Published:Updated:

பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

Published:Updated:

சுவாமி சுகபோதானந்தா
பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் !

உங்களை உங்களுக்கே உணர்த்தும் உற்சாகத் தொடர்....

பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

எந்த ஊருக்குப் போனாலும் சரி, அங்கே நான் சந்திக்கும் குடும்பத் தலைவிகள் பலரும் இப்படிக் குறைப்பட்டுக்கொள்வதுண்டு... ''சுவாமி... காலையில ஆபீஸ் போனா இரவு இருட்டினதுக்கு அப்பறம்தான் வீடு திரும்ப முடியுது. அதனால நாள், கிழமைக்கு பூஜை அறையை சுத்தம் செஞ்சு, சாமிக்கு பூஜைகள் செய்ய முடியல. கிருத்திகை, அமாவாசை மாதிரியான நாட்கள்லகூட சமையல் செஞ்சு சாமிக்கு நைவேதித்யம் செய்ய முடியல. அதனால நாளுக்கு நாள் குற்ற உணர்ச்சி அதிகமாகிட்டே இருக்கு!''

உலகத்தில் வேறு யாருக்குமே கிடைக்காத பாக்கியம், காண்டீபனான அர்ஜுனனுக்கு உண்டு. பகவான் கிருஷ்ணர் நமக்கு சொல்லியிருக்கும் பாடங்கள் அனைத்துமே அவனை முன்னிலைப்படுத்தி சொல்லப்பட்டதுதான். அர்ஜுனன் பல பாடங்களைக் கற்றவன். பகவான் கிருஷ்ணனிடம் நேரிடையாக பகவத்கீதை கேட்டவன். ஆனாலும், அவன் முழுமையாகப் பண்படவில்லை!

'நான் நாள் தவறாமல் பூஜைகள் செய்கிறேன்... உடலும் உள்ளமும் உருக இறைவனை வழிபடுகிறேன்' என்றிருந்த அர்ஜுனனின் பக்தி, ஒரு கட்டத்தில் செருக்காக மாறியது. 'நான் எத்தகைய பக்திமான் தெரியுமா?' என்று அவன் அனைவரிடமும் தம்பட்டம் அடிக்க ஆரம்பித்தான். இந்த மாற்றத்தை பகவான் கிருஷ்ணர் கவனிக்காமலில்லை.

ஒருநாள் அர்ஜுனனும் பகவானும் நகர்வலம் சென்றபோது, வண்டிக்காரனே இல்லாத ஒரு பெரிய மாட்டுவண்டி... வாசமுள்ள, கண்ணைப் பறிக்கும் வண்ணப்பூக்களை ஏற்றிக்கொண்டு தானாகப் போய்க்கொண்டிருந்தது.

'இந்தளவுக்கு வாசனைமிக்க பூக்களை நான் எனது நாட்டில் பார்த்தில்லையே... இதெல்லாம் எங்கிருந்தது வந்தது... எங்கு சென்று கொண்டிருக்கிறது?' என்று அர்ஜுனன் ஆவலாகி, மாட்டு வண்டியைப் பின்தொடர்ந்தான். வழியில் இதேபோல பல வண்டிகள் பூ ஏற்றிக் கொண்டு வர, எல்லா வண்டிகளும் ஒன்றாகச் சேர்ந்து பூவுலகையும் ஏழுலகையும் கடந்து, வைகுண்டம் நோக்கிச் சென்றன.

''ஆண்டவனுக்கு நான் செலுத்திய பூக்களை கொண்டு போகாமல், ஏன் இந்த மலர்களைக் கொண்டு செல்கின்றன இந்த மாட்டு வண்டிகள்... இதெல்லாம் யார் செலுத்திய மலர்கள்?'' என்று எதிர்பட்ட கருடாழ்வாரிடம் கோபமாகக் கேட்டான் அர்ஜுனன்.

