Published:Updated:

கோபுரமான குப்பைகள்!

அவள் டீன்ஸ்

##~##

''பொதுவாக, ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், அந்த வளாகமே குப்பைமேடாக மாறிவிடும். ஆனால், 'பிஸ்ஆர்க்’ (BizArch) எனும் பெயரில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சி காரணமாக, எங்கள் யூனிவர்ஸிட்டி வளாகமே... முழுக்க சுத்தமாகிவிட்டது!'' - இப்படி புன்னகைக்கிறார் சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சிர்லோ சுகந்தி.

'வேஸ்ட்' என்று ஒதுக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தி, பயனுள்ள புதுப்பொருட்களை எப்படி உருவாக்கலாம் என்பதை அரங்கேற்றும் நிகழ்வுதான் இந்த 'பிஸ்ஆர்க்!’

சமீபத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 42 கல்லூரிகளில் இருந்து, 230 மாணவர்கள் பங்கேற்றனர். கட்டடக்கலை மாணவர்களான அவர்கள், வீணான பொருட்களை வைத்து, தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி உருவாக்கியிருந்த ஒவ்வொரு கட்டடமும்... காண்போரின் கண்களை அகலப்படுத்தின. சுமார் 10,000 சதுர அடி அளவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, 'லிம்கா’ சாதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோபுரமான குப்பைகள்!

''இந்தப் போட்டிக்காக யூனிவர்சிட்டி முழுக்கவும் இருந்து குப்பைக்குச் சென்றிருந்த காட்டன், பேப்பர், அட்டைப் பெட்டி, கூல்டிரிங்ஸ் பாட்டில், உடைந்து போன சி.டி, டீ கப், மரக்கட்டை என 3 டன்கள் அளவுள்ள பொருட்களை சேகரித்துக் கொடுத்தனர். அதை போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு கல்லூரிக்கும் 40 கிலோ விகிதத்தில் பிரித்துக் கொடுத்தார்கள் பேராசிரியர்கள்.

கோபுரமான குப்பைகள்!

அந்தக் குப்பைகளை பயன்படுத்தி, ஊரே வியக்கும் வகையில் கட்டடங்களாக்கி விட்டனர் மாணவர்கள். இதையெல்லாம், தூக்கி எறிந்துவிடாமல், கைவினைப் பொருட்கள் செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போகிறோம்'' என்று புன்னகை பொங்கச் சொன்னார், மாணவ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சிர்லோ சுகந்தி.

துறையின் தலைவர் ஜோதிலஷ்மி, ''கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குப்பைதான் இப்போது பெரும் பிரச்னையாக இருக்கிறது. குப்பை மேலாண்மையை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நம் சுற்றுச்சூழல் இருக்கிறது. அதை மாணவர்களிடமும் வலியுறுத்தவே இந்தப் போட்டி'' என்று தங்களுடைய நோக்கம் பற்றிச் சொன்னார்.  

பேனா, பென்சில், அட்டைப் பெட்டிகளில் எழுந்து நின்ற அடுக்குமாடிக் கட்டடங்கள், வாட்டர் பாட்டில்களால் செய்யப்பட்ட பெரிய கிடார், பேப்பர் பொம்மை, ரீ-சார்ஜபிள் ரோபோ, ஆர்கானிக் கட்டடங்கள், மரக்கட்டை பேலஸ், காகித வீடு என்று போட்டிக்காக உருவாக்கப்பட்டிருந்த அனைத்தும் 'சபாஷ்’ போட வைத்தன.

கேரள மாநிலம், கோட்டயம், ராஜீவ் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள், பெட் பாட்டில்கள் மற்றும் அட்டை ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கிய டென்ட், முதல் பரிசைத் தட்டிச் சென்றது. இது, உடனடியாக உருவாக்கக் கூடிய டென்ட்!

மாணவர்கள் கைபட்டால் குப்பையும் கோபுரமாகும்!

- க.பிரபாகரன்

படங்கள்: க.பாலாஜி