Published:Updated:

“சேவை... நீங்களும் செய்யலாம்தானே பாஸ்..?”

அவள் டீன்ஸ்

“சேவை... நீங்களும் செய்யலாம்தானே பாஸ்..?”

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

 ''கல்லூரி காலத்தில், இங்க எங்க மனசுல விழுற விதைதான், சமுதாயத்தின் மீதான அக்கறையை இன்னும் அதிகமாக்குது. பார்வை இழந்தவர்களின் வாழ்க்கைப் பாதை சிறக்க, நாமளும் ஒரு கருவியா இருக்கறதை நினைக்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

- மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக பேசுகிறார்கள் எம்.ஐ.டி (மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) மாணவர்கள். தினமும் மாலை கல்லூரி முடிந்தவுடன், அந்த வளாகத்திலேயே பார்வையிழந்தவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில், தினமும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை வகுப்புகள் எடுக்கின்றனர் இந்த மாணவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊன்றுகோலின் உதவியோடு தட்டுத் தடுமாறி வந்து சேரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனதாலும், அறிவாலும் நம்பிக்'கை’ கொடுக்கும் மாணவர்களின் இந்தச் சேவை, கிட்டத்தட்ட 15 ஆண்டு களாக தொடர்கிறது. இங்கே இயங்கும் 'இளைஞர் செஞ்சிலுவை சங்கம்' சார்பாக, 'விஷன் கம்பானியன்ஸ்’  (Vision companions) என்கிற பெயரில்தான் இந்த சேவை நடக்கிறது!

''உங்கள் விழியில் நாங் கள்... என்பதுதான் எங்களோட நோக்கம். படிக்கும்போதே சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான ஒரு பங்களிப்பை அளிக்கிற திருப்தியைத் தருது இந்த சேவை. கூடவே, எதிர்காலத்தில் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் செய்யணும் என்ற உந்துதலையும் தருது. பார்வையற்றவர்களா இருக்கற பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசுத் தேர்வுக்கு தயாராகறவங்க, பேராசிரியர்கள்னு பல தரப்பட்டவங்களும் எங்ககிட்ட பயிற்சி எடுக்கறது.... எங்களுக்கே பெரிய அனுபவம். நாங்களும் புதிய விஷயங்களைக் கத்துக்க முடியுது. இந்த நன்முயற்சியில் கல்லூரி டீன் தாமரைச்செல்வி, அண்ணா பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமார் ஆகியோரோட பங்கும் முக்கியமானது'' என்று சந்தோஷமாக சொல்கிறார்... இ.சி.ஈ, இறுதியாண்டு மாணவி இந்துமதி.

“சேவை... நீங்களும் செய்யலாம்தானே பாஸ்..?”

மாற்றுத்திறனாளி ரகுராமன், ''கல்லூரி மாணவனா இருந்த காலத்தில் இருந்தே இங்க வர்றேன். இன்னிக்கு ஒரு கல்லூரியில் லெக்சரரா வேலை பார்த்துட்டு இருக்கேன். என் வாழ்க்கையின் இந்த முன்னேற்றப் பாதையில், எம்.ஐ.டி மாணவர்களோட பங்கு நிறைய. என் கண்களால முடியாமல் போன வாசிப்பை, என் காதுகளுக்கு சாத்தியமாக்கினது இவங்கதான். ஒவ்வொரு வருஷமும் வரக்கூடிய புது மாணவர்களும் இந்தச் சேவையோட நோக்கம், பொறுப்பு உணர்ந்து அக்கறையோட இந்தப் பணியை செய்துட்டு வர்றாங்க. தவிர, எனக்கு இங்கு நிறைய நண்பர்களும் கிடைச்சிருக்காங்க!'' என்கிறார் நன்றியுடன்.

''எங்களோட தேவைகளை துல்லியமா அறிந்து நிறைவேற்று வாங்க. வாசித்துக் காட்டுறதோட, தேவைப்பட்டால் ஒலிநாடாவில் பதிவு செய்தும் தருவாங்க. என்னோட ஆசிரியப் பணிக்கான பல அசைன்மென்ட்களை இவங்களோட துணையோடதான் நான் முடிச்சிருக்கேன்'' என்று பாராட்டு பத்திரம் வாசிக்கிறார், பார்வையற்றவரான பள்ளி ஆசிரியை சரஸ்வதி.

“சேவை... நீங்களும் செய்யலாம்தானே பாஸ்..?”

''என்னால என்ன செய்ய முடியும் என்ற அவநம்பிக்கையில் இருந்த நான், இன்னிக்கு இந்த மாணவர்களோட ஆதரவாலேயும், இங்க வந்து பலன் பெற்ற மற்ற மாற்றுத்திறனாளிகள் கொடுத்த ஊக்கத்தினாலயும்தான் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை கண்டெடுத்திருக்கேன். பாடம்னு நின்னுடாம... எங்களுக்காக அரசாங்கம் வெளியிடும் அறிவிப்புகளைத் தெரியப்படுத்துறது, பொதுமக்களுக்கு கண்தானத்தோட அவசியத்தை வலியுறுத்துறனு இன்னும் பல காரியங்களையும் இவங்க செய்துட்டு வர்றாங்க'' என்று நெகிழ்கிறார் நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர் வீரப்பன்.

அனைவரின் பாராட்டுக்களையும், நன்றிகளையும் அமைதியுடன் பெற்றுக்கொண்ட எம்.ஐ.டி மாணவர்கள், ''இங்க வர்ற பலர் நீண்ட தூரம் பயணப்பட்டு வர்றாங்க. தமிழகத்தின் எல்லா கல்லூரி மாணவர்களும் அவங்களோட கல்லூரி வளாகத்திலேயே வாரத்தில் சில மணி நேரங்களை மாற்றுத் திறனாளிகளுக்காக இப்படி ஒதுக் கினா, இன்னும் பலரோட வாழ்க்கை நிமிரும், அவங்களோட நேரமும் மிச்சப்படும். செய்யலாம்தானே பாஸ்..?'' என்று சக மாணவர்களுக்கு கோரிக்கை வைத்தனர் கோரஸாக!

- க.பிரபாகரன்

படங்கள்: செ.திலீபன்