Published:Updated:

இடைஞ்சல் தரும் 'எஸ்கேப்பிஸம்...எஸ்கேப் ஆவது எப்படி ?

இடைஞ்சல் தரும் 'எஸ்கேப்பிஸம்...எஸ்கேப் ஆவது எப்படி ?

இடைஞ்சல் தரும் 'எஸ்கேப்பிஸம்...எஸ்கேப் ஆவது எப்படி ?

இடைஞ்சல் தரும் 'எஸ்கேப்பிஸம்...எஸ்கேப் ஆவது எப்படி ?

Published:Updated:
இடைஞ்சல் தரும் 'எஸ்கேப்பிஸம்...எஸ்கேப் ஆவது எப்படி ?

'மெரிட் மூலம் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கும் மாணவி நான். என் பிரச்னை எனக்கே புதிதாக இருக்கிறது. எந்த ஒரு நெருக்கடியும் இல்லாதபோது இயல்பாக பாடங்களைப் படிப்பதில் எனக்கு எந்தவொரு சங்கடமும் இல்லை. ஆனால், கல்லூரியில் ஏதேனும் டெஸ்ட், அசைன்மென்ட், பேப்பர் பிரசன்டேஷன் என்று ஒரு 'டெட் லைனோடு’ நெருக்கடி வரும்போது... என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அதிலிருந்து தப்பிப்பதற்காக... 'உடம்புக்கு முடியவில்லை... வீட்டில் விசேஷம்' என்று ஏதாவது காரணம் கற்பிக்க முயல்கிறேன். 'படிப்பை நிறுத்திவிட்டு வீட்டுக்கே திரும்பி ஓடிவிடலாமா?' என்ற விபரீத எண்ணமும் வந்துவிடுகிறது. இதிலிருந்து தப்பிக்க வழி சொல்லுங்களேன்...'' என்று சென்னையிலிருந்து 'என் பெயரைத் தவிர்த்துவிடுங்கள் ப்ளீஸ்' என்றபடி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கும் மாணவிக்காக... ஆலோசனை தருகிறார் கோயம்புத்தூர், மருத்துவ உளவியல் நிபுணர் பா.சுஜிதா.

''குழந்தை முதல் பெரியவர் வரை, எந்தப் பொறுப்பும் இல்லாதவர் முதல் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வரை 'எஸ்கேப்பிஸம்' (EScapism) எனப்படும் இந்த தப்பிக்கும் மனோபாவ பிரச்னையால் அல்லல்படாதவர்கள் இல்லை. அடிப்படையில் இரண்டு காரணங்களை முன்னிறுத்தி இது ஏற்படுகிறது. பிடிக்காத விஷயத்தைச் செய்ய நிர்ப்பந்திக்கும்போது, அதைத் தவிர்த்து தப்பிக்கப் பார்ப்பது 'அவாய்டிங் பெயின்' (Avoiding pain) எனப்படும் முதல் வகை. செய்யும் வேலை சுலபமோ, சிரமமோ... அதைவிட பிடித்த மற்றொரு வெளி அம்சத்தால் ஈர்க்கப்பட்டு சந்தோஷத்துக்காக, கடமையைப் புறக்கணித்துவிட்டு ஓடுவது 'பிளஷர் சீக்கிங்' (Pleasure Seeking) எனப்படும் இரண்டாவது வகை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

வகுப்பில் டெஸ்ட் என்றதும், 'காய்ச்சல்' என்று தப்பிக்கும் மனோபாவம் முதல் வகை என்றால், அதே மாணவன் வகுப்பில் டெஸ்ட் இல்லாத தினத்திலும் சினிமா அல்லது கிரிக்கெட்டுக்காக பள்ளி செல்வதுபோல் பாவ்லா காட்டி, ஊர் சுற்றுவது இரண்டாவது வகை. இப்படி பாதிக்கப்படும் மாணவர்கள் பெரும்பாலும் சுமாராக படிப்பவர்களாகவோ அல்லது படிப்பில் தேறாதவர்களாகவோ இருப்பார்கள். வளர்ப்பில் கவனம், கண்காணிப்பில் தீவிரம், டியூஷன் போன்ற படிப்பு சுமையை எளிமையாக்கும் உதவிகளைத் தந்து, அரவணைப்பையும் மேற்கொண்டால்... சுலபமாக கரையேறிவிடுவார்கள்.

மாறாக இதே 'தப்பிக்கும்’ மனோபாவ பிரச்னை, சராசரிக்கும் மேம்பட்ட நன்றாக படிக்கும் மாணவர்களைப் பீடித்தால் அது 'பெர்ஃபாமன்ஸ் ஆன்சைட்டி' (Performance Anxiety) என்பதாக அடையாளம் காணப்படும். பெரும்பாலான 'டாப்பர்ஸ்’ மாணவர்களுக்கு வரும் முக்கிய பிரச்னை இது. இவர்களின் படிப்பு, தயாரிப்பு எல்லாமே சுமுகமாக சென்று கொண்டிருக்கும்; பரீட்சை நெருங்கியதும் பதற்றம் கவ்வ, தடுமாறித் தவித்து... கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறிப் போவார்கள். சுமாரான மாணவர்களின் தப்பிக்கும் மனோபாவத்தால் ஏற்படும் இழப்பைவிட, இந்த டாப்பர் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகம். நீங்கள் மெரிட்டில் பல் மருத்துவம் சேர்ந்திருப்பதாக சொல்லிஇருப்பதால் உங்களுடைய பிரச்னையை 'எஸ்கேப்பிஸம்' கலந்த 'பெர்ஃபாமன்ஸ் ஆன்சைட்டி' என்ற வகையில் எடுத்துக் கொண்டு, நிவர்த்திக்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

இடைஞ்சல் தரும் 'எஸ்கேப்பிஸம்...எஸ்கேப் ஆவது எப்படி ?

முதலில் எதிர்மறை எண்ணங்களை புறக்கணித்து, எதிலும் பாஸிட்டிவ் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். படிப்பில் உங்களது போட்டியாளர்களான சக மாணவ-மாணவியரைப் பார்த்து கழிவிரக்கத்துடன் கம்பேர் செய்துகொள்ள வேண்டாம். உங்களது தனிப்பட்ட திறன்கள், அவற்றை வெளிப்படுத்தும் பிரத்யேக பாணி இவற்றில் நம்பிக்கை வையுங்கள். அவை இல்லாது போனாலும், வளர்த்துக்கொள்ள முயற்சியுங்கள்.

பள்ளியில் படிக்கும்போது தனியாக டியூஷன் வகுப்புகளை அதிகமாக நம்பி, தினசரி பாடத் தயாரிப்பை மேற்கொண்டவராக இருந்தால், கல்லூரிக்கு வந்ததும் சுயமாக படிக்கும் முயற்சியில் தடுமாற்றங்கள் எழுவது சாதாரணம். இதைச் சரிகட்ட, பாடம் நடத்தப்படுவதற்கு முன்பாகவே லைப்ரரி, இணையம் என்று உங்கள் பாடத் தலைப்புகளை ஒட்டிய சுவாரசியமான செய்திகளை, கட்டுரைகளை மேயலாம். முக்கியமாக உங்களுக்கான 'டெட்லைன்’ நேரம் வரை காத்திருக் காமல், அவ்வப்போது தினசரி வகுப்புகளின் போக்கிலேயே பாடங்களைப் படித்து முடித்து பாடச்சுமையை கரைத்து விடுங்கள். இடையிடையே ரிவிஷன்களையும் மேற்கொள்ளலாம். இதனால் கடைசிகட்ட நெருக்கடி மற்றும் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.

இந்த நிலையைத் தொடரவிட்டால் முதலுக்கே மோசமாகும். தனிமை விரும்பியாகவும், தன்னைச் சுற்றிய சமூகத்துடன் சுமுகம் இழப்பதும், தன்னைப் பற்றி பிறர் தவறாக நினைக்கிறார்களோ என்கிற சந்தேகம் வருவதுமாக பக்க விளைவு பாதிப்புகள் வரத் துவங்கிவிடும். இதுவே நாள் போக்கில் பதற்றநோய், மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறுகளைத் தந்து கல்லூரிக் காலம் மட்டுமல்லாமல் பின்னாளில் பணி, லைஃப்ஸ்டைல், திருமண வாழ்க்கை என சகலத்திலும் நீடித்த பாதிப்புகளைத் தந்துவிடும்.

சற்று தெளிவாக யோசிப்பது, திட்டமிடுவது, சுய ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை பழகிக்கொள்வது என்று முயற்சித்தாலே... சுலபமாக ஜெயித்துவிடலாம் இந்த எஸ்கேப்பிஸத்தை!''

படிப்பு, வேலை வாய்ப்பு, கன்சல்டன்ஸி நம்பகத்தன்மை, நேர்காணல்கள், நுழைவுத் தேர்வுகள், அரசுப் போட்டித் தேர்வுகள், பகுதி நேர வேலை விவரங்கள், மாடலிங் வாய்ப்புகள், 'பியூட்டி கொர்ரி'க்கள், மனவியல் குழப்பங்கள், காதல் சிக்கல்கள், நட்பு துரோகங்கள், இணைய தளம் மூலமாக வரும் பிரச்னைகள்... என்று மாணவ சமுதாயத்தின் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை தருகிறோம் இங்கே... விளக்கமாக! கேளுங்கள்... காத்திருக்கிறோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism