'தேஜஸ்வினி' ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார்.

''விமானம் தொடர்பான என்னுடைய ஆய்வு அறிக்கைகள், ஃபிரான்ஸில் நடைபெற்ற இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் அண்ட் மெக்கானிக்கல் கான்ஃபரன்ஸில் தேர்வாகி, காப்புரிமையும் பெற்றிருக்கிறேன். தற்போது ஜெர்மன் ஏரோஸ்பேஸ் சென்டரில் அவர்களின் புதிய ஏர்கிராஃப்ட் புராஜெக்ட்டில் இணைந்து பணியாற்ற அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், என் எதிர்கால லட்சியம், நம் இந்தியாவின் 'இஸ்ரோ’வில் பணியாற்றுவதுதான்!'' எனும் ஸ்வீட்டி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 'மிஷன் 2020’ திட்டம் குறித்து பள்ளி, கல்லூரிகளில் சொற்பொழிவுகள் நடத்தி, வளர்ந்து வரும் பாரதத்தை வல்லரசாக்க தன்னாலான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.  

வாழ்த்துக்கள்!

- பி.செ.விஷ்ணு   , படம்: த.ரூபேந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு