ஒரு பெண்ணின் கையில், மெஹந்தி கோன் கொண்டு கலைமேளா நிகழ்த்தியபடியே நம்மிடம் பேசிய சிவாமேரி எனும் இளைஞர், "எங்களுக்கெல்லாம் சீனியர்... சிவம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிழைப்புத் தேடி சென்னை வந்தார். சரியான வேலை கிடைக்கவில்லை. உடனே, தி.நகர் பகுதியின் ஓரிடத்தில், 'மெஹந்தி போட்டு விடப்படும்' என்று போர்டை போட்டார். இப்போது, தி.நகர் ஏரியாவில் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மெஹந்தி போட்டுவிடும் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறோம்" என்று குஷியோடு சொன்னார்.
ஒரு பெண்ணின் கைகளில் முதலில் ஒருவித ஆயிலைத் தடவிவிட்டு, அதில் மெஹந்தி போட ஆரம்பித்த வினோத், '‘இது மெஹந்தி ஆயில். இதைத் தடவினால், நன்கு சிவப்பதோடு, டிசைன்கள் சீக்கிரம் அழியாமலும் இருக்கும். இங்கே கிடைக்கும் மெஹந்தி கோன்கள் அவ்வளவாக சிவப்பதில்லை. அதனால் டெல்லியிலிருந்தே வரவழைக்கிறோம். எங்களிடம் டெல்லி, அரேபியன், பாம்பே, ராஜஸ்தானி என்று நிறைய டிசைன்கள் இருக்கின்றன. அரேபியன் டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இதைத் தவிர... பிள்ளையார், சிவன் என்று கஸ்டமர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் போட்டு விடுவோம். இரு கைகளின் இரு பகுதியிலும் போட்டு விடுவதற்கு 300 ரூபாய். இரண்டு கால்களுக்கு 200 ரூபாய். ஆக மொத்தம் 500 ரூபாய் வாங்குகிறோம். இதைத் தவிர, படங்கள், ஓவியங்கள் என்று நுணுக்கமான வேலைப்பாடுகள் இருந்தால்... அதற்கு தக்கவாறு ஆயிரம் ரூபாய்க்கு மேல்கூட வாங்குவோம்" என்று சொல்லிக்கொண்டே, மயக்கும் டிசைனைப் போட்டு அசத்தினார் இரண்டு நிமிடங்களில்.
"உக்காருங்க", "கை நீட்டுங்க", "பரவாயில்லை" - இந்த மூன்று தமிழ் வார்த்தைகளை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு சக்கை போடு போடுகிறார்கள்.
- ரேவதி
படங்கள் எம்.உசேன்
|