''இதெல்லாம் பாண்டவ புத்திரனான பீமன், இறைவனுக்கு அர்ப்பணித்த காணிக்கை!'' என்று வந்த பதில், அர்ஜுனனை திகைக்க வைத்தது. ''பீமனா... இருக்கவே முடியாது! சாப்பாட்டுப் பிரியரான என் சகோதரன், உணவு அருந்துவதற்கு முன் அவசர அவசரமாக ஒரே ஒரு நிமிடம்தான் பிரார்த்தனை செய்வார். அவர் இத்தனை மலர்கள் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்திருக்க முடியாது. பீமனைவிட நான்தான் அதிக நேரம் பூஜை செய்பவன். விதம்விதமான வாசமுள்ள மலர்கள் கொண்டு பூஜிப்பவனும் நான்தான்'' என்று அவரிடம் கோபமாக சொல்லிவிட்டு, பகவான் கிருஷ்ணரிடம் நியாயம் கேட்டான்.

அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? ''நீ எனக்கு எத்தனை மணி நேரம் பூஜை செய்கிறாய் என்பது முக்கியமில்லை. எத்தனை மலர்களைக் கொண்டு பூஜை செய்கிறாய் என்பதும் முக்கியமில்லை. என்னென்ன நைவேத்தியங்களைப் படைத்து பூஜை செய்கிறாய் என்பதும் முக்கியமில்லை. உண்மையான பக்தியோடு வழிபடுகிறாயா... இல்லை, ஊரார் மெச்சுவதற்காக வழிபடுகிறாயா என்பதுதான் முக்கியம். 'பெரிய பக்திமான்' என்று ஊரார் மெச்ச வேண்டும் என்று பூஜைகள் செய்தால்... உனக்கு ஆணவம்தான் அதிகரிக்கும். ஆணவம் இருக்கும் இடத்தில் ஆண்டவனாகிய நான் இருக்க மாட்டேன்!'' என்று சொன்னார் கிருஷ்ணர்.

எப்போதுமே கதைகள் சொல்லி ஒரு விஷயத்தை விளங்க வைக்கும் முயற்சியில் ஒரு ஆபத்து இருக்கிறது. கதை என்ன நோக்கத்துக்காக சொல்லப் படுகிறதோ அந்த நோக்கம் பல சமயங்களில் தவறுதலாகக்கூட புரிந்து கொள்ளப்பட்டுவிடும். மேலே சொல்லப்பட்டிருக்கும் கதை, 'அமாவாசை, கிருத்திகைக்கூட விளக்கு ஏற்றி பூஜை செய்யாமல் இருப்பதில் தவறில்லை' என்று நியாயப்படுத்துவதற்காக அல்ல. 'இவள் ஒரு பெரிய பக்தை' என்று ஊரார் மெச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் பூஜை செய்யாதீர்கள். உண்மையான பக்தியோடு இறைவனை ஒருநிமிடம் நினைத்துக் கொண்டாலும் அது பூஜைதான். இதுவே அர்ஜுனனின் அகம்பாவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

பொதுவாக, பூஜை நேரத்தை 'கலெக்டர் நடத்தும் குறைதீர்க்கும் நேரம்' போல எண்ணி பலர் குழப்பிக் கொள்கிறார்கள். மளிகை கடையில் லிஸ்ட் கொடுத்து பொருட்கள் கேட்பது போல, இறைவனிடம் ஒரு லிஸ்ட் கொடுத்து 'அதைக் கொடு இதைக் கொடு' என்று கேட்பதற்கு பெயர் எப்படி பக்தியாகவோ... பிரார்த்தனையாகவோ இருக்க முடியும்?

பௌத்த மதத்தைத் பின்பற்று கிறவர்களுக்கு தியானம்தான் மிகப் பெரிய பூஜை. கண்களை மூடி சிந்தனைகள் அற்று இருப்பதைத்தான் அவர்கள் தியானம் என்று கொண்டாடுவார்கள். 'சிந்தையை அடக்கி சும்மா இருத்தல் சுகம்' என்பார் வள்ளலார்.

நீங்கள் குழந்தையாக இருந்தபோது, குரோதம், விரோதம், கோபம் என்று எந்தவிதமான தீய எண்ணங்களும் இல்லாத மனது ஒன்று இருந்ததல்லவா? சிந்தனை யைக் குவித்து, அந்தக் குழந்தை மனதை உங்களுக்குள் தேடுங்கள். இத்தகைய தியானம் செய்கிறவர்களுக்கு குழப்பங்கள் தானாகவே விலகி, தெளிவு பிறக்கும். இத்தகைய தெளிவு பெற்றவர்கள் சோதனை அற்ற வாழ்க்கைக்காக ஏங்க மாட்டார்கள். வரும் சோதனைகளை கண்டு 'ஐயோ... பகவான் எனக்கு ஏன் எப்படி சோதனை கொடுக்கிறான்...' என்று புலம்பமாட்டார்கள்.

காலப்பந்தாட்டம் என்பது கால்பந்தாட்டம் போலத்தான். எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசைகளில் இருந்து எதிர்ப்புகள் வரும். அதேபோல எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத திசையில் இருந்து உதவிகளும் வரும். ஆனாலும் கையைக் கட்டிக்கொண்டு நிற்க முடியாது. கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று அலுத்து கொள்ளவும் கூடாது. சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கால்பந்தாட்டத்துக்கு பொருந்தும் சட்டத்திட்டங்கள் காலப்பந்தாட்டத்துக்கும் பொருந்தும்.

என்னைக் கேட்டால் உலகத்தின் மிகச் சிறந்த பிரார்த்தனை என்பது இதுதான்...

'இறைவா... என்னால் எதை மாற்ற முடியுமோ அதை மாற்றுவதற்கான சக்தியை எனக்குக் கொடு. என்னால் எதை மாற்ற முடியாதோ அதை ஏற்றுக் கொள்வதற்கான மனோபலத்தை எனக்குக் கொடு. எதை என்னால் மாற்ற முடியும்... எதை என்னால் மாற்ற முடியாது என்று பகுத்தறிவதற்கான அறிவை எனக்குக் கொடு!'

- அமைதி தவழும்...

சிந்தனை செய் மனமே...

நன்றாக யோசித்துப் பாருங்கள்... நாம் ஏன் பிரார்த்தனை செய்கிறோம்?

'அனலாக்' முறையில் இயங்கும் கைக்கடிகாரத்தைப் பிரித்து உள்ளே பார்த்தால், அதில் சிறிதும் பெரிதுமாக எண்ணற்ற சக்கரங்கள் சுழன்று கொண்டிருக்கும். ஒவ்வொரு சக்கரத்தின் அசைவுக்கும் எண்ணற்ற மற்ற சக்கரங்களின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கும். பகவான் படைத்த உலகத்தில் ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு சக்கரம் போலத்தான். கடிகாரத்தில் இருக்கும் சக்கரத்தை ரிப்பேர் செய்யவே நமக்குத் தெரியாது. அப்படியிருக்க... ஆண்டவனின் கையில் இருக்கும் பிரமாண்டமான கால இயந்திரத்தை எப்படி இயக்க வேண்டும் என்று நம்மால் எப்படி அவருக்கு யோசனை சொல்ல முடியும்? எனவே, 'இதை முடித்துக்கொடு, அதை தடுத்துவிடு' என்று இறைவனை கேட்காமல், முற்றிலுமாக நம்மை அவனிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த பிரார்த்தனை. அதனால்தான் ஆணவத்தை விட்டொழிக்கும் பாவனையாக இறைவனின் காலில் விழுந்து சரணாகதி அடைகிறோம். மொத்தத்தில், பிரார்த்தனை என்பது ஆண்டவனை மாற்ற அல்ல. நம்முடைய தவறுகளை திருத்திக் கொண்டு நாம் மாறுவதற்காகவே!

பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
 
   
   
பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ் !