வருஷமெல்லாம் உழைத்துக் களைத்த உடம்பை, கிடைத்த சில நாள் அவகாசத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள குடும்பமாகக் கிளம்பி வந்த அந்த உயிர்களை, தண்ணீருக்குள் கரைத்துவிட்ட விதியை என்ன சபித்தும் மாளாது.
விதியா...? இல்லை... தண்டனைக்குரியது விதியல்ல! மனித உயிர்களின் மீது அத்தனை அலட்சியமாக இருந்த கேரள சுற்றுலாத் துறையும் அதில் இயங்கும் ஊழியர்களுமே!
குறிப்பிட்ட அந்தப் படகு சவாரி தலத்தில், படகுகளின் தரத்தை அவர்கள் பரிசோதித்திருக்க வேண்டும்; பாதுகாப்பு நடவடிக்கைக்காக, லைஃப் ஜாக்கெட் தந்திருக்க வேண்டும்; படகை இயக்குபவர்களுக்குத் தேவையான அறிவுரைகளைத் தந்து தயார்படுத்தியிருக்க வேண்டும்; இத்தனை பேர்தான் இதில் ஏறவேண்டும் என்பது போன்ற பாதுகாப்பு விதிகளை கண்டிப்புடன் கடைபிடித்து, டிக்கெட் கவுன்ட்டரில் அளவான டிக்கெட் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும்; படகில் ஏற்று பவராவது கூட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்; கடைசியாக, டிரைவராவது அதை கவனத்தில் கொண்டு எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், இங்கு தலைமைப் பொறுப்பு முதல் கடைநிலை ஊழியர்கள்வரை பொறுப்பினை தவறவிட, அதற்கு விலையாக நாற்பத்தைந்து உயிர்கள் பறிபோயிருக்கின்றன!
இன்னொரு பக்கம், குற்றத்துக்கு காரணம் அரசின் அலட்சியம் மட்டுமல்ல... நம் மக்களின் அவசரத்தனமும் அறியாமையும்தான். கூட்டத்துக்கு மேல் கூட்டமாக படகில் முண்டியடித்து ஏறியவர்கள், 'இத்தனை பேரை ஏற்றுகிறார்களே... படகு தாங்குமா? முதலுதவி சாதனங்கள் எல்லாம் இருக்கின்றனவா? சற்றுக் காத்திருந்து அடுத்த டிரிப்பில் செல்வோமா?' என்றெல்லாம் யோசிக்கத் தவறியது குற்றம்தானே! என்னதான் சுற்றுலா சந்தோஷத்தில் இருந்தாலும், தம் பாதுகாப்பைப் பற்றி சில நொடிகள் சிந்தித்திருந்தால், இந்த பேரழிவு நேர்ந்திருக்காதே!
போட்டிங் மட்டுமல்ல, இங்கு பஸ், ரயில், ஆட்டோ, ஷேர் ஆட்டோ என்று எல்லா சாதனங்களிலும் அளவுக்கு மிஞ்சி ஏற்றுவது, ஏறுவதும்... பின் விபத்து நடந்தபின் புலம்புவதும் நமக்கு வாடிக்கையாவிட்டது!
சில தவறுகளை நாம் உணரும்போது, திருந்துவதற்கான காலம் கடந்திருக்கும். விபத்துக்களும் அப்படித்தான்!''
படம் என்.விவேக்
|