Published:Updated:

கலைவாணி @ கீதா @ ரம்யா ...!

கலைவாணி @ கீதா @ ரம்யா ...!

திருச்சி, சூரியன் எஃப்.எம்-ன் ஹாட் வாய்ஸ், கலைவாணி. 'இப்படிக்கு ரம்யா’ நிகழ்ச்சியின் ரம்யா இவங்கதான்...’னு  கொஞ்சம் விளக்கமா சொன்னா... திருச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், கரூர் ஏரியா ரசிகர்கள் இன்னும் உற்சாகமாவாங்க!

கலைவாணி @ கீதா @ ரம்யா ...!

''சொந்த ஊரே திருச்சிதான். அடிப்படையில நான் ஒரு 'ஸ்பெஷல் எஜுகேட்டர்’ (மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்றுநர்). பி.ஆர்.எஸ்ஸி. (B.R.Sc-Bachelor of Rehabilitation Science) முடிச்சிட்டு மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கான ஸ்கூல்ல டீச்சராக முயற்சி பண்ணிட்டிருந்தப்போதான், திருச்சி சூரியன் எஃப்.எம்-ல 'ஆர்ஜே’ சான்ஸ். குட்டிப் பாப்பா, அய்யர் மாமினு பல வாய்ஸ்கள்லயும், சில ஊர் ஸ்லாங்கள்லயும் பேசி நான் ஜாலி பண்ணுவேங்கறதால, 'ஆடிஷனுக்கு போ’னு அனுப்பி வெச்சாங்க ஃப்ரெண்ட்ஸ். சட்டுனு செலெக்ட் ஆயிட்டேன்ல!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாடகர் எஸ்.பி.பி. பற்றித்தான் முதன் முதலா நேரலையில பேசினேன். எஸ்.பி.பி. என் ஃபேவரைட்ங்கறதால, ரொம்ப ஆசையா அந்த நிகழ்ச்சியை செய்தேன். ஸ்டேஷன்ல இருந்தவங்க எல்லாரும், 'முதல் நிகழ்ச்சி மாதிரியே தெரியல, ரொம்ப இயல்பா, உற்சாகமா பண்ணினே!’னு பாராட்டினாங்க. 'அப்போதான்... ஆசைப்பட்டு செஞ்சா, எதையும் அழகா செய்யலாம்!’ங்கற உண்மை புரிஞ்சுது.

இப்போ, 'கிசுகிசு கீதா’, 'சூரியபவன்’, 'இப்படிக்கு ரம்யா’... இந்த மூணு நிகழ்ச்சிகளும் என் வசம். 'கிசுகிசு கீதா’வுல மாமி ஸ்டைல்ல சினி காஸிப்ஸ் சொல்லணும். 'சூரியபவன்’ல கிராமத்துப் பெண் போல பேசணும். எனக்கு ரொம்ப இஷ்டமான நிகழ்ச்சி, 'இப்படிக்கு ரம்யா’! தங்களோட பிரச்னைகளைப் பத்தி தொடர்பு எண்ணோட நேயர்கள் கடிதமா எழுதுவாங்க. நான் அவங்களுக்கு போன் பண்ணி ஆறுதல் சொல்றதோட, சம்பந்தப்பட்ட நிபுணர்கள்கிட்டயும் அவங்களுக்கான தீர்வுக்காக பேசி அதையும் ஒலிபரப்புவோம். ரம்மியமான குரல் வேணும்னு சொல்லி, என்னை செலெக்ட் பண்ணினதோட, 'இப்படிக்கு ரம்யா’னு நிகழ்ச்சிக்கு பெயர் வெச்சு, என்னை 'ரம்யா’ங்கற புனைப் பெயரோட பேசச் சொல்லிட்டாங்க.

நிகழ்ச்சி சூப்பர் ஹிட்னாலும், எங்க ஸ்டேஷனைத் தாண்டி நான்தான் ரம்யாங்கறது யாருக்கும் தெரியாது. இப்போ இந்த கலைவாணிதான் அந்த ரம்யானு 'அவள்’ அதை எல்லாருக்கும் சொல்லப் போறா. ரொம்ப எக்ஸைட்டடா இருக்கு!

இப்போ எனக்கு பி.எட். படிக்க இடம் கிடைச்சிருக்கு. முடிச்சுட்டு மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராகணும்கிறதுதான் என் லட்சியம். 'ஆர்ஜே’ வேலையையும் இன்னொரு பக்கம் தொடர்ந்துக்குவேன். சரிதானே?!''னு சிரிக்கறாங்க கலைவாணி @ கீதா @ ரம்யா!

              - இரா.மங்கையர்க்கரசி
                 படம்: பா.காளிமுத்து