Published:Updated:

விடுதிச் சாப்பாட்டு இம்சை... விடை கொடுக்கும் இயற்கை!

விடுதிச் சாப்பாட்டு இம்சை... விடை கொடுக்கும் இயற்கை!

விடுதிச் சாப்பாட்டு இம்சை... விடை கொடுக்கும் இயற்கை!

விடுதிச் சாப்பாட்டு இம்சை... விடை கொடுக்கும் இயற்கை!

Published:Updated:
##~##

''வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வரையிலும், உணவு விஷயத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. கல்லூரி படிப்புக்காக ஹாஸ்டலில் சேர்ந்ததிலிருந்து... அங்குள்ள உணவுகள், அலர்ஜியைத் தருகின்றன. பல வேளைகளில் சரியாக சாப்பிடாமலும்... பட்டினி கிடந்தும் சமாளிக்கிறேன். பக்கவிளைவுகளற்ற, இயற்கையான முறையில் புதிய இடத்து உணவுச் சூழலுக்கு உடலை தயார் செய்ய வழிமுறைகள் இருக்கின்றனவா?''

- மோ.அஷ்வினி, சிதம்பரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் சி.சுகுமார், அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவர், பஞ்சப்பட்டி (கரூர்):

''பணி மற்றும் படிப்பு நிமித்தம் புதிய சூழலுக்கு ஆட்படுபவர்களுக்கு பல உபத்திரவங்கள் வருவது வழக்கமானதுதான். இதில் முதலிடம் பிடிப்பது, உணவு. அதிலும் நீண்டகாலமாக வீட்டு உணவையே ருசித்துப் பழகியவர்களுக்கு புதிய இடத்தில் செய்யப்படும் பொது சமையல் அலர்ஜியைத் தரவே செய்யும். சுவையூட்டிகள், மசாலாக்கள் என செயற்கை மற்றும் வேதிப்பொருட்களின் சேர்ப்பு இந்த அலர்ஜிக்கு அடிப்படை. சகித்துக் கொண்டு கட்டாயமாகச்

விடுதிச் சாப்பாட்டு இம்சை... விடை கொடுக்கும் இயற்கை!

சாப்பிடுவது உடல், மன எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, அன்றாட வாழ்க்கையின் போக்கையே புரட்டிவிடும். எரிச்சல், மன அழுத்தம், மலச்சிக்கல், செரியாமை, சாப்பிட்ட திருப்தியே இல்லாதது என ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத பல கலவையான பிரச்னைகள் உருவாகி, உங்களின் அன்றாட பணிகளில் கவனம் செலுத்தவிடாமல் செய்யும்.

இயற்கை மருத்துவ வழியில் உங்களுக்கு சில ஆலோசனைகளைத் தருகிறேன்... பின்பற்றிப் பாருங்கள். அதன் பிறகு உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் உணவு, உங்களுக்கு இடைஞ்சலாக இருக்காது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அரை லிட்டர் அளவுக்கேனும் நீர். ஒரேயடியாக குடிக்க முடியாவிட்டால்... கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி, நாளடைவில் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். காபி, டீக்கு பதிலாக வில்வம் அல்லது மாதுளை ஜூஸ் ஒரு டம்ளர் அருந்தலாம். இந்தப் பொருட்கள் 'ஸ்குவாஷ்’ ஆக கடைகளில் கிடைக்கின்றன.

'வெட்பேக்' (Wet Pack) எனப்படும் ஈரப்பட்டியை காலை, மாலையில் 20 நிமிடங்களுக்கு அடிவயிற்றில் அணிந்திருக்க வேண்டும். காதி/கதர் கடைகளில் 'காட்டன் காடாத்துணி' என்கிற பெயரில் விற்கப்படும் துணியை குறிப்பிட்ட நீளத்துக்கு வாங்கி, தண்ணீரில் நனைத்து அடிவயிற்றில் கட்டிக்கொண்டு சற்று ஓய்விலிருந்தால் போதும். நேரம் கிடைத்தால் மாலையிலும் ஈரப்பட்டி அணியலாம். வயிற்றின் செரிமானத்திறனை சீரமைத்து, குடல் அவயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு... பக்கவிளைவுகளற்ற சிறப்பான பயிற்சிதான் இந்த ஈரப்பட்டி.

விடுதிச் சாப்பாட்டு இம்சை... விடை கொடுக்கும் இயற்கை!

காலை உணவில் சிறு பங்கை குறைத்துக்கொண்டு, அதற்கு ஈடாக சீஸன் பழங்களை சாப்பிட வேண்டும். ஏதேனும் ஒரு பழம் என்பதாக இல்லாமல், ஒன்றிரண்டு பழங்களின் கலவையாகக்கூட இருக்கலாம். ஆறிய வெந்நீரில் சிறிது தேன் கலந்து அருந்தலாம். இது செரிமானத்துக்காக குடல் உறிஞ்சிகளை மலர்த்தி வைக்கும்.

மதிய உணவில் சாம்பார், ரசம், மோர் இவற்றுடன்... கூட்டு, கீரை, வேக வைத்த காய்கறிகளைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் உணவு ஒவ்வாமை சரியாகும் வரை, உணவில் புளிக்குழம்பு, அசைவம் தவிர்ப்பது நல்லது. மாலை ஆறு மணியளவில் ஒரு முறை வெட்பேக் அணிந்ததும்... ஏதேனும் ஒரு பழச்சாறு, இளநீர், மோர் இவற்றில் ஒன்றை ஒரு டம்ளர் அருந்துங்கள். இரவு உணவில் சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் இவை ஓ.கே. நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் மற்றும் மைதா ரகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. உறங்குவதற்கு முன் வாழை, கொய்யா, மாதுளை, கறுப்பு திராட்சை, பப்பாளி ஏதேனும் ஒன்றை சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். தவிர்க்க முடியாது ஹாஸ்டல் உணவை உண்ணும்போது, அவஸ்தை உண்டானால்... அடுத்த நாளில் உணவு எடுத்துக் கொள்ளும் அளவைக் குறைத்து, வயிறு அதன் இயல்பான சூழலுக்கு வர உதவலாம்.

அன்றாடம் மூன்று முதல் நாலரை லிட்டர் குடிநீர் அருந்துதல்; தினமும் ஒரு வேளையேனும் சமைக்காத உணவாக, பழம், காய்களை உட்கொள்தல்; தினமும் அரை மணி நேர நடைபயிற்சி, யோகா/தியானம்/ஆன்மிக நடவடிக்கையில் ஈடுபடுதல்; இரவில் எட்டு மணி நேரத் தூக்கம்; வாரம் ஒருநாள் நீராகார உதவியுடன் உபவாசம்... என்று உடலின் சீரான ஜீரண செயல்பாட்டுக்கு, இந்த ஐந்து கட்டளைகளை எப்போதும் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் சற்று சலிப்பாக இருந்தாலும்... பழகிக்கொண்டால், ஏனைய வாழ்நாளுக்கும் அதை கைவிடவே மாட்டீர்கள்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism