Published:Updated:

குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !

குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !

பிரீமியம் ஸ்டோரி

டியர் டாக்டர்
குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !
குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !
"குப்பை உணவுக்கு குட்பை....தொப்பைக்கு பை பை !"

"'தொப்பை ஃபேமிலி' என்று பெயர் வைக்குமளவுக்கு நான், என் கணவர், ஒன்பது வயது மகள் என்று எங்கள் வீட்டில் எல்லோருமே தொப்பை பெருத்து காணப்படுகிறோம். எங்கள் யாருக்கும் சுகர், பி.பி. என்று எந்தப் பிரச்னையும் இல்லை. அவருக்கு 'பீர் தொப்பை' என்றும், எனக்கு பிரசவத்துக்குப் பின் வயிறு சுருங்காத தால் ஏற்பட்ட தொப்பை என்றும் நாங்களே காரணம் சொல்லிக் கொள்கிறோம். சிறுவயதில்இருந்தே கொழுகொழுவென்றிருந்த எங்கள் மகளை, 'பப்பி ஃபேட்... வளர வளர கரைந்துவிடும்' என்று நாங்கள் எண்ணியிருக்க, அதுவும் குறைந்தபாடில்லை. இந்தத் தொப்பைகளால் உடலுக்கோ, வயிற்றில் உள்ளுறுப்புகளுக்கோ பின்னாளில் ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டா... இதைக் கரைக்க வழிதான் என்ன?''

டாக்டர் எஸ்.சுவாமிநாதன், இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி

குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !

"உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல... உலகம் முழுக்கவே மக்களை ஆட்டிப் படைக் கும் சைலன்ட் வில்லன், இந்தத் தொப்பை. இது தோற்றப்பொலிவோடு மட்டுமே தொடர்பானதல்ல; உடலின் ஆரோக்கிய குறை பாடுகள் பலவற்றைப் பொதியாகச் சுமப்பது இந்தத் தொப்பைதான் என்பது பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் இல்லை.

அடிப்படையில் காற்று, நீர், மலம், கொழுப்பு என வயிற்றில் சேகரமாகும் விஷயங் களால் தொப்பை தோன்றுகிறது. கணையத் தின் நொதிகள் நாம் உட்கொள்ளும் உணவு செரிப்பதற்கு சரிவர உதவாதபோது, சிறுகுடலில் உள்ள பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் காற்று, வயிற்றில் தேங்கி தொப்பை உருவெடுப்பது முதல் வகை. எப்போதும் வயிறு உப்புசமாக இருப்பதாக இவர்கள் உணர்வார்கள். கணையத்தில் கல், சிறுகுடலில் புண் அல்லது காச நோய் பீடித்திருப்பது இதன் பின்னணிக் காரணமாக இருக்கும்.

வயிற்றில் நீர் தங்குவதன் காரணமாக ஏற்படும் தொப்பை... இரண்டாம் வகை. கிராமங்களில் இதை 'மகோதரம்' என்பார்கள். நீடித்த குடிப்பழக்கத்தால் கல்லீரல் கெட்டுப்போய், நிணநீர் தேங்கி உருவெடுக்கும் தொப்பை இது. இரப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் நாள்பட்ட புற்றுநோயின் பாதிப்பாலும் நீர் பெருகி வயிறு ஊதியிருப்பார்கள்.

மூன்றாவது வகை, மலத்தின் காரணமாக ஏற்படுவது. குடல் சரியாக சுருங்கி விரியாதவர்களுக்கும், பெருங்குடலில் புற்று நோய் கண்டவர்களுக்கும் மலச்சிக்கல் பாதிப்பு நாள்பட்டிருக்கும். இதனால் வயிற்று பாரம் ஏறினவர்களும், 'சாதாரண தொப்பைதானே' என்று அலட்சியத்துடன் இருப்பார்கள்.

மேற்சொன்ன காரணங்களில் எதுவேண்டுமானாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தொப்பைக்கு காரணமாக இருக்கலாம் என்பதால், மருத்துவ ஆலோசனையின் கீழ் அதைக் கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.

குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !

