Published:Updated:

ஆட்டோ சரஸ்வதி!

அவள் டீன்ஸ்

ஆட்டோ சரஸ்வதி!

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

குதி நேர வேலை பார்த்துக் கொண்டே சென்னை, காயிதே மில்லத் கல்லூரியில் எம்.காம். படிக்கிறார் சரஸ்வதி. அவர் பார்க்கும் பகுதி நேர வேலை... ஆட்டோ ஓட்டுவது!

''குடும்ப பொறுப்பை உணராத அப்பா, உழைச்சு ஓடா தேய்ஞ்சுபோன அம்மா, கல்யாண வயசுல அக்கா, ஸ்கூல்ல படிக்கிற தம்பி... இவங்க எல்லோரையும் கஷ்டமில்லாம பார்த்துக்கறதுக்கு... பி.காம், முதல் வருஷம் படிக்கும்போது பேங்க் லோன் மூலமா ஆட்டோ வாங்கி ஓட்ட ஆரம்பிச்சேன். இந்த நாலு வருஷமா எங்க குடும்ப கஷ்டமும் கொஞ்சம் கொஞ்சமா விலகி ஓட ஆரம்பிச்சுருக்கு!''

- பேச்சு முழுக்க உற்சாகமும் உத்வேகமும் பொங்குகிறது சரஸ்வதிக்கு.  

''தனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இவ எங்க குடும்ப வறுமையை விரட்ட ஓயாம உழைச்சுட்டிருக்கா...'' என்று ஆரம்பித்த அம்மா ஜெயந்தி, ''சீட்டு விளையாட்டு, குடினு என் வீட்டுக்காரர் பண்ணின கூத்துகளால ஒட்டுமொத்த குடும்பமும் சீரழியறத பார்த்துதான் வளர்ந்துதுங்க புள்ளைங்க. அதனால ஏழு வயசுல இருந்தே குடும்ப பாரத்தை பங்குபோட ஆரம்பிச்சுட்டா சரஸ்வதி. ஸ்கூல்ல படிக் கறப்பவே எங்கூட தெருத் தெருவா பால், தயிர், கீரை விற்க வந்துடுவா. ஒரு கட்டத்துல அவளே சைக்கிள்ல போய் எல்லாத்தையும் வித்துட்டு வர ஆரம்பிச்சா.

ஆட்டோ சரஸ்வதி!

அவ ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்ச பிறகுதான் வீட்ல ஒழுங்கா அடுப்பே எரியுது. ரேஷன் கடை அரிசிய மட்டுமே நம்பி இருந்த நாங்க, எங்க தங்கத்தாலதான் கடை அரிசியை சாப்பிட ஆரம்பிச்சோம். இதுவரைக்கும் 'அம்மா காசு வேணும்’னு ஒருமுறைகூட கேட்டதே இல்லை. பால், தயிர் வித்துட்டு வர்ற காசுலயே ஸ்கூல் ஃபீஸ் கட்டினவ, ஆட்டோ ஓட்டியே காலேஜ் ஃபீஸையும் கட்டுறா. அதோடு, எங்க மொதப் பொண்ணு கல்யாணத்தை அவதான் கடனவுடன வாங்கி நடத்தி முடிச்சா. தன்னோட தம்பியைப் படிக்க வைக்கிறதும் அவதான்'' என்றபோது, அந்தத் தாயின் கண்களில் பெருமைக்கு நிகராக வறுமையின் வேதனையும்.

''வறுமையையும், ஏளனப் பேச்சையும் தவிர வேறு எதையும் இந்த சமூகம் எங்களுக்கு கொடுக்கல. ஆனா, அதுதான் அசைக்க முடியாத வைராக்கியத்தை எனக்குக் கொடுத்துச்சு. தெனமும் காலையில் ஏழு மணியில் இருந்து ஒரு மணிக்கு வரைக்கும் சவாரி போவேன். அப்புறம் (ஈவினிங்) காலேஜ் போயிட்டு, திரும்ப சாயங்காலமும் சவாரி முடிச்சுட்டு... நைட்டுதான் வீட்டுக்கு வருவேன். என்னோட காலேஜ் பேக் எப்பவுமே ஆட்டோவுலதான் இருக்கும். அசைன்மென்ட், எக்ஸாமுக்கு படிக்கிறது எல்லாத்தையும் சவாரி போகும்போது கஸ்டமர்களுக்காக காத்திருக்கிற இடைவெளியில செஞ்சு முடிச்சுடுவேன்.

ஆட்டோ சரஸ்வதி!

பிள்ளைகளை டியூஷன், பெயின்ட்டிங் கிளாஸுக்கு அனுப்பறதுக்கு நிறைய அம்மாக்கள் என்னை தேடி வருவாங்க. அதேபோல, நகைக்கடை, பேங்க் மாதிரியான இடங்களுக்கு லேடீஸ் தனியா போகும் போதும் நம்பிக்கை, பாதுகாப்புக்கு என் ஆட்டோவை கூப்பிடுவாங்க. இப்போ மாசம் குறைந்தது 10 ஆயிரம் சம்பாதிக்கிறேன். வண்டிக்கான தவணை, அக்கா கல்யாணக் கடன், தம்பி படிப்பு, கல்லூரி படிப்புனு சகலத்தையும் சமாளிக்கிறேன். ஆட்டோ மட்டுமில்லாம கார், வேன் எல்லாம் எனக்கு ஓட்டத் தெரியும். எதிர்காலத்துல ஒரு பெரிய போலீஸ் அதிகாரியாகணும்கிறதுதான் ஆசை!'' என்கிறார் சரஸ்வதி கம்பீரத்துடன்.

''அக்கா இருக்கிற எல்லாருக்கும் ரெண்டு அம்மானு சொல்வாங்க. எங்கக்கா எனக்கு அப்படித்தான். பன்னிரெண்டாவது படிக்கும் நான், எங்கக்காவை போலவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆட்டோ ஓட்டுறேன். எங்கக்காதான் எனக்கு ரோல் மாடல்!'' என்று தம்பி மணிகண்டன் பெருமையோடு சொல்ல...

'ஓயாம உழைக்கிற என் பொண்ணோட மனதைரியம், குடிக்கு அடிமையாயிருந்த என்னை மீட்டு மனுஷனாக்கினதோட, குடும்பத்தை காப்பாத்தணும்கிற பொறுப்பையும் உணர வெச்சிருக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பசங்களுக்கு படிப்பைத் தரணும்னு போராடின என் மனைவியோட வைராக்கியம்தான் என் புள்ளைகளை படிப்பாளிகளா ஆக்கியிருக்கு'' என்று தன் தவறை உணர்ந்தவராக பேசினார் அப்பா சேகர்.  

''இப்ப எம்.காம். ரெகுலர் காலேஜ்ங்கறதால... காலையில ஆட்டோ ஓட்ட முடியாது. மதியத்துக்கு மேலதான் சவாரி போக முடியும் அதையும் பழகிக்குவோம்!'' என்று தயாராகிறார் இந்த துணிச்சல் பெண்!

- க.பிரபாகரன், படங்கள்: ரா.மூகாம்பிகை