Published:Updated:

ரப்பர் பெண்ணே நிகாரிகா....

ரப்பர் பெண்ணே நிகாரிகா....

ரப்பர் பெண்ணே நிகாரிகா....

''உடல் ஒரு கோயில். அதை எந்த அளவு தூய்மையா வெச்சிருக்கோமோ, அதைப் பொறுத்துதான் ஆன்மா உள்ளே குடியிருக்கும்!''

- பத்தாம் வகுப்பு மாணவி நிகாரிகா அவ்வளவு பக்குவமாக ஆரம்பித்தபோதே, ஆச்சர்யம் நம்மை அள்ளிக் கொண்டது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை, செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியின் மாணவி நிகாரிகா, ஒரு யோகா சாம்பியன். சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகாசனப் போட்டியில், 'ஆர்ட்டிஸ்டிக் பேர்' (Artistic Pair) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று வந்திருக்கும் நிகாரிகாவுக்கு, தெளிந்த பேச்சு!

''ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், பாலே டான்ஸ்னு எல்லாத்தையும் கத்துக்கிட்டிருந்த எனக்கு, தற்செயலாதான் யோகாசனம் கத்துக்கற வாய்ப்பு கிடைச்சுது. ஒரு கட்டத்துல, மத்த எல்லா பயிற்சிகளையும் ஓரம் கட்டிட்டு, முழுமூச்சா யோகாவை மட்டுமே கத்துக்க முடிவெடுக்கற அளவுக்கு இதுல எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. என் யோகா மாஸ்டர், அருணகிரி சார். ஆரம்பத்துல பள்ளி அளவுல நடந்த போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கின என்னை, டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட், நேஷனல்னு ஊக்குவிச்சு... இந்த ஒண்ணரை வருஷத்துக்குள்ள இன்டர்நேஷனல் போட்டிகள் வரைக்கும் வளர வெச்சவர்...'' என்று குரு வணக்கம் வைத்த நிகாரிகா, தாய்லாந்து போட்டி அனுபவம் பற்றிப் பகிர்ந்தார்.

##~##

''பொதுவா சர்வதேச அளவுல நடக்கற யோகா போட்டிகள்ல இந்தியப்

ரப்பர் பெண்ணே நிகாரிகா....

போட்டியாளர்கள் மேடை ஏறினாலே, அரங்கத்துல சட்டுனு ஒரு அமைதி பரவிடும். எல்லாரோட கண்களும் நம்ம மேலயே இருக்கும். காரணம், உலகப் புகழ் பெற்ற யோகாசனக் குழுக்கள், நம்ம இந்தியர்கள்தான். தாய்லாந்துப் போட்டியில 'ஆர்ட்டிஸ்டிக் பேர்’ல கலந்துட்ட என்னையும், என் இணையான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பொண்ணையும் அப்படி ஒரு அமைதியோடதான் அரங்கம் கவனிச்சுது. நடுவர்கள், நாங்க செய்யற யோகாசனம் எவ்வளவு கடினமானது, முக்கியமானது, அந்த ஆசனத்துல எவ்வளவு நேரம் நாங்க தாக்குப்பிடிச்சு நிக்கறோம், உடல் சிரமத்தை முக பாவத்துல வெளிப்படுத்தாம இருக்கோமானு எல்லாத்தையும் கவனிச்சு, மார்க் போட்டாங்க.

இந்தப் போட்டியில வெள்ளிப் பதக்கம் வாங்கின நான், அடுத்த மாசம் ஹாங்காங்ல நடக்கப்போற போட்டியிலயும், அடுத்ததா தென் அமெரிக்காவுல நடக்கப்போற போட்டியிலயும் தங்கம் வாங்கறதுக்காக தீவிர பயிற்சியில இருக்கேன். உதாரணமா, 'அஷ்டிங்க வினாயஸா’ங்கற யோகாசனத்தின் உட்பிரிவு ஒண்ணை கத்துட்டு வர்றேன். உடல் உறுதிக்காகவும், வயிற்றுப் பகுதிக்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆசனத்தை தினமும் சாயந்திரம் ரெண்டு மணி நேரம் செய்யறது, என்னோட கான்ஃபிடன்ஸ் லெவலை இன்னும் கூட்டுது!'' என்று நம்பிக்கை பொங்கச் சொன்னார் நிகாரிகா. இவருடைய அக்கா ராஷிகா, தேசிய அளவிலான நீச்சல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது!

''யோகாவை, ஏதோ உடலை வருத்தி செய்யற பயிற்சினு நினைச்சு பலர் ஒதுங்கி நிக்கறாங்க. உண்மையில யோகாசனம் நம்ம உடலையும் மனதையும் ரொம்ப லேசா உணர வைக்கும். சில சுலபமான யோகாசனங்களை தினமும் பதினைந்து நிமிடங்கள் செய்தாலே மாற்றத்தைக் கண்கூடா காணலாம். பெண்கள் சமையலறையில குழம்பு கிண்டுறதுலகூட ஆசனம் இருக்கு. இந்தியன் ஸ்டைல் டாய்லெட்களை உபயோக்கிப்பதுகூட ஆசனத்தின் நன்மைகளைத் தரும். தினமும் சாப்பிட்டதும் வஜ்ராசனத்துல அஞ்சு நிமிஷம் அமர்ந்தா ஜீரண சக்தி அதிகரிக்கும். காலையில எழுந்தவொடனே ஸ்கிப்பிங், ஜாகிங்னு வார்ம்-அப் செய்த பிறகுதான் யோகாசனம் செய்யணும். இல்லைனா, முதல் நாள் இரவு கடினமா ஆகியிருக்கற தசைகள் நாம இழுத்த இழுப்புக்கு வராது!''

- யோகா பற்றி இப்படி அமுதசுரபி போல் நிகாரிகா தகவல்களைத் தெளிப்பதற்கு பின்புலம், யோகா புத்தகங்களையும் தேடிப் படித்து தன்னை மெருகேற்றிக் கொள்வதுதான்!

ரப்பர் பெண்ணே நிகாரிகா....

''கல்லூரியில மருத்துவப் படிப்பு படிச்சுட்டு, மருத்து வத்தோட யோகாசனத்தையும் சேர்த்து, மருந்தில்லா வைத்தியத்தை மக்களுக்குத் தர்றதுதான் என் லட்சியம்!'' என்றார் நிகாரிகா திடமாக. நிகாரிகா என்றால் 'நட்சத்திரக் கூட்டம்’ என்று அர்த்தமாம்!

மோ.அருண் ரூப பிரசாந்த்
படங்கள்: து.மாரியப்பன்