Published:Updated:

படிப்பு மட்டுமல்ல... சேவையும்!

சாதிக்கும் ‘சைஃப்’ மாணவர்கள்

படிப்பு மட்டுமல்ல... சேவையும்!

சாதிக்கும் ‘சைஃப்’ மாணவர்கள்

Published:Updated:
##~##

''பொறியியல் கல்லூரி மாண வர்கள் பெரும்பாலும் படிப்பு... படிப்பு என்றே இருப்பார்கள். நாங்கள்  அதனுடன் கூட சேவையிலும் ஆர்வத்தோடு இருந்தோம். எங்கள் கல்லூரியில் உள்ள 'சைஃப்’ (SIFE-Students In Free Enterprise) அமைப்பு மூலமாக வறுமையில் இருப்பவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை வகுத்து, அந்த சேவையையே புராஜெக்ட்டாக செய்தோம். அதற்கான பாராட்டாக தேசிய அளவில் இரண்டாம் இடத்தை வென்றிருக்கிறோம்!'' - உற்சாகத்துடன் சொல்கிறார்கள், சென்னை, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

''சைஃப் என்பது உலகளவில் செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம். இது பல்கலைக்கழகம், கல்லூரிகளில் ஓர் அமைப்பாக செயல்பட்டு, ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வழிகளை  கற்றுக்கொடுக்கும் திட்டங்களை, எங்களைப் போன்ற மாணவர்கள் மூலமாக மேற்கொள்ளச் செய்யும். அதில் சிறந்த திட்டங்களுக்கு வட்டார, தேசிய, சர்வதேச அளவில் பரிசுகள் வழங்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2009-ம் ஆண்டு முதல் எங்கள் கல்லூரியில் 'சைஃப்’ செயல்பட்டு வருகிறது. வறுமையில் வாடும் மக்களுக்கு ஏதாவது ஒரு தொழில் மூலமாக வழிகாட்டும் முயற்சியை, எங்கள் கல்லூரி மாணவர்கள் செய்துவருகிறோம். அந்த வகையில் சென்ற ஆண்டு படிப்பறிவற்ற ஏழைப் பெண்களை சுயதொழில் மூலம் வருவாய் பார்க்க வைக்கும் 'ஆயுர்ரேகா புராஜெக்ட்'டை கையில் எடுத்தோம். 'ஆயுர் ரேகா’ என்றால் நீண்ட ஆயுள் என்று பொருள். நாங்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்கள் வாழ்க்கை முழுவதும் பயன்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தப் பெயரை வைத்தோம்.

படிப்பு மட்டுமல்ல... சேவையும்!

இந்தத் திட்டத்தில் இணைப்பதற்காக, வேளச்சேரியில் பெண்கள் சிலரை சந்தித்துப் பேசினோம். 'காலேஜு பொண்ணுங்க வந்து ஏதோ பேசுறாங்க’ என்று பலருக்கும் எங்கள் மேல் நம்பிக்கை இல்லை என்றாலும், தொடர்ந்து பேசி புரியவைத்ததில், சிலர் தன்னம்பிக்கையோடு கைகோத்தார்கள். அவர்களுக்கு, 'டயட்டீஷியன்' பிரபா மூலமாக, வாரத்தில் மூன்று நாட்கள் சுயதொழில் பயிற்சியளித்தோம். குறிப்பாக, பாரம்பரிய உணவுகள் உற்பத்தி மற்றும் விற்பனையைக் கற்றுக் கொடுத்தோம்'' என்று நான்காம் ஆண்டு 'பயோ டெக்னாலஜி' மாணவி நிவேதிதா நிறுத்த...

படிப்பு மட்டுமல்ல... சேவையும்!

தொடர்ந்தார் இறுதி ஆண்டு 'இ.சி.இ' மாணவி ஆரண்யா. ''கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நாங்கள் அளித்த பயிற்சியில், அவர்கள் வாரத்துக்கு 3,000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுமளவுக்கு தொழில் கற்றனர். மேலும் நாங்கள் அவர்களுடைய தயாரிப்புகளைக் கொண்டு எங்கள் கல்லூரியில் மூன்று நாட்கள் 'சைஃப் மேளா’ என்கிற பெயரில் கடைகள் அமைத்து விற்பனை செய்தோம். அதற்கு கிடைத்த வரவேற்பு, அவர்களுக்கு மேலும் தெம்பு கொடுத்தது. அவர்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே சுயதொழில் மூலம் மாதம் மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்கள்'' என்றார் ஆரண்யா, மகிழ்ச்சியுடன்.

மேலும் இந்த 'சைஃப் மேளா’வில் ஆதரவற்ற குழந்தைகள் வரைந்த ஓவியம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை தயாரித்து விற்பனை செய்து,  கிடைத்த தொகையின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோர் இல்லங்களுக்கும்  உதவி செய்திருக்கிறார்கள். தங்கள் கல்லூரியில் காபி ஷாப், ஜெராக்ஸ் கடை போன்றவற்றை 'சைஃப்’ மூலமாகவே நடத்தி, கிடைக்கும் பணத்தையும் சேவைக்காக பயன்படுத்துகின்றனர்.

கல்லூரியின் 'சைஃப்’ ஒருங்கிணைப் பாளர் சுந்தர், ''இந்தியா முழுக்க உள்ள கல்லூரிகள், தாங்கள் செயல்படுத்திய 'சைஃப்’ புராஜெக்ட்களுக்கான கருத்தரங்கு மற்றும் போட்டியை 'சைஃப்’ அமைப்பு மும்பையில் நடத்தியது. இதில் 51 கல்லூரிகள் கலந்துகொண்டன. தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட நான்கு கல்லூரிகளில் நாங்கள் மட்டுமே பொறியியல் கல்லூரி. எங்களுக்கு தேசிய அளவில் இரண்டாவது இடம் கிடைத்தது. சிறப்பு செய்தியாக, எங்கள் கல்லூரி மாணவி பிரியா 'சிறந்த சேவை மாணவி’யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்காவில் நடைபெற்ற உலகளவிலான 'சைஃப்’ கருத்தரங்கில் இந்தியா சார்பாக கலந்து கொண்டார்!'' என்றார் பெருமையுடன்.

கல்லூரி தாளாளர் தங்கம், ''இந்த மாணவர்களின் சாதனை இனி வரும் மாணவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும். ஜூனியர் மாணவர்களிடமும் இந்த சேவை பண்பு தொடர்ந்து மலர, 'சைஃப்’ புராஜெக்ட்டுக்கான எல்லா தேவைகளையும் கல்லூரி நிர்வாகம் செய்துகொடுக்கும்'' என்றார் பொறுப்புடன்!

தொடரட்டும் இந்தத் தொண்டு!

- சா.வடிவரசு, படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism