Published:Updated:

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...

பிரீமியம் ஸ்டோரி

வெற்றிக்கு பாஸ்வேர்ட்!
ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...
ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...
நெடுஞ்செழியன்

'விளையாடாம படி!' என்பது அம்மாக்கள் பிள்ளைகளுக்கு அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டிருக்கும் வாசகம்! ஆனால், அந்த விளையாட்டு சம்பந்தமான படிப்பை படிப்பவர்களுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என்பது தெரியுமா உங்களுக்கு?!

ஆம்... விளையாட்டு சம்பந்தப்பட்ட படிப்புக்கென்றே இருக்கும் பிரத்யேக நிகர்நிலைப் பல்கலைக் கழகம் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இருக்கும் 'லஷ்மிபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஸிக்கல் எஜுகேஷன்' (Lakshmibai National Institute of Pshyical Education - Gwalior) என்ற நிகர்நிலை பல்கலைக்கழகம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. விளையாட்டுத் துறையில் இந்திய மாணவ-மாணவிகளின் பங்களிப்பை ஊக்குவிப்பதையே முழு மூச்சாகக் கொண்டு செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களை சர்வதேச விளையாட்டு அரங்கின் தரத்துக்கு முன்னேற்றுவதற்கான அத்தனை பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள ஜிம்னாஸ்டிக், கிரிக்கெட், வாலிபால், த்ரோபால், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், யோகா, லாங் ஜம்ப், ரன்னிங் போன்ற பலவிதமான விளையாட்டுக்களை, அதன் அடிப்படை நுணுக்கங்களோடு சொல்லித் தருவதோடு, விளையாட்டு சம்பந்தமான படிப்புகளையும் இந்தப்பல்கலைக்கழகம் கற்றுத்தருகிறது.

யூ.ஜி., பி.ஜி., டிப்ளமோ மற்றும் சர்டிஃபிகேட் கோர்ஸ்கள் நடத்தப்படுகின்றன. பி.ஜி-யில் 'பேச்சுலர் ஆஃப் பிஸிகல் எஜுகேஷன் (Bachelor of Pshyical Education - B.P.E)' நான்கு வருடப் படிப்பாக வழங்கப்படுகிறது. தவிர, ஸ்போர்ட்ஸ் எஜுகேஷன், ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, மாஸ்டர் ஆஃப் பிஸிக்கல் எஜுகேஷன், எம்.ஃபில் இன் பிஸிக்கல் எஜுகேஷன் போன்ற கோர்ஸ்களும் நடத்தப்படுகின்றன.

இந்தப் படிப்பில் சேர பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நாற்பத்தி ஐந்து சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன், வயது 17 முதல் 21-க்குள் இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட தகுதி நிர்ணயத்தின் அடுத்தக் கட்டமாக, இந்தப் படிப்பில் சேர்வதற்கு மூன்று விதமான தேர்வுகள் நடத்தப்படும்.

1. பிஸிக்கல் ஃபிட்னெஸ் (Pshyical fitness) இதில் 'அப்ஸ்டகில் கோர்ஸ்' என்கிற உடற்பயிற்சி தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரன்னிங், ஜம்ப்பிங், புஷ் அப்ஸ் போன்ற பலவிதமான பயிற்சிகள் மூலம் மாணவர்களின் உடற்பயிற்சி திறன் சோதிக்கப்படும். இத்தேர்வில் இரண்டு முறை மாணவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...

2. புரஃபிஷியன்ஸி இன் ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் (Proficiency in Sports and Games) இதில் வாலிபால், கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் துவங்கி பலவிதமான விளையாட்டுகளைப் பற்றிய மாணவர் களின் அடிப்படை அறிவு அறியப் படும்.

3. ஜெனரல் அவேர்னஸ் (General Awareness) விளையாட்டு தொடர்பான சமீபத்திய செய்திகள் வரை மாணவர்கள் எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது 'அப்ஜக்டிவ் டைப்' வினாக்கள் மூலம் அறியப்படும்.

இந்த மூன்று தேர்வுகளுக்கும் தலா ஐம்பது மார்க்குகள் வீதம், மொத்தம் நூற்றி ஐம்பது மார்க்குகள் அளிக்கப்படும். இதுதவிர, மாணவர்கள் விளையாட்டுகளில் பெற்றிருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களுக்கு போனஸ் மார்க்குகள் வழங்கப்படும்.

'பேச்சுலர் ஆஃப் பிஸிக்கல் எஜுகேஷன்' படிப்புக்கு மொத்தம் நூறு ஸீட்கள்தான் உள்ளன. பெண்கள் 24 பேர் மற்றும் ஆண்கள் 54 பேர் ஜெனரல் அட்மிஷன் மூலமாகவும், மீதமுள்ள இடங்கள் கோட்டா மூலமும் நிரப்பப்படும்.

இந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றிய மேலும் விரிவான தகவல்களுக்கு, new.inupe.gov.in என்கிற இணையதள முகவரியை அணுகலாம்.

இந்தப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் கீழ் இயங்குவதால், படிப்பு முடிந்த கையோடு அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. உதாரணமாக, கல்லூரிகளில் விளையாட்டுப் பேராசிரியர், அரசாங்க விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்களில் 'கோச்' வேலை போன்றவை கிடைக்கும்.

மேலும், நீங்கள் சிறந்ததொரு விளையாட்டு வீரராக பரிணமிக்கும்பட்சத்தில் அரசு சார்ந்த வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உங்கள் திறமைகளைக் கேள்விப்பட்டு, உங்களை கௌரவிப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் ஒரு பணியிடத்தை உருவாக்கி, உங்களுக்கு அளிக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அந்த வங்கி அல்லது அரசாங்க நிறுவனத்தின் சார்பாக நீங்கள் தேசிய மற்றும் உலக விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரை நீங்கள் உலகறியச் செய்வீர்கள் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

எனவே, படிப்போடு சேர்ந்து நீங்கள் விளையாட்டு வீரராகவும் பரிணமிக்கும்பட்சத்தில் உங்களின் திறமைக்கு தீனிபோடும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உதவுவதோடு... வேலை வாய்ப்பையும் தந்து, கிட்டத்தட்ட 'டபுள் போனஸ்' கிடைத்துவிடும்.

என்ன... விளையாடப் போகலாமா?!

- மீண்டும் சந்திப்போம்...

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...
 
ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...
ப்ளஸ் டூ-வுக்கு பிறகு ...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு