Published:Updated:

“கால்கள் இல்லைனா என்ன... கைகள் இருக்கே!”

அவள் டீன்ஸ்

“கால்கள் இல்லைனா என்ன... கைகள் இருக்கே!”

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

''கடவுள் என் கால்களோட இயக்கத்தை எடுத்துக்கிட்டாலும், கைகளில் அதுக்கான வலிமையையும் சேர்த்தே தந்து ஈடுசெய்துட்டார். அதனாலதான் வில்வித்தை விளையாட்டில் இப்போ ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேற முடிஞ்சுருக்கு!''

- கையில் இருக்கும் வில் - அம்பை கீழே வைத்துவிட்டு வந்தமர்ந்தார் கலைச்செல்வி. மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை போட்டியில் சர்வதேச அங்கீகாரம் பெறக்காத்திருக்கும் மயிலாடுதுறை, அக்குளூர் கிராமத்துப் பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்கப்பா கிராம உதவியாளர். அம்மா, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துல கடைநிலை ஊழியர். வீட்டில் நாலு பிள்ளைகள். என்னைத் தவிர மற்ற மூணு பேரும் படிச்சாங்க. போலியோவால கால்களை இழந்த நான், எங்கப்பாவை கஷ்டப்படுத்த விரும்பாம நாலாவதோட படிப்பை நிறுத்திட்டேன். பக்கத்துல கவரிங் நகை கடைக்கு வேலைக்குப் போனேன். தேவையான அளவுக்கு வருமானத்துல வாழ்க்கை ஓடிட்டி இருந்தது. அப்போதான் தனியார் பள்ளிக்கூடத்துல விளையாட்டுப் பாட ஆசிரியரா இருக்கும் ரவி சாரை பார்த்தேன். சின்ன வயசில் இருந்தே விளையாட்டில் எனக்கிருந்த ஆசையையும், கால்கள் அதை தடுக்கறதையும் சொல்லி வருத்தப்பட்டப்போ, 'கால்கள் இல்லைனா என்ன... கைகள் இருக்கே. நீ விளையாட்டில் பெரிய ஆளா வரலாம்’னு சொன்னவர், என் கையில் வில், அம்பை கொடுத்தார். அதிலிருந்து தினமும் பயிற்சிதான். கலந்துக்கிட்ட போட்டிகள்ல எல்லாம் ஜெயிச்சேன். என் மேல, எனக்கு முதல் முறையா நம்பிக்கையும் மரியாதையும் வந்துச்சு...''

- வாழ்க்கையின் முக்கிய திருப்பத்தை மெல்லிய குரலில் சொல்லும் கலைச்செல்வி, நம்பிக்கையை அம்பாக மாற்றி... தமிழ்நாட்டுக்கு பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

“கால்கள் இல்லைனா என்ன... கைகள் இருக்கே!”

பிப்ரவரி 2012-ல் சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை போட்டி மற்றும் அக்டோபர் 2012-ல் புனே நகரிலும் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை போட்டி ஆகியவற்றில் 30 மீட்டர், 50 மீட்டர் மற்றும் மொத்த மதிப்பீடு என்கிற வகையில் தலா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். தற்போது ஆசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது சிறப்புச் செய்தி. ''ஸ்பான்ஸர்தான் இப்போ நான் எதிர்பார்க்கறது. வில், அம்பு, போக்குவரத்துச் செலவுனு இதுவரை கலந்துகிட்ட போட்டிகளுக்காக கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ரவி சாரே செலவு செய்திருக்கார். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்னு உதவிக்கு அணுகிட்டு இருக்கோம். இன்னும் பதில் கிடைக்கல. இப்போ நடக்கப்போற ஏஷியன் கேம்ஸ்ல, ஃபைபர் (fibre)  வில் இருந்தாதான் கலந்துக்க அனுமதிப்பாங்க. அதோட விலை... கிட்டத்தட்ட 1,50,000. ஃபைபர் வில் கிடைச்சா... நிச்சயமா இந்தியாவுக்கு ஒரு மெடல் வாங்கித் தருவேன்!'' எனும் கலைச் செல்வியின் கண்கள் முழுக்க ஏக்கமும் எதிர்பார்ப்பும்!

- மு.சா.கௌதமன்   படம்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism