Published:Updated:

வதம் செய்ய விரும்பு !

வதம் செய்ய விரும்பு !

வதம் செய்ய விரும்பு !

வதம் செய்ய விரும்பு !

Published:Updated:

வதம் செய்ய விரும்பு !
வதம் செய்ய விரும்பு !
வதம் செய்ய விரும்பு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வதம் செய்ய விரும்பு !

கொடுமையே வடிவான நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி!

இன்று நம்மைச் சுற்றி நிகழும் சமூக சீர்க்கேடுகள், துயரங்கள், துரோகங்கள், ஊழல்கள் எல்லாம் ஒரு கணமேனும் நம்மை உலுக்கிப் போட்டிருக்கும். நெஞ்சழுத்தும் பாரத்தில் கண்ணில் நீர் பூக்கச் செய்திருக்கும். அந்த அவலங்களுக்கு எதிராக கோபம் பொங்கச் செய்திருக்கும். அதற்கு காரணமானவர்களைக் கண்டு, ரத்தம் கொதித்திருக்கும். இறுதியில், 'இந்த இந்திய நாட்டில் நாமும் ஒரு பிரஜை என்ற அடிப்படை உரிமையைத் தவிர வேறெந்த அதிகாரமும் இல்லை நமக்கு' என்ற உண்மை உறைத்து, அந்த ரௌத்திரம் வடிந்து விட்டிருக்கும்.

அதேசமயம், 'எனக்கு மட்டும் அந்த அவலங்களை, அதனை அரங்கேற்றுபவர்களை வதம் செய்யும் சக்தி இருந்தால்...' என்று சமயங்களில் நினைத்துப் பார்த்திருப்போம். அப்படி தான் உணர்ந்த சமூகத் தவறுகள் எவை என சிந்தனையாளர்கள் சிலரிடம் கேட்டோம்!

சாந்தகுமாரி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர், சென்னை

''நதியைப் பெண்ணாக்கினோம். நாட்டைத் தாயாக்கினோம். நடைபாதை கற்களைகூட பெண் தெய்வங்களாக்கினோம். ஆனால், ரத்தமும் சதையுமாக கண் முன் உலாவும் பெண்களை மட்டும் ஒரு கவர்ச்சியான பாலினமாகவே பார்க்கிறது இந்தச் சமுதாயம். ஒரு பெண்ணுக்கு இழைக்கக்கூடியதிலேயே பெரிய அநீதி... பாலியல் பலாத்காரம். ஆனால், நம்நாட்டில் நித்தமும் பதிவாகும் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை பல நூறு!

வதம் செய்ய விரும்பு !

மன்னிப்பே அற்ற இந்தக் பெருங்குற்றத்தினை செய்யும் பாவிகளிலும் கொடும்பாவிகள்... பள்ளி மாணவிகளையும் பால் மணம் மாறாத பச்சிளம் சிறுமி களையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் கெடுமதிக் காரர்கள்தான். உன்னதமான ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு தன் மாணவிகளையே பலாத்காரம் செய்யும் வக்கிரபுத்தி வஞ்சகர்களைக் கொஞ்சமும் மன்னிக்கக் கூடாது.

நாளிதழ்களில் தினமும் இந்த சமூகத்தின் வக்கிரங்களை அச்சில் தரும் அத்தகையச் செய்திகளைப் படிக்கும்போது, 'ச்சீ... சண்டாளப்பாவிகளா...' என்று நெஞ்சம் குமுறும் எனக்கு. 'இவனுங்களையெல்லாம்...' என்று வதம் செய்யத் துடிக்கும் மனம். அந்த காமுக அயோக்கியன்கள் எல்லாம் நவீனகால நரகாசுரர்கள். அத்தகையோரின் உயிர்களை கிள்ளி எறியக்கூடிய வதம், மற்றவர்களுக்கும் பயம் கொடுக்கும். என் சகோதரிகளைக் காப்பாற்ற அந்த வரம் வேண்டுமெனக்கு!''

சமூக ஆர்வலர் சின்னப்பிள்ளை, நிறுவனர்- களஞ்சியம், மதுரை

''குடும்பங்களை எல்லாம் நாசமாக்கற அந்தக் குடிக்கு மனுச உயிருக பலியாகற கொடுமையைப் பாக்கும்போதெல்லாம் எனக்கு நெஞ்சுக்குழிக்குள்ள சோறு எறங்காது. 'அடப்பாவி மக்கா'னு மனசு கெடந்து அடிச்சுக்கும்.

நான் பதினோரு மாநிலங்களுக்குப் போயி எங்க 'களஞ்சியம்' அமைப்பு சார்பா வேலை செய்யறப்போ, நான் புழங்குற மனுஷங்க எல்லாம் நெதம் சாப்பாட்டுக்கே வழி இல்லாதவக. ஒருநா மூணு வேள முழுசா சாப்பிட்டா அதுவே அவுகளுக்கு தீபாவளி, பொங்கலுதேன். ஆனா, கூலி வேல பார்த்துக் கெடைக்கற இத்தினி காசையும் அந்த வீட்டு ஆம்பளைக சாராயக்கடையில கொடுத்து அழிக்கறதும், அதனால அவுக குடும்பமே அழியறதும்வங்கொடுமை. போதாக்கொறைக்கு, அரசாங்கமும் டாஸ்மாக் கடைனு தொறந்து வச்சு காசைப் புடுங்குது. போன வருசம் இருபது சதவிகிதமா இருந்த டாஸ்மாக் வருமானம் இந்த வருசம் முப்பத்தி மூணு சதவிகிதமா உயர்ந்துடுச்சுனு பெருமைப் பட்டுக்கறாங்க. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல?!

நானும் இந்தக் குடிக்கு எதிரா உள்ளூர் போராட்டங்கள்ல ஆரம்பிச்சு கலைஞர் அய்யாகிட்ட மனு கொடுக்கறது வரைக்கும் முட்டிப் பார்த்தேன். 'ஆத்தா... லட்சக் கணக்குல முதல் போட்டு நடக்கற தொழிலு...'னு நியாயம் பேச வர்றாக சில பெரிய மனுஷங்க. அய்யா... உங்க வியாபாரத்துக்கு ஏழ, பாழைக வருமானத்தை, வாழ்க்கையைப் பறிக்கறது நியாயமா?

இப்போ நான் போற ஊருகள்ல எல்லாம் இந்தக் குடியோட கொடுமையத்தேன் பேசி மாய்ஞ்சுக்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஐந்நூறு பேர 'குடி ஒழிப்பு மறுவாழ்வு மையத்'துல சேர்த்துவிட்டிருக்கேன். ஆனாலும், இது பத்தாது... வேரோட வெண்ணி ஊத்தி அந்த பாழாப்போன குடிய அழிக்கணும்னு எனக்குள்ள ஆங்காரமா வருது.

எனக்கு மட்டும் பவரு இருந்துச்சுனா, நம்ம குடியக் கெடுக்கற அந்தக் குடியத்தேன் இந்த ஒலகத்துல இருந்தே ஒழிச்சு வதம் செய்வேன்!''

உ.வாசுகி, மாநில செயலாளர் - ஜனநாயக மாதர் சங்கம்

வதம் செய்ய விரும்பு !

'' 'நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை' என்பார்கள். அந்த நலிந்தோர்தான் இங்கு நம் இந்திய தேசத்தில் நீக்கமற நிறைந்துள்ளார்கள். ஆனால், 'இந்த பணக்கார உலகத்தில் வாழ உனக்கு தகுதியில்லை... ஓடிப்போ' என்று அவர்களிடம் அனுதினமும் ஆணவம் முறுக்குகிறது விலைவாசி உயர்வு. அதை வதம் செய்யும் வலிமை பெற்றுவிட்டால், வேறொன்றும் வேண்டாம் எனக்கு!

இதோ... பண்டிகை என்றவுடன் குதூகலத்துடன் கூடவே 'எங்கடா கடன் வாங்குவது?' என்ற கவலையும் வருகிறது. அர்ஜுன் செங்குப்தா கமிட்டி இந்த கவலைத் தீயில் எண்ணெய் ஊற்றுகிறது. இந்தியாவில் 77% மக்கள் இருபது ரூபாயில்தான் தங்களின் ஒரு நாளை நடத்துகிறார்களாம். இங்கு ஒரு கிலோ அரிசியின் விலை முப்பது ரூபாய், ஒரு கிலோ பருப்பின் விலை எண்பது ரூபாய். இவர்கள் எப்படி தீபாவளி கொண்டாட முடியும்? அட... தினமும் எப்படி குழந்தைகளுக்கு சத்துள்ள சோறு போட முடியும், படிக்க வைக்க முடியும், திருமணம் செய்து வைக்கமுடியும்? மொத்தத்தில், அவர்களின் வாழும் தகுதியை சுருக்கிக்கொண்டே வருகிறது இந்த விலைவாசி உயர்வு.

அந்த விலைவாசி அரக்கனைக் கட்டுப்படுத்த வழி, உணவு தானிய பொருட்களை 'முன்பேர வர்த்தகம்' எனும் சூதாட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதுதான். அதை மத்திய அரசு உணர்ந்திருந்தும் செயலில் இறங்காமல் மௌனம் காக்கிறது. மாநில அரசோ ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திலேயே திருப்தி கொண்டுவிட்டது. இந்த 77% மக்களுக்கு கிலோ 2 ரூபாய் என மாதம் 35 கிலோ அரிசி வழங்க 70 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. 'அந்த பணம் எங்களிடம் இல்லையே...' என அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது மத்திய அரசு. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு அளித்த 'சலுகை' மட்டும் 4 லட்சம் கோடி ரூபாய்!

வீணானதைப் பேசி பயன் இல்லை. 'வல்லமை தாராயோ' என்று வேண்டிக்கொள்கிறேன், விலைவாசி உயர்வை வதம் செய்வதற்கு!''

சமூக ஆர்வலர் ஷெரிஃபா, நிறுவனர் - 'ஸ்டெப்ஸ்' அமைப்பு, புதுக்கோட்டை

''தகுதிக்குண்டான வாய்ப்புகளும், பொறுப்புகளும், அங்கீகாரங்களும் 'பெண்' என்ற காரணத்தினால் என் சகோதரிகளுக்கு மறுக்கப்படுகிறது. அந்த சமுதாய பால் பாகுபாட்டை, ஓரவஞ்சனையை, அடக்குமுறையை வதம் செய்ய வேண்டும் என்று எப்போதும் என்னுள் ஊறிக்கொண்டேயிருக்கிறது ஒரு எண்ணம்!

வதம் செய்ய விரும்பு !

சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ற பெயரால் பெண்களை 'வீட்டுக்குள் அடைந்துகிட' என சிலர் பூட்டி வைக்கிறார்கள். இந்த விஷயத்தைக் கையில் எடுத்தால், மதம் சார்ந்த விஷயம் என்று எதிர்ப்பு கிளம்புகிறது.

மதம் மட்டுமல்ல... வீடு, பணியிடங்கள், நாடாளுமன்றம் என எல்லாமுமே பெண்களிடம் பாரபட்சம்தான் பேசுகிறது. சமூக வட்டத்தின் அரை வட்டம் பெண்கள். அவர்களுக்கு சமமான வாய்ப்பும் அதிகாரமும் வழங்கப்படவில்லையென்றால் எப்படிச் சமமான முன்னேற்றம் நிகழும்? சமூக வட்டத்தின் ஒரு பக்கம் மட்டுமே வளர்ந்தால் அது வளர்ச்சியா... வீக்கமா? பெண்ணுக்குத் திறமை இருக்கிறது. ஆனால், அவளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அந்த வாய்ப்புகள் வழங்கப்படாத ஆதிக்க சிந்தனையைத்தான் வதம் செய்வேன் நான்!''

- நாச்சியாள்

படங்கள் கே.கார்த்திகேயன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சீரியஸான இவர்களின் வதங்கள் மற்றும் வாதங்கள் உங்களை ரொம்பவே சிந்திக்க வைக்கும். அடுத்து வரும் பக்கங்களில் இதேபோல சிந்திக்க வைப்பதோடு, 'குபீர்' என்று உங்களை சிரிக்க வைக்கும் வகையிலும் பிரபலங்களின் 'வதங்கள்' வரிசை கட்டுகின்றன... கொண்டாடுங்கள்!

வதம் செய்ய விரும்பு !
 
வதம் செய்ய விரும்பு !
வதம் செய்ய விரும்பு !