Published:Updated:

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

Published:Updated:

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே !
இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!
இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலைக்க வைக்கும் மலைக் கிராமம்

அது ஒரு அழகிய மலைக் கிராமம். மேகப் போர்வை, பெயர் தெரியாத அந்தக் காட்டுப் பூக்கள், பச்சை மாமலையாக எழுந்து நிற்கும் மரங்கள் என இவை எல்லாவற்றையும்விட அந்த கிராமத்துக்கு இன்னும் அழகு... திருமணத்திலும் மறுமணத்திலும் பெண்களுக்கு அங்கு தரப்படும் சுதந்திரமும் முக்கியத்துவமும்தான்!

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே எந்தவொரு வணிகச் சுரண்டலுக்கும் ஆட்படாமல் இருக்கிறது பாலமலை கிராமம். அடிவாரத்திலிருந்து ஐந்து மணி நேர மலைப் பயணத்தில் நமக்குத் துணை... மலைக் கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் அரப்புலி.

"தம்பீ...! கொஞ்சம் வேகமா நடங்க... பெரிய பெரிய எறும்பு புத்தா இருக்கு"என்றவரை, 'புத்துக்கு எல்லாம் பயப்படலாமா?' என்பதுபோல் நாம் பார்க்க, "எறும்பு புத்து அதிகமா இருந்தா, அந்த இடத்துல கரடி இருக்கும்!"என்று அவர் நிலைமையைச் சொல்ல, எங்கள் நடை, ஓட்டமானது!

வந்தது கிராமம். கேழ்வரகுக் காடு, கெணாங்கு புல்லால் வேய்ந்த வீடு, சுற்றிலும் காய்கறித் தோட்டம் என எளிமையான, எழிலான ஊர். அரை நாள் பயணத்தின் அகோரப் பசியுடன் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தோம். அரப்புலி அண்ணன் நம்மை அறிமுகப்படுத்தி வைக்க... ''தண்ணி...'' என்றோம். அதைத் தந்துவிட்டு, ''இவ்வளவு தூரம் வந்திருக்கீக... தண்ணி போதுமா?!"என்று கேட்டு அந்த வீட்டுப் பெண் தந்த கேழ்வரகு களியும், பலா மூசும் நம்முடைய டைனோசர் பசியைப் போக்கியது.

சிறிது நேரத்தில் மெள்ள இருள் சூழ ஆரம்பிக்க... ஐந்து பேர் ஒரு குழுவாக கையில் தீப்பந்தத்துடன் நம்மைக் கடந்து சென்றார்கள். திகிலுடன் அதை நாம் பார்க்க... ''ராவானா... காட்டெருமையும், காட்டுப்பன்னியும் கேழ்வரகு கொல்லையை நாசம் பண்ண ஆரம்பிச்சுரும் தம்பி... தினமும் அஞ்சு பேர் சுழற்சி முறையில போய் காவக்காப்போம்"என்று தெளிவுபடுத்தினார் அரப்புலி.

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

மலை மொத்தமும் இருளில் மூழ்குகிறது. கனத்த குளிருக்கு இதமாக காய்ந்த சருகுகளைக் குவித்து நெருப்பு மூட்டப்பட... அரப்புலி அண்ணன் தங்களின் வாழ்க்கை வழக்கங்களை நம்மிடம் சொல்லத் தொடங்கினார்.

"எங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் இந்த மலையிலயே உற்பத்தி பண்ணிக்குவோம். துணிக்காக மட்டும்தான் மலையை விட்டு கீழ எறங்குவோம். அதையும் நாங்க காசு கொடுத்து வாங்கறதில்லை... இங்கயிருக்கற கேழ்வரகு, காய்கறிகள கொடுத்துப்புட்டு, பண்டமாற்று பண்ணிக்குவோம்"என்றவர், தங்கள் திருமண நடைமுறைகளை விவரித்தபோது, வியப்பின் உச்சத்துக்கே சென்றோம்.

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

"ஆணும் பெண்ணும் விரும்பினாங்கனா, அவுக கூட்டாளிககிட்ட சொல்லிப்புட்டு அடர்த்தியான காட்டுக்குள்ள போயிடுவாக. அவங்களை காணாம தேடற பெத்தவங்க, கூட்டாளிக மூலமா விஷயத்தைத் தெரிஞ்சுக்குவாக. அப்பறம் பையனை பெத்தவங்க, பெண்ணைப் பெத்தவங்ககிட்ட, 'எங்க வீட்டுக் காளை ஒண்ணு வழிமாறி இங்கே வந்துருச்சு'ம்பாக. பெண்ணை பெத்தவங்க இதைப் புரிஞ்சுக்கிட்டு, பையனை பெத்தவங்ககிட்ட சம்பந்தம் பேசி முடிப்பாக. அப்புறம் இந்தத் தகவல கூட்டாளிக மூலமா அந்த ஜோடிக்குப் போய், அவுகள காட்லேர்ந்து வரவச்சு, எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணி வச்சுருவாக!"என்றவரிடம்,

"அதான் நீங்க அவங்க காதலுக்கு தடையில்லாம சம்மதிக்கறீங்களே... அப்பறம் எதுக்குக் காட்டுக்குள்ள போகணும்? உங்ககிட்டயே நேரடியே சொல்லிர வேண்டியதுதானே?"என்றோம் நாம்.

"பெத்தவுககிட்ட அதை நேரடியா சொல்லத் தயங்கிட்டுத்தான் இவ்வளவு நடைமுறையும் நடக்குது! அப்பறம் இன்னொரு விஷயம்... இங்க காதல் கல்யாணத்துலயும் சரி, பெரியவுக பார்த்துப் பண்ணி வைக்கற கல்யாணத்துலயும் சரி... பொண்ணுதான் அவளுக்குப் பிடிச்ச பையன தேர்ந்தெடுப்பா. எல்லாம் அவ இஷ்டப்படிதான் நடக்கும்" என்றார்.

மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்ணுக்கு சீர்வரிசை தந்து, மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்பது, நமக்கான அடுத்த இன்ப அதிர்ச்சி.

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்கதான் சீர்கொடுத்து கல்யாணம் செஞ்சுக்கணும். பெருசா ஒண்ணும் இல்ல... மண்வெட்டி, களை கொத்தி... இதுதான் தம்பி இங்கே சீரு! மேய்ச்சல் நிலம் அதிகமா இருந்துச்சுனா மாடு தரணும். அவ்வளவுதான்"என்று அரப்புலி சொல்ல, நம்ம ஊர் திருமண ஆர்ப்பாட்டங்கள் நினைவில் வந்து போயின!

"விவாகரத்துலயும் இங்க பொண்ணுக்குத்தான் ஆதரவு தம்பி. மனைவி, கணவன்கிட்ட இருந்து பிரியணும்னா, ஊர் பஞ்சாயத்தைக்கூட்டி காரணத்தைச் சொல்லிப் பிரிஞ்சுரலாம். புருஷன் சொல்றதை பஞ்சாயத்து கேட்காது. ஆனா, புருசன் பிரிய விரும்பினா... அது சுலபமில்ல. மனைவி ஒப்புக்கிட்டாதான் முடியும். எப்பவுமே ஆம்பளைகளவிட பொம்பளைகளோட நியாயம் சரியா இருக்குங்கற எங்க ஊர் நம்பிக்கையில வந்த முறை இது!"என்ற அரப்புலி,

"இந்த ஊர்ல விதவைங்களே இல்ல தம்பி..."என்று அடுத்த பகுத்தறிவு பாயின்ட்டுக்கு வந்தார்.

"புருசன் இறந்துட்டாலோ, புருசனைவிட்டு பிரிஞ்சுட்டாலோ... அந்தப் பொண்ணு எந்தச் சிக்கலும் இல்லாம திரும்பவும் கல்யாணம் கட்டிக்கலாம். சம்பந்தப்பட்ட பொண்ணு விரக்தியில 'வேணாம்'னு சொன்னாக்கூட, அது கடக்க வேண்டிய மிச்ச காலத்தை எடுத்துச் சொல்லி, கல்யாணம் கட்டி வைப்போம்! ஏன்னா, பொம்பளைக மனசுக்குள்ள மறுகுனாங்கனா, அந்த ஊரு செழிக்காது. அவுக சந்தோஷமா இருந்தாதான் அந்த ஊரு வெளங்கும்!"என்றவர், "சரி தம்பீ... எனக்குத் தூக்கம் வருது!"என்று உறங்கிப்போனார்.

நமக்கு தூக்கம் தூரத்தில் இருந்தது.

எந்தவொரு நவீன கண்டுபிடிப்பும் தெரியாத இந்த மக்கள், நம் கற்பனைக்கு எட்டாதளவு சந்தோஷமாக இருக்கிறார்கள். நம்மைப்போல் இவர்களிடேயே சாதி இல்லை. மதம் இல்லை. சண்டை, சச்சரவுகள் இல்லை.

நாம் வார்த்தைகளில் மட்டும்தான் பெண்ணியம் பேசுகிறோம். ஆனால் நம் கண் முன்னால் ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு 33% சதவிகிதத்துக்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். அங்கே... ஆண்டாண்டு காலமாக நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!

எந்தப் பெரியாரை அறிந்தார்கள் இந்த எளியவர்கள்?!

- மு.நியாஸ் அகமது

இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!
 
இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!
இங்கே நூறு சதவிகிதமும் பெண்களுக்கே!