Published:Updated:

ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !

ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !

பிரீமியம் ஸ்டோரி

ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா,'உளுந்து...உளுந்து...'கவனிக்கணும் !
ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !
ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !
அவள் விகடன் டீம்

நம் கண் எதிரே குட்டிப் பாவாடையோடு... சுட்டியாக ஆடிப்பாடி திரிந்து கொண்டிருக்கும் நம் வீட்டு பெண், ஒரு அழகான வேளையில் பூப்பெய்திவிடுகிறாள்.

'கொலுசுக்கால் சத்தமிட, கல் உடைய, மண் உடைய, குதியாட்டம் போட்ட மக, குமரிப் புள்ள ஆனாளே’ என்று சொந்த பந்தங்களிடம் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள... 'மஞ்சள் நீராட்டு விழா' என்ற பெயரில் கிரா மங்களில் ஊரும், உறவும் கூடி... வயதுக்கு வந்த பெண்ணைக் கொண்டாடி தீர்ப்பது, வகை வகையாக சமைத்துக் கொடுத்து சந்தோஷப்படுத்துவது மிகவும் பிரபலமான ஒன்று. தமிழகத்தின் சில பகுதிகளில் 'காய்ச்சி ஊத்தறோம்’ என்ற பெயரில் இதைக் கொண்டாடி தீர்க்கிறார்கள்.

ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !

'பூப்பெய்துதல் என்பது இயற்கையாக நடக்கும் விஷயம்தானே. இதற்கு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்... பத்தாம் பசலித்தனமாக...' என்றுகூட கேட்கத் தோன்றும். மேலோட்டமாகப் பார்த்தால்... அப்படித் தோன்ற லாம். ஆனால், அந்த கொண்டாட்டத்தின் பின்னணியில் இருப்பது முழுக்கவே மருத்துவரீதியிலான விஷயங்கள் என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை!

தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதைகூட அறியாத நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணின் பயத்தைப் போக்குவது முதல் விஷயம். கிட்டத்தட்ட 16 நாட்களுக்கு அவளுக்கென்றெ சில ஸ்பெஷல் உணவுகள் தயாரித்து தரப்படுவது... இரண்டாவது விஷயம். இவையெல்லாம் அவளுடைய உடல் மற்றும் மன நிலையைச் சமப்படுத்தி, மேற்கொண்டு வரும் நாட்களில் உடலையும் மனதையும் தெம்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன என்பதுதான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது.

''சமைஞ்ச புள்ளைகளுக்கு தாய்மாமன் குடிசை கட்டுவாங்க, மாமன்மாருங்க, அத்தைமாருங்கனு ஊரே கூடி சமைச்சுப் போடுவாங்க. அதிகமா உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி, உளுந்த வடை, வெந்தயக்களினு நிறைய கொடுப்போம். தினமும் நாட்டுக் கோழி முட்டை ஒண்ணை பச்சையா உடைச்சுக் குடிக்க வைப்போம். அந்த முட்டை ஓடு நிறைய நல்லெண்ணெயை ஊத்திக் குடிக்கச் சொல்லுவோம். பதினாறு நாளும் இந்த மாதிரி உளுந்து பலகாரம், குழல் புட்டு, தினை மாவு உருண்டை, இளநினு சத்தான சாப்பாடா தருவோம். உளுந்துல இருக்கற சத்தான விஷயங்கள், கர்ப்பப்பையை பலமாக்குமாம். அதனலதான் உளுந்து பலகாரத்தை நிறைய கொடுப்போம்.

புள்ளைங்க வயசுக்கு வந்தப்ப சத்தான சாப்பாடு கொடுத்தாதான் கர்ப்ப காலத்துலயும், பேறு காலத்துலயும் எந்தப் பிரச்னையுமில்லாம தெம்பா இருக்குமுங்க. டவுன் புள்ளைங்களுக்கு இப்படியெல்லாம் தராததுனாலதான் மாசந்தோறும் 'வயித்துவலி, வயித்துவலி’னு துடிக்குதுங்க" என்று உதாரணத்தோடு விளக்கினார் திருநெல்வேலி, பேட்டையைச் சேர்ந்த 'அவள் வாசகி' கண்ணுத்தாயி.

சரி, இந்த உளுந்தங்களி செய்வது எப்படி?

ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !

அதை விவரிக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்ரா. ''உளுந்து - 1500 கிராம், வெந்தயம் - 100 கிராம், பச்சரிசி - 100 கிராம் இதையெல்லாம் முதல் நாள் ராத்திரியே தண்ணியில ஊற வைக்கணும். மறு நாள் காலையில் அரைச்சி, தண்ணியாவோ... கெட்டியாவோ இல்லாம பதமாக கரைச்சிக்கணும். இதை ஒரு பாத்திரத்துல வெச்சு, மிதமான சூட்டுல கிண்டணும். பசை பதத்துக்கு வர்ற வரை கிண்டிக்கிட்டே இருக்கணும். இல்லனா... முடிச்சு, முடிச்சா மாறிப்போயிடும். நல்ல பதம் வந்ததும் இறக்கி ஒரு தட்டுல எடுத்து வெச்சு, கருப்பட்டி தூள் தூவி, நடுவுல குழி ஏற்படுத்தி, நல்லெண்ணெயை ஊத்தி சாப்பிடக் கொடுக்கலாம்" என்று சொன்ன சித்ரா,

''உளுந்து, உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். வெந்தயம் உடல் உஷ்ணத்தை குறைக்கும்" என்று அதன் பலன்களையும் சொன்னார்.

அடுத்து, தினைமாவு உருண்டை பற்றி விவரிக்கிறார் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கம்மாளப்பட்டியைச் சேர்ந்த பரமேஸ்வரி, ''ஒரு கிலோ தினையை எடுத்து மாவாக்கி, நிழல்ல உலர்த்தி ஈரத்தைப் போக்கிக்கணும். ஒரு பாத்திரத்துல அச்சுக்கருப்பட்டி ரெண்டு துண்டு போட்டு, சரியான பதத்துல பாகு காய்ச்சிக்கணும். பிறகு, இன்னொரு பாத்திரத்துல தினை மாவை எடுத்துக்கிட்டு, அதுல கருப்பட்டி பாகைக் கொஞ்சம் கொஞ்சமா கொட்டி நல்லா கிளறணும். கூடவே, நல்லெண்ணெய் இல்லனா... பசும்நெய் ஊத்திக்கணும். கடைசியா... நெய்யில வருத்த 100 கிராம் முந்திரி-திராட்சை... அப்புறம் ஏலக்காய், சுக்கு பொடியையும் தூவினா... தினை மாவு உருண்டை தயார்.

முன்னயெல்லாம் பெரிய பெரிய உருண்டையா பிடிச்சுக் கொடுப்பாங்க. இந்தக் காலத்துக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. லட்டு சைஸ§ல சின்னச்சின்னதா பிடிச்சுக் கொடுத்தா சாப்பிடறதுக்கு சௌகரியமா இருக்கும். ஒரு நாளைக்கு ஒண்ணு இல்லனா ரெண்டு உருண்டை போதும். கர்ப்பமா இருக்கற பொண்ணுங்களுக்கும்கூட இது நல்ல சத்து" என்று சொன்னார்.

பருவமெய்திய பெண்களுக்கு உளுந்து, முட்டை, தினை, நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகமாகக் கொடுப்பது பற்றி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் திடம்கேட்டபோது, ''அந்தச் சமயத்தில் ஏற்படும் உடல் வளர்ச்சிக்காகவும், போஷாக்குக்காகவும் சத்தான சாப்பாடு மிக அவசியம். அந்தப் பருவத்தில் புரோட்டீன் அதிகம் தேவைப்படும். அதை உளுந்து, தினையெல்லாம் தருகின்றன. உளுந்தில் சில மருத்துவ குணங்கள் உண்டு. பாலின உறுப்புகளை வலுவாக்குவது, நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்துவது, உணவு மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்கும் மகத்துவம் உளுந்தில் அடங்கியுள்ளது. முட்டையிலும் புரோட்டீன் அதிகம் உண்டு. நல்லெண்ணெயில் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து சரிவிகிதத்தில் இருக்கிறது. அதன் மருத்துவ குணம் உடல் சூட்டைத் தணிக்கிறது. இதையெல்லாம் அனுபவ ரீதியாக உணர்ந்ததால்தான் இம்மாதிரி உணவுகளை அதிகம் தருகிறார்கள்’’ என்று சொன்னார் டாக்டர்.

வயதுக்கு வந்துவிட்டால், கொண்டாடி தீர்த்த காலமெல்லாம் இப்போது கரையேறிக் கொண்டிருக்கிறது. அது ஒரு சடங்காகவே ஆக்கப்பட்டுவிட்டதால், அந்த நிகழ்ச்சியின் மீதே பிறகென்ன... உங்க வீட்டுல 'பெரிய மனுஷி'ங்க இருந்தா.. 'உளுந்து... உளுந்து...' கவனிங்க!

பின்குறிப்பு கால ஓட்டத்தில் 'சடங்கு' வேண்டுமானால் தவிர்க்கப்படலாம். ஆனால், 'சவரட்டணை' முக்கியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

படங்கள் ஜி.பழனிச்சாமி, ஆர்.குமரேசன்

ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !
 
ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !
ஒங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா, 'உளுந்து.... உளுந்து...'கவனிக்கணும் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு