உணவுப் பொருட்களில் வண்ணங்கள் எந்த அளவில் இருக்கலாம்... எவையெல்லாம் இருக்கலாம் என்பதற்காக இந்திய அரசில் 'ப்ரிவென்ஷன் ஆஃப் ஃபுட் அடல்ட்ரேஷன்' என்ற சட்டப்பிரிவின் கீழ் சில கெமிக்கல்கள் அனுமதிக்கப்படுகின்றன. இவற்றை 'பெர்மிடட் கலர்' என்பார்கள். பிரில்லியன்ட் புளூ (ஊதா நிறம்), அமரந்த் மற்றும் எரித்தோஸின் (சிவப்பு நிறம்), டார்ட்ராஜின் (மஞ்சள்), ஃபாஸ்ட் கிரீன் (பச்சை) ஆகியவை அனுமதிக்கப்பட்ட கெமிக்கல்கள்.
தரமான கடைகளில் ஸ்வீட் வாங்கும்போது, அந்த ஸ்வீட்டில் என்னென்ன கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது என்பதை அட்டைப் பெட்டியிலேயே குறிப்பிட்டிருப்பார்கள்.
ஸ்வீட் மற்றும் உணவுப் பொருட்களில் பளீரிடும் வண்ணங்கள் உண்டாக்குவதற்காக கெமிக்கல் சேர்க்கப்படுவதால், உடலுக்கு எந்த ஒரு நியூட்ரிஷியன் வேல்யூவும் கிடையாது. கண்ணைக் கவர்வதற்காக மட்டுமே கலக்கப்படுகின்றது.
அனுமதிக்கப்படாத வண்ணங்கள் சேர்க்கப்பட்டிருந்தால்... அது உடலுக்கு பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய வண்ணங்கள், 'நான்பெர்மிட்டட் கலர்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
அந்த வரிசையில் வரும் 'மெட்டானில் யெல்லொ மற்றும் லீட் குரோமேட்' (மஞ்சள் நிறம்) ஆகியவை கேன்சரை ஏற்படுத்தக்கூடிய கெமிக்கல்கள் என்பதை நாம் உணரவேண்டும். ரோடமின் பி (பிங்க் கலர்) எனப்படும் கெமிக்கல், குடல் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரஞ்சு டூ (ஆரஞ்ச் நிறம்) கிட்னியை பாதிக்கும். காங்கோ ரெட் (சிவப்பு நிறம்) என்பது கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய கெமிக்கல்களை 'கோல் டார் டைஸ்' (சிஷீணீறீ tணீக்ஷீ பீஹ்மீs) என்று சொல்வார்கள்.
சில வகை ஸ்வீட்களில் வெள்ளி ஜரிகை போன்று பளபளப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்பட்ட சில்வர் ஃபாயில். இந்த சில்வர் ஃபாயில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் என்ற அளவீட்டில் வருகிறது. அதேசமயம், இதன் விலை அதிகம் என்பதால், அலுமினியம் ஃபாயில் என்பதைக் கலப்படம் செய்கிறார்கள். அலுமினிய ஃபாயிலுடன் சேர்ந்த ஸ்வீட்டைச் சாப்பிடும்போது... அது வயிற்றுக் குழாயைப் பாதிக்கும். இரைப்பையில் சேதம் ஏற்படுத்தும். இதனால், ஜீரண சக்தியும் பாதிக்கப்படும்.
'சரி, கடையில்தான் வாங்கவில்லை... வீட்டிலேயே தயாரிக்கிறோம்' என்று நீங்கள் முன்வந்தால்... அது நூற்றுக்கு நூறு சரியான முடிவு. அதேசமயம், அங்கேயும் கேசரி பவுடர் மற்றும் ஜிலேபி பவுடர் போன்றவற்றை நீங்கள் கட்டாயம் உபயோகிப்பீர்கள். அந்தப் பொருட்களிலும் கலப்படம் நடத்தப்படுகிறது. இத்தகைய பவுடர்களில் கலப்படம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவது கடினம்" என்று சொன்ன கீதா,
"ஆகமொத்தம், வெறுமனே நிறத்துக்காக மட்டும் உணவுப் பொருட்களில் இப்படியெல்லாம் கெமிக்கல் கலக்கப்படுவதால் ஆபத்துகள்தான் அதிகம். எனவே, வண்ணங்களில் மயங்காமல்... இயல்பான நிறங்களிலேயே ஸ்வீட் மற்றும் உணவுப் பொருட்களைத் தயாரித்து உண்பதுதான் எப்போதுமே நல்லது" என்ற அறிவுரையையும் தந்தார்.
உணவுப் பொருட்களில் நடத்தப்படும் கலப்படம், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி கடந்த சில இதழ்களாகப் பார்த்தோம். இதுவரை பார்த்தது... கடுகளவே! ஆனால், இன்னும் இருப்பதோ கடலளவு!
ஆக, நம்மைச் சுற்றி பலவகைகளில் 'விஷ வலை' விரிக்கப்பட்டிருக்கிறது. கூடுமானவரையில், அவற்றைஎல்லாம் கண்டுபிடித்து நாம்தான் உஷாராக இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் கடைகளுக்கு ஓடி, ரெடிமேடாக கிடைக்கும் மாவு உள்ளிட்ட பொருட்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் என்று வாங்கிக் குவிக்காமல், முடிந்தவரை நாமே தயாரிக்கக்கூடிய பொருட்களை மட்டுமாவது தயாரித்துக் கொள்வது நல்லது. உதாரணத்துக்கு கோதுமை மாவு, மிளகாய்த்தூள்...
முடிவு உங்கள் மனதில்தான் - ஆம், எதற்கும் நீங்கள்தான் மனது வைக்க வேண்டும்!
படங்கள் வி.செந்தில்குமார்,
வீ.நாகமணி
|