Published:Updated:

ஹய் டோரா பொண்ணு!

டீன்ஸ்

ஹய் டோரா பொண்ணு!

டீன்ஸ்

Published:Updated:
##~##

''ஹாய் ஃப்ரெண்ட்ஸ்! என் பேரு டோரா. இன்னிக்கு நாம எங்க போகப் போறோம் தெரியுமா..?''

- இப்படி நம்ம வீட்டு வாண்டுகளை எல்லாம் சுட்டி டி.வி-யின் 'டோரா’ கார்ட்டூன் முன்பு ஆஜராக வைக்கும் மழலைக் குரலுக்கு சொந்தக்காரர்... சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, விஸ்காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் யாமினிபிரியா.

பின்னணி குரல் மட்டுமல்லாமல் நடனம், நிகழ்ச்சித் தொகுப்பு, நடிப்பு, படிப்பு என அனைத்திலும் அசத்தும் இவர், புகழ்பெற்ற வயலின் ஆர்ட்டிஸ்ட் மற்றும் 'சினி மியூஸிஷியன் யூனியன்’ தலைவர் கல்யாணின் பேத்தி.

''எங்க தாத்தாவோட திறமைக்கு எல்லாரும் மதிப்பு தர்றதைப் பார்த்து, எனக்கும் கலைத்துறையில் ஆர்வம் வந்துச்சு. என் உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கமெல்லாம் கவனிச்ச அம்மா, என்னை டப்பிங் ஆர்ட்டிஸ்டா உருவாக்கிப் பார்க்க ஆசைப்பட்டாங்க. சில்க் ஸ்மிதா, ராதா, அம்பிகா போன்றவங்களுக்கெல்லாம் வாய்ஸ் கொடுத்த ஹேமமாலினி மேடம்கிட்ட, ரெண்டாவது படிக்கும்போதே பயிற்சிக்காக சேர்த்துவிட்டாங்க. சில மாதங்களிலேயே கார்ட்டூனில் பேசும் வாய்ப்பை உருவாக்கித் தந்தாங்க மேடம். என்னோட மழலைக் குரலுக்கு விளம்பரம், சீரியல், சினிமானு வாய்ப்புகள் விரிஞ்சுது. பிந்து அப்பளம், ஹமாம், கிளினிக் ப்ளஸ், கோல்ட் வின்னர் ஆயில், சேலஞ் டிடர்ஜென்ட் போன்ற விளம்பரங்களும், 'சிவன்’, 'பிரளயம்’, 'ராஜராஜேஸ்வரி’, 'வேப்பிலைக்காரி’, 'மை டியர் பூதம்’, 'சூர்யபுத்ரி’னு நிறைய டெலி சீரியல்களும் என்னை பிஸியான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக்குச்சு.

ஹய் டோரா பொண்ணு!

எல்லாத்தையும்விட, கார்ட்டூன் சீரியல்களுக்கு நான் 'டப்’ பண்ணினதுதான் என்னோட குரலை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு போய் சேர்த்தது. 'டோரா த எக்ஸ்ப்ளோரர்', 'சோட்டா பீம்', 'ஹைடி', 'போக்கிமேன்', 'லூனி டூன்ஸ்', 'ஷின்ஷான்', 'மேஜிக் ஒண்டர் லேண்ட்' இப்படி பல கார்ட்டூன் சீரியல்கள்லயும் பேசிப் பேசி, இன்னும் நான் சுட்டியாவே இருக்கற மாதிரி உணர்வு. கூடவே, 'அக்கா... அக்கா’னு எனக்கு பெரிய வாண்டு கூட்ட ஃப்ரெண்ட்ஸ், ஃபேன்ஸ் இருக்காங்க.

ஹய் டோரா பொண்ணு!

ஒரு தடவை ஹாஸ்பிட்டலுக்கு போயிருந்தப்போ, அங்க ஒரு குழந்தை ஊசி போட்டுக்க அழுது அடம் பண்ணிட்டு இருந்தது. உடனே நான் 'டோரா’ வாய்ஸ்ல பேசி அதை குஷியாக்க, அந்தக் குழந்தை சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே ஊசி போட்டுக்கிட்டா!'' என்று தானும் குழந்தையாகச் சிரிக்கும் யாமினிபிரியா, இதுவரை 70-க்கும் மேற்பட்ட கார்ட்டூன்கள், திரைப்படங்கள், தொடர்கள், விளம்பரங்களில் 'டப்’ செய்திருப்பதோடு, கலா மாஸ்டரிடம் டான்ஸ் கற்றுக்கொண்டு கலைஞர் டி.வி-யின் 'ஆட்டம் பாட்டம்’ முதல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் பங்களித்துள்ளார். டெலி சீரியல் விருது, பெஸ்ட் சைல்ட் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு, ரியாலிட்டி ஷோவை இயக்குவதும், சினிமா பட நிறுவனத்தை உண்டாக்கி, அதில் நிறைய கலைஞர்களை உருவாக்குவதும் கனவு.

''என் போட்டோவை பார்த்து, 'இந்தப் பொண்ண எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...’னு இவ்வளவு நேரமா யோசிச்சுட்டு இருந்தவங்களுக்கு ஒரு தகவல். 'சில்லுனு ஒரு காதல்’ படத்தில், சூர்யா - ஜோதிகா திருமணத்தப்போ வர்ற பாட்டுல அந்த தாத்தாவோடு டான்ஸ் ஆடின சுட்டிப் பொண்ணு நான்தான். எடிட்டர் லெனின் சார் முதன் முதலா தயாரிச்ச 'செடியும் சிறுமியும்’ குறும்படத்தில் நடிக்கவும் செய்தேன்'' என்றவர், தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தாலும் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறார்.

''எனக்கு பல அடையாளங்கள் இருந்தாலும், என்னோட முதன்மையான அடையாளமா 'டோரா’ கார்ட்டூன் டப் வாய்ஸைதான் சொல்லுவேன். என்னை என் பேரைச் சொல்லி கூப்பிடுறவங்களைவிட, 'டோரா’னு கூப்பிடுறவங்கதான் அதிகம்!'' என்று யாமினிபிரியா சொல்லி முடிக்க, 'டோராவின் பயணங்கள் தொடரப் போகிறது!’ என்று ஒலி தந்தது டி.வி!

- க.பிரபாகரன்

படங்கள்: செ.நாகராஜன்