Published:Updated:

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !

பிரீமியம் ஸ்டோரி

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !
ஜி.பிரபு
அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !
அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !
மலைக்க வைக்கும் மாற்று உணவுகள்

'அரிசி சாப்பாட்டைக் குறைங்க...', 'அரிசி உணவை ஒதுக்கிடுங்க...', 'அரிசி அயிட்டமா... தொடவே தொடாதீங்க..!'

- உடம்பில் ஏதாவது பிரச்னை என்று ஆலோசனை கேட்கச் சென்றால், டாக்டராக இருந்தாலும் சரி, டயட்டீஷியன்களாக இருந்தாலும் சரி, இயற்கை உணவு நிபுணர்களாக இருந்தாலும் சரி... இதைத்தான் அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார்கள்!

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !

தினந்தோறும் நாம் வெளுத்துக்கட்டும் இட்லி, தோசையில் இருந்து... ஆசீர்வதித்து தூவும் அட்சதை வரை நம்மோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது அரிசி. தமிழகத்தில் மட்டுமல்ல... ஆசிய கண்டத்தின் முக்கிய உணவே அரிசிதான்.

இப்படிப்பட்ட சூழலில்... அரிசி உணவை தவிர்க்கச் சொன்னால் யாரால் முடியும் என்கிறீர்களா..? ஆனால், அதற்கான காரணங்கள் என்ன, அரிசிக்கு சரியான மாற்று உணவு என்ன, அரிசி வகைகளில் உள்ள மெய்யான சத்து வித்தியாசம் என்ன... என்பது பற்றியெல்லாம் துறைசார்ந்த வல்லுநர்கள் அலசுவதைக் கேட்டால், அடுத்த நிமிடமே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துவிடுவீர்கள்... அரிசியை விட்டு!

40 வயசுக்கு மேல அரிசி அரைபடாது...!

''அரிசியை மட்டுமே பிரதானமா சாப்பிட்டு வர்ற நம்மோட உணவுப் பழக்கம், கண்டிப்பா மாறணும்!'' என்றபடி வலுவான காரணங்களுடன் ஆரம்பித்தார், திண்டுக்கல் மாவட்ட ஊட்டச்சத்து அலுவலர் வசந்தி.

''பொதுவா, அரிசியில கார்போஹைட்ரேட் சத்துதான் அதிகமா இருக்கு. இது மனிதர்களுக்குத் தேவையான சத்தா இருந்தாலும், இந்தச் சத்து மட்டும் வளர்ச்சிக்கு கண்டிப்பா போதாது. மூணுவேளையும் அரிசி உணவு சாப்பிடறதால, சரிவிகித சத்துக்கள் நமக்குக் கிடைக்காம போயிடும். நடுத்தர வயது வரை (35 முதல் 40 வயது வரை) உள்ளவங்க மூணு வேளையும் அரிசியையே உணவா எடுத்துக்கிட்டாலும், செரிமான சக்தி நல்லா இருக்குறபட்சத்துல பெரிய அளவுல உடல்ல பிரச்னைகள் வராது. ஆனா, அந்த வயசுக்கு மேல உடம்புல செரிமான சக்தி குறைய ஆரம்பிக்கும். மனிதர்களின் உடலுழைப்பும் குறைய ஆரம்பிக்கும். அப்போ அரிசியைத் தவிர்க்கிறதுதான் நல்லது. இல்லனா, சர்க்கரை கோளாறு உட்பட வேற மாதிரியான விளைவுகள் பலதையும் இந்த அரிசி ஏற்படுத்திடும்'' என்று எச்சரித்தவர்,

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !

''அதுக்காக அரிசியை உடம்புக்குத் தீமை செய்ற உணவுனு சொல்லிடக் கூடாது. அரிசியை மட்டுமே அதிகமா சாப்பிட்டா உடம்புக்கு ஒப்புக்காது. அதனாலதான் குறைக்கணும்னு சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு சூழ்நிலையில அரிசிதான் முழு நேர உணவா மாறி நிக்குது. நம்ம மக்கள், பல ஆயிரம் வருஷமாவே அரிசியை உற்பத்தி பண்ணிச் சாப்பிட்டாலும், கூடவே பலவித தானியங்களையும் உற்பத்தி பண்ணினாங்க. அந்த தானியங்களைத்தான் அதிக அளவுல உணவுல சேர்த்துக்கிட்டாங்க. அரிசியை அப்பப்போ சேர்த்துக்கிட்டாங்க. ரொம்ப வசதியானவங்க வீடுகள்லதான் அடிக்கடி அரிசியைப் பயன்படுத்துவாங்க. அதனாலயே அரிசி சாப்பிடறதுதான் நாகரிகம்னு ஆகிப்போய்... காலப்போக்குல சாமானிய மக்களும் அரிசி பக்கம் கவனத்தைத் திருப்பிட்டாங்க.

அதுலயும் இப்போ செயற்கை உரங்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்துல வர்ற வீரிய அரிசிகளை அதிகமா உற்பத்தி பண்றாங்க. அதனால எல்லா இடத்துலயும் தடையில்லாம அரிசி கிடைக்கிறதால, அதைச் சாப்பிடற பழக்கமும் அதிகமாயிடுச்சு. ஆனா, அளவுக்கு மிஞ்சினா அரிசியும் நஞ்சுதான்! அதனால சிறு வயதில்இருந்தே அரிசியைக் குறைச்சு, சிறுதானியங்கள் உள்ளிட்ட பல வகை தானியங்களையும் சாப்பிடப் பழகினா... கண்டிப்பா நோயில்லாத நிறைஞ்ச வாழ்வு வாழலாம்!'' என்று வலியுறுத்திச் சொன்னார் வசந்தி.

அரிசியைவிட சத்து நிறைந்தவை தானியங்கள்!

''அரிசிக்கு இணையான மாற்று உணவு வகைகள், நம்மகிட்ட நிறையவே இருக்கு...!'' என்று, வசந்தியின் கருத்துக்கு வலுவேற்றி பேசத் தொடங்கினார் திண்டுக்கல்லைச் சேர்ந்த நீரிழிவு நோய் ஸ்பெஷலிஸ்ட், டாக்டர் முரளிதரன்...

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !

''மனிதன் சாப்பிடற எல்லாப் பொருட்கள்லயும் இருக்கற சத்தான விஷயங்கள், உடம்போட இயக்குத்துக்குத் தேவையான சக்தியா மாறுது. அந்தச் சக்தியை கலோரினு அளவிடுறாங்க. இப்ப நூறு கிராம் அளவு அரிசியில சராசரியா 350 கலோரி இருக்கு. கம்பு, சாமை, கேழ்வரகுல முறையே... 361 கலோரி, 341 கலோரி, 328 கலோரி சத்துக்கள் இருக்கு. ஆக, ஏறத்தாழ எல்லா தானியங்களிலும் சக்தியோட அளவு சமமாத்தான் இருக்கு. ஆனா, உடம்புக்கு ரொம்ப அவசியமான நார்ச்சத்து உட்பட பலவிஷயங்களும் அரிசியைவிட தானியங்கள்லதான் நிறைஞ்சிருக்கு (பார்க்க பட்டியல்). அப்படி இருக்கும்போது எதுக்காக அரிசி உணவையே பிரதானமா சாப்பிடணும்?

இந்தப் பழக்கத்தை ஒரே நாள்ல மாத்திக்கறதுக்க மனசு வராது. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா தானிய வகைகளை உணவுல சேர்க்கப் பழகி, கூழ், களி, ரொட்டி, அடைனு அதுல செய்யக்கூடிய உணவு வகைகளை குடும்பத்துல எல்லாருக்கும் படிப்படியா பழக்கப்படுத்தினா... கண்டிப்பா அது சாத்தியமாகற ஆரோக்கியமான மாற்றம்தான்'' என்றவர்...

ரேஷன் அரிசியில் சத்து அதிகம்!

''அரிசியைத் தவிர்க்க சொல்றதுக்கான இன்னொரு முக்கியக் காரணம்... இப்போ வர்ற அரிசிகளோட தரம்தான்! பொதுவா புழுங்கல் அரிசியில, நெல்லை வேக வைக்குறப்போ உமி, தவிடு இதுலயெல்லாம் இருக்குற புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் எல்லாத்துலயும் சிறிதளவு அரிசியின் உட்பாகத்துக்குள்ள போயிடுது. அதனால அந்த அரிசியில சில சத்துக்கள் அதிகமா இருக்கும். ஆனா, பச்சை நெல்லை இயந்திரத்தில் அரைச்சு பச்சரிசி தயார் செய்யும்போது, உமி, தவிடு இதுகளோட பெரும்பகுதியும், அரிசியின் பகுதியும் பிரிஞ்சுடுறதால, சத்து கம்மியாகிடுது. அரிசியை நிறைய தடவை கழுவறதாலயும், வேகவெச்சு வடிக்கறதாலயும், அதுல இருக்கற தயாமின் சத்து கரைஞ்சி வெளியேறிடும். அதனால மில்லுல அரைச்ச அரிசினா... பச்சரிசியைவிட புழுங்கலரிசி நல்லதுனு சொல்லலாம். இது ரெண்டையும்விட கைக்குத்தல் அரிசி ரொம்ப நல்லது. அதிகமா விலை கொடுத்து அரிசினு நாம வாங்கறதெல்லாமே பாலிஷ் செய்யப்பட்டதுதான். ஆகக்கூடி, சக்கையைத்தான் சாப்பிட்டு இருக்கோம்!'' என்று உண்மையை தோலுரித்த டாக்டர்,

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !

''விளக்கமா சொல்லணும்னா, ஒரு ரூபாய்க்குக் கிடைக்கற ரேஷன் அரிசி, பதினெட்டு ரூபாய்க்கு கிடைக்கற சாப்பாட்டு அரிசி, நாற்பது ரூபாய்க்கு கிடைக்கற தரமான பொன்னி அரிசி... இது மூணுலயுமே ஏறத்தாழ ஒரே அளவு சத்துக்கள்தான் இருக்கு. சொல்லப்போனா... 40, 50 ரூபாய் கொடுத்து வெள்ளை வெளேர்னு வாங்கற பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைவிட, ஒரு ரூபாய்க்கு கிடைக்கிற பழுப்புநிற ரேஷன் அரிசியில நார்ச்சத்து அதிகம். அதிகம் பாலிஷ் செய்யப்படாத அரிசிங்கறதால, அதுல ஒட்டியிருக்கற தவிடுதான் அதுக்குக் காரணம். அதேசமயம், ரேஷன்ல கிடைக்கற அரிசி சுத்தமானதா இருக்கானு உறுதிப்படுத்திக்கறது முக்கியம்'' என்று அரிசி பற்றிய கசப்பான உண்மைகளை புரிய வைத்தார் டாக்டர்.

பொருளாதார புண்ணியமும் உண்டு!

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !

''ஆரோக்கியத்துக்கு மட்டுமில்ல... பொருளாதார ரீதியாவும் இந்த தானிய வகைகள் அரிசிக்கு நல்ல மாற்று!'' என்று விளக்கினார், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உயிர்ச்சூழல் வேளாண்மை பயிற்சி மைய இயக்குநர் விசுவாசம்.

''அரிசியோட விலை 100 ரூபாய்க்குப் போனாலும் வாங்கறதுக்கு தயாராத்தான் இருக்கறாங்க மக்கள். ஆனா, அரிசியை விடுத்து, கோதுமை, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, வரகு, தினை, கொள்ளுனு ஏகப்பட்ட தானியங்கள் இருக்கு. இது எல்லாத்துலயும் ஒரேமாதிரியான சத்துதான் இருக்கு. சொல்லப்போனா, அரிசியைவிட தானியங்கள்தான் நல்லது. அப்படியிருக்கும்போது ஏன் அரிசியைத் தேடி ஓடணும்? கைக்குத்தல் அரிசி ஒரு வேளைக்கு, சிறுதானியங்கள் ஒரு வேளைக்குனு சாப்பிட ஆரம்பிச்சாலே, நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும். ஏகப்பட்ட பணமும் மிச்சமாகுமே!'' என்று ஆலோசனை சொல்லி முடித்தார் விசுவாசம்!

இனியும்கூட அரிசியை மட்டுமே... தூக்கிப் பிடிக்கப் போகிறோமா?!

கைக்குத்தல் அரிசி கிடைக்குமா?

'கைக்குத்தல் அரிசியெல்லாம் இந்தக் காலத்துல எங்க கிடைக்கும்?'என்று தேடியபோது சிக்கினார்... திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் கைக்குத்தல் அரிசியைத் தயாரித்து விற்பனை செய்துவரும் 'செட்டியார் அரிசி ஆலை'உரிமையாளர் குப்தா.

"முன்னெல்லாம் வீடுகளில், மரத்தாலான திருகை இருக்கும். அதில் மேல் பக்கம் நெல்லைப்போட்டு திருகையை சுத்துனா நெல்லோட உமி மட்டும் பிரிஞ்சு தனியா அரிசி வரும். அதை அப்படியே புடைச்சு உபயோகப்படுத்துவாங்க. உரல்ல குத்தியும் அரிசியெடுப்பாங்க. இன்னிக்கு இருக்குற வேகமான உலகத்துல அதெல்லாம் மறைஞ்சு போச்சு. அதேசமயம், கைக்குத்தல் அரிசிக்கு தேவை இருக்கறதால பிரத்யேக இயந்திரம் மூலமா கைக்குத்தல் அரிசியைத் தயார் பண்றோம். 25 வருஷமா இதைச் செய்துகிட்டிருக்கோம்.

கைக்குத்தல் அரிசி கொஞ்சம் சிவப்பு நிறத்துல இருக்கும். நார்ச்சத்து அதிகமா இருக்கறதால செரிமானம் ஆகுறதுக்கு தாமதமாகும். சாதம் வடிச்சு சாப்பிட முடியாது. அப்படியே பொங்கிதான் சாப்பிட முடியும். குக்கர்ல வேக வைக்கலாம். சாதாரணமா ஒரு கிலோ பாலிஷ் அரிசியில் ஐந்து பேர் சாப்பிட முடியும்னா, கைக்குத்தல் அரிசியில் எட்டு பேர் சாப்பிட முடியும். ஆனா, கைக்குத்தல் அரிசியை ரொம்ப நாள் சேமிச்சி வெச்சிருந்தா பூச்சி வந்துடும். அதனால தேவைக்கேற்ப அப்பப்ப வாங்கி பயன்படுத்தலாம்''என்று சொல்லும் குப்தா, கைக்குத்தல் மூலமாக தயாராகும் பொன்னி பச்சரிசி ஒரு கிலோ 35 ரூபாய், புழுங்கலரிசி 30 ரூபாய் என்று விற்பனை செய்து வருகிறார்.

அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !
 
அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !
அளவுக்கு மிஞ்சினால் அரிசியும் நஞ்சுதான் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு