Published:Updated:

LUNCH BOX - ஹோம் தியேட்டர்

ரெவ்யூ டீம்

LUNCH BOX - ஹோம் தியேட்டர்

ரெவ்யூ டீம்

Published:Updated:
##~##

பாலிவுட் சினிமா, பொருளாதார தலைநகரம், நிழல் உலக மாஃபியா என பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத மும்பையின் இன்னொரு அடையாளம்... டப்பாவாலாக்கள். பெரிய பெரிய டப்பா கேரியரில் ஒவ்வொருவருக்கும் சாப்பாடு எடுத்துச் செல்லும் அவர்களின் தொழில் நேர்த்தியும், டெலிவரி சிஸ்டமும் உலக பிரசித்தம். பக்காவான நெட்வொர்க்கில் இயங்கும் டப்பாவாலாக்கள், தோராயமாக எட்டு மில்லியன் டெலிவரிகளில், ஒரே ஒரு லஞ்ச் பாக்ஸை தவறுதலாக இடம் மாற்றி டெலிவரி செய்துவிடுவார்கள். அப்படி இடம் மாறிப்போன ஒரு டப்பாவின் கதைதான் 'தி லஞ்ச் பாக்ஸ்’ இந்தி திரைப்படம்.

மும்பையில், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளா, தன் கணவனுக்காக அனுப்பும் லஞ்ச் பாக்ஸ், டப்பாவாலாக்களால் தவறிப்போய் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வுபெறப்போகும் கிளார்க்கான சாஜன் ஃபெர்னாண்டஸிடம் வந்து சேர்கிறது. தன்னிடம் அன்பு காட்டாத கணவனின் அன்புக்கு ஏங்கும் இளாவும், மனைவியை இழந்த வயோதிகரான சாஜனும், லஞ்ச் பாக்ஸில் கடிதப் பரிமாற்றம் செய்து உறவை வளர்க்கின்றனர். இதுதான் படத்தின் ஒன் லைன். கத்தி மேல் நடப்பது மாதிரியான கதையை, எந்த ஒரு இடத்திலும் விரசமோ, வன்மமோ எட்டிப் பார்க்காமல், மிக கண்ணியமாக கையாண்ட விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ரிதேஷ் பத்ரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 LUNCH BOX - ஹோம் தியேட்டர்

ஒரு கட்டத்தில் சாஜனின் அன்புக்குக் கட்டுண்டு, அவரை நேரில் பார்க்கும் ஆவலோடு ஒரு ஹோட்டலில் காத்திருக்கிறாள் இளா. சாஜனும் அவளைப் பார்க்க தயாராகிறார். கிளம்பும்போது, லேசான முள் தாடி அவரை உறுத்துகிறது. ஷேவ் செய்ய பாத்ரூமுக்குள் நுழைகிறார். அந்த நேரத்தில் அவருக்கு ஏற்படும் மனமாற்றத்தை இளாவுக்கு கடிதமாக எழுதுகிறார் சாஜன்.

அன்புள்ள இளா,

'உன்னைப் பார்க்கும்போது அழகாக தோன்ற வேண்டும் என்று ஷேவ் செய்ய பாத்ரூமுக்குள் நுழைந்தேன். அந்த பாத்ரூமுக்குள் என் தாத்தாவின் வாடை அடித்தது. என் தாத்தா இறந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகு எப்படி இப்போது அந்த வாடை அடித்தது? சின்ன யோசனைக்குப் பிறகுதான் புரிந்தது, அது என் தாத்தாவுடைய வாடை அல்ல... அது என்னுடைய வாடைதான் என்று! நான் என் தாத்தாவின் வயதை எட்டிவிட்டேன். உன்னை சந்திக்க என் மனம் தயங்குகிறது. என்னை மன்னித்துவிடு...’ என்று மென்சோகத்தில் முடியும் அந்த லெட்டர்.

இப்படியாக மனித மனத்தின் மிக நுட்பமான உணர்வுகள் இந்தப் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. சாஜனாக, இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான இர்ஃபான் கான் நடித்திருப்பார். வயோதிகத்தின் வாசலில் நின்று, அன்புக்கு ஏங்கும் ஒரு கைக்குழந்தையைப் போல் அவர் காட்டும் ஒவ்வொரு முகபாவனைகளும் அற்புதம்! இளாவாக, நிம்ரத் கௌர் நடித்திருப்பார். 'டெய்ரி மில்க்’ விளம்பரத்தில், காருக்குள் உட்கார்ந்து ரசித்து ருசித்து சாக்லேட் சாப்பிடுவாரே... அவரேதான். தன் கணவனின் அன்புக்காக ஏங்கும் நடுத்தர வயது இந்தியக் குடும்பத்தலைவியின் முகத்தை கண்ணாடியாக பிரதிபலித்திருக்கிறார். இளாவின் மேல் வீட்டு ஆன்ட்டியாக வெறும் குரல் மட்டுமே வந்து போகும் ஒரு கதாபாத்திரமும் படத்தில் உள்ளது. உங்களுக்கு கஷ்டம் என்று வரும்போது சாய்ந்துகொள்ள ஒரு தோள் தேவைப்படுமே... அப்படிப்பட்டவரின் முகத்தை, முகம் தெரியாத இந்த ஆன்ட்டிக்கு பொருத்திக்கொள்ளலாம்.

மொத்தத்தில், 'லஞ்ச் பாக்ஸ்’, நகர வாழ்க்கையின் அவசரத்தில், நாம் தொலைத்த உறவுச் சங்கிலியை மையமாக வைத்து பரிமாறப்பட்ட சூப்பர் லஞ்ச்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism