"தூத்துக்குடியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கு, சென்ற மாதம் ரெட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குறை மாதத்தில் பிறந்த அந்தக் குழந்தைகளை மருத்துவமனையில் உள்ள இன்குபேட்டரில் வைத்திருக்கிறார்கள். கடந்த 8-ம் தேதி, ரேவதியும் அவருடைய தாயாரும் சேர்ந்து, அந்த பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தை நெறித்தும், பிளேடால் கீறியும்... (ஐயோ... அதற்குமேல் எழுதவே கை நடுங்குகிறது...) கொலை செய்திருக்கிறார்கள்!"
"நினைக்கும்போதே நெஞ்சைப் பதற வைக்கும் பயங்கரம் இது!
ஒரு பக்கம் 'சந்திரயான்' பெருமையை மார் தட்டிக்கொள்கிறது நம் சமூகம். இன்னொரு பக்கம் பெண் சிசுக்களை அழித்து மாரடிக்கிறது! அந்த வளர்ச்சி கொடுக்கும் சந்தோஷத்தை விட, இந்த அறியாமை தரும் வேதனைதான் அதிகமாக இருக்கிறது எனக்கு!
எந்தக் கொடூர கொலைகாரனும்கூட, பச்சிளம்பிள்ளையைக் கொல்லத் துணியமாட்டான். ஆனால், ஒரு தாய், அவளின் தாயுடன் சேர்ந்துகொண்டு தான் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்த சேதியில், மனம் கொந்தளித்துப் போகிறது. இருந்தாலும், அந்த கொலைக்கான பின்னணியை ஆராயும்போது, அந்தப் பெண்கள் மற்றும் நம் சமுதாயத்தின் நிலைமை குறித்த வருத்தங்கள் இன்னும் கூடிப்போகின்றன. சொல்லப் போனால், அந்த குழந்தைகள் பிறப்புகூட, அவள் விருப்பத்தின் அடிப்படையில் எடுத்த முடிவாக இருக்காது. தனக்கு ஒரு குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பதை சுயமாக முடிவு செய்ய முடியாத நிலையில்தான் இன்னும் பெண் இருக்கிறாள்.
கொலை, நினைத்துப் பார்க்க முடியாத குற்றம், வேதனைதான். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்களைப் பொறுத்தவரையில், கொலையைவிட பயங்கரமாக பெண் குழந்தை வளர்ப்பு அவர்களுக்கு இருந்திருக்கிறது. 'பொட்டயப் பெத்துப் போட்டுட்டா' என்று சுற்றத்திடம் பேச்சு வாங்கி, அந்த கண்ணீருக்கு நடுவிலேயே அந்தக் குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு திருமணத்துக்கும் அதற்குப் பின்னும் சீர் செய்து செய்து ஓய்ந்து... இந்த அவஸ்தைகளுக் கெல்லாம் அஞ்சி, அறியாமையால் அவர்கள் எடுத்தது, கொலை என்னும் கொடுமையான முடிவாகியிருக்கிறது!
|