Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

பிரீமியம் ஸ்டோரி

அனுபவங்கள் பேசுகின்றன!
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
அனுபவங்கள் பேசுகின்றன!
அனுபவங்கள் பேசுகின்றன!
வாசகிகள் பக்கம்

சீமெண்ணெய் சாக்கில் ஒரு சீட்டிங்!

நாங்கள் சகோதரிகள் நான்கு பேரும் விடுமுறைக்கு எங்கள் அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தோம். அக்கா கணவர், அலுவலகத்துக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டுக்கு வந்த ஒரு நபர், "ரேஷன்ல சீமெண்ணெய் ஊத்தறாங்க. சார் (அக்கா கணவர்) ரேஷன் கார்டும், காசும் வாங்கிட்டு வரச் சொன்னார்" என்று கூற... முன், பின் தெரியாத அவரிடம் காசு கொடுக்கத் தயங்கிய அக்கா, பணத்தை எங்களிடம் கொடுத்து, "கூடவே போய் வாங்கிட்டு வாங்க" என்று அனுப்பினார். சிறிது தூரம் சென்றவுடன், ஒரு இடத்தைக் காட்டி (வடிவேலு ஜோக்கில் வருவதுபோல கதவைத் திறந்தால் வெட்டவெளி), "இங்கதான் ஊத்தறாங்க... நீங்க உக்காருங்க. நான் வாங்கிட்டு வந்துடறேன்' என்று சொல்லிவிட்டுப் போனவர், போனதுதான்! தெரியாத அந்த ஊரில் ஒருவழியாக வீடு கண்டுபிடித்துத் திரும்பினோம் நாங்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன!

அக்கா கணவர் வந்தவுடன் விஷயத்தைக் கூற, "பணம் போனாலும் பரவாயில்ல... இவங்கள கடத்திட்டுப் போயிருந்தா..? முன்பின் தெரியாதவங்ககூட அனுப்பலாமா?" என்று என் அக்காவைத் திட்டித் தீர்த்தார். அதைக் கேட்டதும்... ''பணம் மற்றும் ரேஷன் கார்டோடு போயிற்று'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டோம்!

- ஜெ.ஷீலா, குளித்தலை


அவன்தான் மனிதன்!

ஒருமுறை காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றபோது, அங்கிருந்த எடை பார்க்கும் மெஷினில் வெளிநாட்டவர் ஒருவர் ஏறி நின்றார். நாணயத்தைப் போட்டு விட்டுக் காத்திருந்த பிறகுதான் தெரிந்தது, 'மெஷின் ரிப்பேர்' என்று! நாணயம் திரும்பி வரவேஇல்லை. அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால்... கோபம் பொங்க மெஷினை நாலு தட்டி தட்டிவிட்டுச் சென்றுவிடுவோம். ஆனால், அவர் என்ன செய்தார் தெரியுமா...? சட்டென ஒரு வெள்ளை தாளில் 'அவுட் ஆஃப் ஆர்டர்' என்று ஆங்கிலத்தில் எழுதி, அந்த மெஷின் மீது ஒட்டிவிட்டுச் சென்றார்.

அனுபவங்கள் பேசுகின்றன!

தான் ஏமாந்தது போகட்டும்... ஆனால், மற்றவர்கள் ஏமாறக்கூடாது என்று நினைத்து அவர் செய்த காரியம், பெயர் தெரியாத அந்த மனிதரின் மீது மரியாதையைக் கூட்டியது.

- வி.விஜயலட்சுமி, அய்யம்பேட்டை


வீடு தேடி வரும் வில்லங்கம்!

ஒரு பிரபல கம்பெனியின் 'கிளீனிங் பவுடரை' எங்கள் தெருவில் வந்து விற்றார்கள் சேல்ஸ் பெண்கள் சிலர். "கடையைவிட எங்ககிட்ட வாங்கினா இவ்வளவு டிஸ்கவுன்ட். கூடவே, ஒரு கிலோ பவுடருக்கு, அரை கிலோ பவுடர் இலவசம். புராடக்ட் புரமோஷனுக்காக இப்படி கொடுக்கறோம்" என்று கூற, 'நல்ல லாபம்' என்று வாங்கிவிட்டேன். இருந்தாலும் அந்தப் பெண்கள் சென்றபின், 'ஒருவேளை டூப்ளிகேட்டா இருக்குமோ' என்று சந்தேகப்பட்டு அந்த பாக்கெட்டை எடுத்துப் பார்க்க, டூப்ளிகேட்டேதான்! பிரபல கம்பெனியின் பாக்கெட் டிசைன், கலர் என்று அச்சு அசலாக இருந்த அதில், பவுடரின் பெயரில் ஒரு எழுத்து மட்டும் மாறியிருந்தது..

அனுபவங்கள் பேசுகின்றன!

தோழிகளே... வீட்டு வாசலில் வந்து பொருட்கள் விற்பவர்களிடம் வேண்டும் கவனம்!

- எஸ். ஹேமா, கோயம்புத்தூர்


தர்மசங்கட கூல் டிரிங்க்ஸ்!

அண்மையில் நானும் என் அக்காவும், அவருடைய மகனுடன் எங்கள் ஊரிலுள்ள பிரபலமான துணிக்கடைக்குச் சென்றிருந்தோம். ஒரு நடிகரின் பெயரால் சமீபத்தில் பிரபலமான டிரெஸ் மாடலைச் சொல்லி, "அது வேண்டும்'' என்று அவன் கேட்க, பணிப்பெண்ணும் சில மாடல்களைக் காட்ட ஆரம்பித்தார். அதற்குள், மற்றொரு பணிப்பெண் எங்களுக்கு கூல் டிரிங்க்ஸ் கொடுத்தார். 'வேண்டாம்' என்று மறுப்பதற்குள், அவன் கையில் எடுத்துவிட, வேறுவழியில்லாமல் நாங்களும் குடிக்க வேண்டியதாயிற்று.

அனுபவங்கள் பேசுகின்றன!

இந்நிலையில், நாங்கள் கேட்ட மாடல் டிரெஸ் தீர்ந்துவிட்டதாகக் கூறிய அந்த பணிப்பெண், வேறு சில மாடல்களைக் காட்ட, எங்கள் வாண்டோ, "அதுதான் வேணும்" என்று அழ ஆரம்பித்துவிட்டான். ஆனால், 'கூல் டிரிங்ஸை குடித்துவிட்டு, அங்கு எதுவும் வாங்காமல் போனால் மரியாதையாக இருக்காதே' என்பதால், மற்ற கடைகளைவிட இரு மடங்கு விலையுடனிருந்த சில உள்ளாடைகளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம். அவன் கேட்ட மாடல் டிரெஸ்ஸை, வேறு ஒரு கடையில் வாங்கினோம். தோழிகளே... தர்மசங்கடத்தைத் தவிர்க்க, இதுபோல 'கூல் டிரிங்' உபசரிப்புகளை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால்... முதலில் ஆடைகளை வாங்கிவிட்டு, பின்பு உபசரிப்பை ஏற்றுக்கொள்வது நல்லது!

- லஷ்மி சுப்ரமணியம், மதுரை


அனுபவங்கள் பேசுகின்றன!
 
அனுபவங்கள் பேசுகின்றன!
அனுபவங்கள் பேசுகின்றன!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு