Published:Updated:

வறளும் சருமம்... தோல் உதிரும் நெற்றி... கறுக்கும் முகம்!

தீர்வுகள் என்ன?

வறளும் சருமம்... தோல் உதிரும் நெற்றி... கறுக்கும் முகம்!

தீர்வுகள் என்ன?

Published:Updated:
##~##

''கல்லூரி மாணவியான எனக்கு, கடந்த ஒரு வருடமாகவே தலைமுடி மற்றும் சருமம் வறண்டு போயிருக்கிறது. முன் தலை மற்றும் நெற்றியில் செதில் செதிலாக தோல் உதிர்வதும் நடக்கிறது. நான் மாநிறம் என்றபோதும், வெயில் படக்கூடிய இதர உடல் பாகங்களைவிட, முகம் மட்டும் அதிக கறுமையுடன் இருக்கிறது. ஏறி இறங்காத அழகு நிலையங்கள் இல்லை... உபயோகிக்காத லோஷன்கள், க்ரீம்கள் இல்லை. எனது பிரச்னை தீர வழி கிடைக்குமா?''

- வி.சுஜாதா, சென்னை

டாக்டர் ஏ.பாலசுப்ரமணி, சருமநோய் சிறப்பு மருத்துவர், திருச்சி:

''தைராய்டு சுரப்பு, இயல்பான அளவைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும்போது இம்மாதிரியான வறட்சி, அரிப்பு, உதிர்தல் உள்ளிட்ட சரும பாதிப்புகள் எட்டிப் பார்க்கும். தைராய்டு கோளாறு, மாதாந்திர சுழற்சியை சீர்குலைக்கவும் செய்யும். அதன் தொடர் பாதிப்பாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு பாதிப்புக்குள்ளாகி, முடி உதிர்வும் ஏற்படும். எனவே, உங்களுடைய குடும்ப மருத்துவர் அல்லது பொது மருத்துவரை சந்தித்து, தைராய்டு பரிசோதனைக்கு பரிந்துரை பெறுங்கள்.

வறளும் சருமம்...  தோல் உதிரும் நெற்றி... கறுக்கும் முகம்!

தைராய்டு தொந்தரவு இல்லையெனில், தோல் வறட்சிக்கான மற்றொரு பரவலான காரணமாக வம்சாவளியை அடையாளம் காணலாம். பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டிக்கு ஆஸ்துமா உண்டெனில்... உங்களுக்கு தோல் வறண்டு போக அதிகம் வாய்ப்பிருக்கிறது. அடுத்த காரணம், சீதோஷ்ணம். குளிர் காலத்தில் சருமம் வறண்டு போவது இயல்பு. ஆனால், கோடையை எதிர்கொள்கிறேன் பேர்வழியென சிலர் சதா ஏ.சி. அறையே கதியாக கிடப்பார்கள். அந்த வகையில் இவர்களது சருமமும் அதிக வறட்சி காணும்.

எந்தக் கால நிலையிலும் உடலின் நீர்ச்சத்து குறையாமலிருக்க... போதிய நீர் அருந்துவதோடு, நீர்ச்சத்து அதிகமுள்ள ஆகாரங்கள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் பழங்கள், சமையல் பதார்த்தங்கள் என வரிந்துகொண்டு முகத்தில் பூசிவருவார்கள். ஆனால், உணவில் அவற்றை ஒதுக்கிவிடுவார்கள். முகத்தில் பூசுவதைவிட மேற்படி பழங்கள் மற்றும் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டால், பொலிவு உள்ளிருந்து பூத்து வெளிப்பட ஆரம்பிக்கும். நீடித்திருக்கவும் செய்யும்.

வறளும் சருமம்...  தோல் உதிரும் நெற்றி... கறுக்கும் முகம்!

மார்க்கெட்டில் அறிமுகமாகும் காஸ்மெடிக் பொருள் எதுவானாலும், தங்கள் சருமத்தில் பரிசோதனை முயற்சியை துவங்கும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள். சருமம் என்பது மிகவும் தனித்துவமானது. அதற்கு உகந்த பொருட்களை மட்டுமே ஆராய்ந்து அறிந்து உபயோகிக்க வேண்டும். குளிக்கும் சோப்புக்கும் சரும பாதுகாப்பில் முக்கிய இடம் உண்டு. கடினமான சோப்புகளை தவிர்த்தல் நலம். டி.எஃப்.எம் (TFM -Total Fatty Matter) அளவு 75%, அல்லது அதற்கு அதிகமாக உள்ள சோப்புகளே உங்களது சருமத்துக்கு அத்தியாவசியமான எண்ணெய் மற்றும் ஈரத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள உதவும்.

உங்களது அடுத்த சரும உபத்திரவமான செதில் செதிலாக உதிரும் பிரச்னைக்கு 'இச்தியோசிஸ்' (Ichthyosis) என்கிற பரம்பரை காரணத்துக்கு அதிக பங்குண்டு. மற்றொரு பரவலான காரணம், 'செபோரிக் டெர்மடைடிஸ்’ (Seborrheic Dermatitis) எனப்படும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று. நாளடைவில் தலை, நெற்றி மட்டுமல்லாது புருவம் அருகிலும், காது பின்புறம், மூக்கு ஓரம், தாடை, மார்பு என தோல் சிறிது சிறிதாக உதிர்வது காணப்படும். இந்த இரண்டு பாதிப்புகளுக்கும் சரும நிபுணரின் உதவியோடுதான் தீர்வு கண்டாக வேண்டும்.

வறளும் சருமம்...  தோல் உதிரும் நெற்றி... கறுக்கும் முகம்!

முகம் மட்டும் கறுத்தலுக்கு, வறள் சருமத்துக்குக் காரணமாக மேலே குறிப்பிட்ட வரைமுறையற்ற அதிகப்படியான அழகு சாதனப் பொருள் உபயோகமே பிரதான காரணம். அதிகப்படியான சூரிய ஒளியோடு, மாசடைந்த சூழலில் புழங்குவதும் முகம் போன்ற சரும பிராந்தியங்களை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும். ஹேர் டை மட்டுமல்ல, ஹேர் கலரிங் என்ற பெயரில் யுவதிகள் மேற்கொள்ளும் கேச சாய முயற்சியும், முகத்தில் கருமை படர வழி செய்யும். உங்கள் கேச நிறத்தை மாற்றுவதற்கு மருதாணி போன்ற இயற்கை வழிகளே நல்லது. முகத்தின் பொலிவை மீட்பதற்காக இரவில் பூசுவதற்கான க்ரீம்கள் பரிந்துரை பெற்றவர்களில் சிலர், ஆர்வக்கோளாறோடு விரைவான நிவாரணம் என்கிற நினைப்பில் பகலிலும் அதை பூசிக்கொண்டு நடமாடுவார்கள். இப்படிச் செய்வது, சூரிய ஒளியோடு அந்த க்ரீம் வினைபுரிந்து, முதலுக்கே மோசமாக வாய்ப்பிருக்கிறது.

ஆக, தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு, தேவையெனில் மேற்சிகிச்சை பெறுங்கள். உரிய மருத்துவ ஆலோசனையோடு வெளிக்கு பூசுவதைவிட, உள்ளுக்கு உருப்படியாக சாப்பிடும் வழக்கத் துக்கு மாறுங்கள். அழகு சாதன பூச்சு உபயோகத்தில் ஒரு ஒழுங்கை கொண்டு வாருங்கள். இந்த முயற்சிகள் நிச்சயம் உங்கள் பிரச்னைக்கு தீர்வு தரும்.''