இவை தவிர, பரவலாக நாம் அறிந்தபடி அதிகமாக உடலில் சேரும் கொழுப்பும் பெரும்பாலானோரின் தொப்பைக்குக் காரணமாகிறது. அதிகபட்சம் ஒரு மனிதனின் அன்றாட கலோரி தேவை இரண்டாயிரம்தான். அதற்குமேல் உட்கொள்ளப்படும் உணவுச்சத்து எதுவானாலும் கொழுப்பாக உடலில் சேர்கிறது. ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களின் உடல்வாகுக்கு ஏற்ப வயிறு, தொடை மற்றும் புட்டம் போன்ற பிரதேசங்களிலும் அதிகப்படி கொழுப்பு சேகரமாகிறது. உணவில் கட்டுப்பாடு, தொடர் உடற்பயிற்சி போன்றவற்றை வாழ்நாள் நெடுக கடைபிடித்தால், இந்த அதிகப்படி கொழுப்பு அண்டாது. சில நாட்கள் தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொழுப்பை குறைப்பவர்கள், சற்று அலட்சியத்துடன் ஆசுவாசமானால் முன்னைவிட மோசமாக கொழுப்பு படிய ஆரம்பித்துவிடும்... கவனம்.

இப்போதெல்லாம் 'நாகரிகம்' என்ற போர்வையில் குடும்பமே குப்பை உணவுகளை வெளுத்துக் கட்டுவது வழக்கமாகிவிட்டது. பொரித்தது, வறுத்தது போன்றவற்றுக்குப் பதிலாக பழங்கள், காய்கள், கீரைகள், சூப், ஜூஸ் என்று உங்கள் குடும்பத்தின் உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள். கூடவே, உங்கள் மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், உடற்பயிற்சி ஆலோசகர் என ஒரு டீம் வழிகாட்டுதலை கண்டிப்புடன் பின்பற்றுங்கள்... நிச்சயமாக தொப்பைக்கு சரியான தீர்வு கிடைக்கும்.

பெரியவர்களின் வயிற்றுக் கொழுப்பை கரைப்பதற்காக, வயிற்றைக் கிழிக்காமல் லாப்ரோஸ்கோபிக் முறை அறுவை சிகிச்சைகள் பிரபலமாக இருக்கின்றன. இரைப்பையில் குறிப்பிட்ட காலத்துக்கு பலூன் பொருத்தும் எண்டோஸ்கோபிக் முறையும் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் கணிசமாக செலவு பிடிக்கக் கூடியவை.

வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப்பின் வரும் குடல் பிதுக்கத்தாலும் தொப்பை காட்சிஅளிப்பதுண்டு. மருத்துவர் உதவியோடு தகுந்த ஆலோசனைக்குப்பின் 'ஹெர்னியா' ஆபரேஷன் செய்துகொள்வதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.

பெண்களின் தொப்பையைப் பொறுத்தவரை சினைப்பையில் தோன்றும் கொழுப்பு கட்டிகளாலும் வயிறு பெருக்கலாம். அறுவை சிகிச்சைதான் இதற்கும் தீர்வு.

குழந்தைப் பிறப்பின்போது விரிவடைந்த வயிற்றுத் தசைகள் சுருங்க மறுத்தாலும் தொப்பை ஏற்படலாம். இத்தகையவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையுடன் ஆரம்ப நாள் முதலே வயிறுக்கான சிறப்பு உடற்பயிற்சிகளை தொடரவேண்டும். மற்றபடி பெல்ட்டுகளை கட்டிக்கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே தொப்பையை கரைக்கும் முயற்சிகள் நடைமுறையில் சாத்தியமில்லாதது. உங்களைப் பொறுத்தவரை குழந்தை பிறந்து ஒன்பது வருடமாகியும் வயிறு சுருங்காததற்கு வேறு பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம். எனவே, உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

விளையாட்டுகள், உடற்பயிற்சி போன்றவற்றை உங்கள் மகளுக்கு பழக்குங்கள். குழந்தை ஆரோக்கியமாகவும் ஆக்டிவாகவும் இருந்தால் போதும், கொழுகொழு தேகம் அவசியமில்லை என்பதை உணருங்கள். உங்கள் கணவரைப் பொறுத்தவரை உடல் கட்டுக்குள் வரும்வரைக்கேனும் பீர் உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.

முக்கியமாக, குப்பை உணவுகளுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லிவிடுங்கள்... தொப்பை தானாக விடைபெறும்!'

குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !
 
குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !
குப்பை உணவுக்கு குட்பை... தொப்பைக்கு பை பை !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு