அதிரசம், அச்சு முறுக்கு, கை முறுக்கு... வருஷா வருஷம் இதுதேன் தீவாளிப் பலகார மெனு. தாயம்மா ஆச்சி, நடுங்கற கையை வச்சு நெளி நெளியா முறுக்குச் சுத்துறப்ப, நாங்க எல்லாம் வட்டமா உக்காந்து வாயப்பொளந்து பாத்துக்கிட்டிருப்போம். மாவு பிசையறப்பவே, 'உப்புப் பாக்குறோம்'னு உருட்டித் தின்னுப்புட்டு, முதல் முறுக்கை சூடு ஆறறுதுக்கு முந்தி எடுத்துத் திங்க முண்டியடிக்கையில, ''பக்கிகளா... எண்ணெய்ச் சட்டியில விழுந்து தொலச்சுடாதீக... ஆக்கப் பொறுத்தவுக, ஆறப் பொறுக்கக்கூடாதா?''னு ஆச்சி அன்னிக்குச் சொன்னது வார்த்தை மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் வழிகாட்டினு இப்பப் வெளங்குது.
தீவாளி விடிகாலை... ஒட்டுக் கோவணத்தோட உடம்பெல்லாம் எண்ணெய் வழிய ஒவ்வொருத்தரா நிக்க, அத்தனை பேருக்கும் வெந்நீர் விளாவி, சீயக்காய் தேச்சு, 'குளிச்சு விடுற' ஆத்தாவோட பாசம், இன்னிக்கும் கண்ணுக்குள்ள ஈரமாக் கசியுது.
சட்டையோட 'காலர்'ல மஞ்சளைத் தடவி சாமி கும்பிட்டு, பார்க்குற பெருசுக கால்லயெல்லாம் விழுந்து எந்திரிச்சு, எட்டணா, நாலணானு தேத்தி, சாயந்தரம் சினிமாவுக்குக்காக ஓடி ஓடிச் சம்பாதிச்சு காசு சேக்கற அந்தச் சொகம்... இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு இல்லாமயே போயிருச்சேத்தா!
''என்ன பகல் கனவா? கௌம்புங்க... ஊர் உலகமே ஷாப்பிங்கை முடிச்சாலும் உங்களுக்குத் தீபாவளியைப் பத்தின நெனப்பே இருக்காதே''
- வீட்டம்மா பரபரக்கறாக. எம்புத்திரன், ''என் கையில ஒரு 'பைவ் தௌஸண்ட்' வெட்டுங்க... ஃப்ரெண்ட்-ஸோட நான் 'பர்ச்சேஸ்' பண்ணிக்கிறேன். அப்புறம், தீபாவளி ஹாலிடேஸ்ல நாங்க ரெண்டு நாள் ஜாலி ட்ரிப் போலாம்னு இருக்கோம். இப்பவே சொல்லிட்டேன்''னு முடிவெடுத்துப் பேசுறான்.
ஆத்தீ... கடை வீதியில எம்புட்டுத் திருவிழாக் கூட்டம்! அப்போவெல்லம் தீவாளிக்கு புதுப்படந்தேன் ரிலீஸ் பண்ணுவாக. இப்ப விதவித புடவைகளயும்ல ரிலீஸ் பண்ணுறாக?! அந்த விளம்பரங்கள சுட்டிக்-காட்டி பேசிக்கிட்டே அய்யாமாருகளை கடைக்குள்ள கூட்டிக்கிட்டு போறாக அம்மாமாருக!
''ராஜா சார்! டி.வி-யில தீபாவளி பட்டிமன்றம் இருக்குல்ல?! அன்னிக்கு காலை அருளுரையில ஆரம்பிச்சா இருட்டுற வரை நாங்க டி.வி-யை விட்டு எந்திரிச்சுப் போறதில்லை...''
- வழிமறிச்சுப் பேசுது ரசிகர் குடும்பம்.
இப்பல்லாம் தீவாளி ரொம்ப மாறிப் போயிருச்சோனு தோணுதப்பே!
குடும்பமா கூடி, உறவுகளா உட்கார்ந்து, ஊர்க்கதை சொல்லி, வேடிக்க பேசி, ஒலவச்சு சாப்பிட்டு, வெடி வெடிச்சு விளையாடினு... அந்த சந்தோஷமெல்லாம் மாயமா மறஞ்சு போச்சேத்தா?!
'ஹேப்பி தீபாவளி...' - வாழ்த்து அட்டைக்குப் பதிலா வந்து குவியுது செல்போன் மெஸேஜு! 'பார்ட்டி ரெடி'னு பார்ல குவியுறாக இளவட்டங்க. 'எண்ணெய் குளியலா? ம்ஹ¨ம்... நோ சான்ஸ்' - எதிர்த்துப் பேசுதுக இத்துனூண்டு பொடிசுங்க. முறுக்-கும் அதிரசமும் காணாமப்போயி, ஸ்வீட் ஸ்டால்ல அரை நாளா வரிசையில நின்னு வாங்கிட்டு வந்த சுவீட்டுக பெட்டி பெட்டியா ஃப்ரிட்ஜுல கெடக்குது. 'இந்தத் தீபாவளிக்காவது பேரனைக் கூட்டிக்கிட்டு யு.எஸ்-லேர்ந்து எம்புள்ளை வருவானா?'னு ஏங்கித் தவிக்கறாக சீனியர் சிட்டிசன்க. திரை நட்சத்திரங்களோடு திகட்டத் திகட்டத் தீபாவளி கொண்டாடுதுக டி.வி. சேனல்க.
எளிமையும் இனிமையுமா இருந்த நம்ம தீவாளி, இப்போ இரைச்சலும் சத்தமும் பகட்டும் பரபரப்புமா மாறிப்போச்சு!
ப்ச்... எங்கிட்டுத் தேடியும் கெடைக்கவா போகுது... நம்ம இளமைக்கால தீவாளி சந்தோஷங்க?!
|