Published:Updated:

டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !

டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !

பிரீமியம் ஸ்டோரி

டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள்!

டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !
டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !
படம் ஆ.முத்துக்குமார்
ரேவதி

ஹோட்டலோ... வீடோ... அதீத இனிப்புடன், விதவித வண்ணங்களுடன், புதுவித சுவையுடன் இருந்தால்தான் சாப்பிடுவது என்று பலருக்கும் ஒருவித க்ரேஸ் உண்டு! ஆனால், இப்படி ருசிக்காக, நிறத்துக்காக உணவில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் (Food additives), உடல் நலத்துக்கு கேடு என்பது, ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட அலாரம் என்பது தெரியுமோ?!

டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !

"இப்படி சுவை மற்றும் நிறத்துக்காக உணவில் சேர்க்கப்படும் ரசாயனக் கலவைகள் ஒரு கட்டத்தில் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து, நாளடைவில் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி, அது அடுத்த தலைமுறையையும் பாதிக்கக்கூடிய அளவுக்கு செய்துவிடும்" என்ற அதிர்ச்சித் தகவலை தந்து பேச ஆரம்பித்தார், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை கிளினிக்கல் - நியூட்ரிஷியன் டிபார்ட்மென்டின் துணைப் பேராசிரியர், டாக்டர் ஹேமமாலினி ராகவ்.

"உணவில் இயற்கையாகவே இருக்கும் ரசாயனப் பொருட்களை 'இன்சிடென்டல்' (Incidental) என்றும், நாமே சேர்க்கும் பொருட்களை 'இன்டென்ஷனல்' (Intentional) என்றும் கூறுவர்.

அப்படி நம் இந்திய உணவு தொழிற்சாலைகளில் சுவை, வாசனைக்காக சேர்க்கப்படும் 'இன்டென்ஷனல்' ரசாயனப் பொருட்கள், சுமார் மூவாயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. ஊறுகாய், ஜாம் வகைகள், கூல்டிரிங்ஸ், பிஸ்கட்ஸ் போன்றவற்றில் சேர்க்கப்படும் இந்த ரசாயனப் பொருட்கள், குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் உணவு சட்ட விதிமுறைகள் கடுமையாக இல்லை என்பதால், அவையெல்லாம் மீறப்பட்டு, அதன் ஆபத்தான விளைவுகள் நம் வயிற்றில் இறங்குகின்றன!" என்று அதிர்ச்சியூட்டிய ஹேமமாலினி, தொடர்ந்து இந்த ரசாயன விஷயத்தில் நமக்கு வேண்டிய விழிப்பு உணர்வு குறித்து பேசினார்.

டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !

"பெரும்பாலும் அந்தந்த உணவுப் பொருட்களில் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்ற ரசாயன பொருட்களின் விவரம், அதன் பேக்குகளில் முழுமையாக குறிப்பிடப்படுவதில்லை. அப்படியே குறிப்பிட்டிருந்தாலும், அவை என்ன அளவுகளில் சேர்க்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடாமல், அதற்கான குறியீட்டு எண் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒருவேளை எல்லாமே சரியாகக் குறிப்பிட்டிருந்தாலும், நீங்கள் அதையெல்லாம் படிக்கவே முடியாது. அதற்கு நுண்ணோக்கி தேவைப்படும்!

இன்று மிகப்பெரும்பாலான இல்லங்களில் கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதிகள் உள்ளன. எனவே அந்தத் தின்பண்டங்களின் கவரில் 'Food additives'-ல் குறிப்பிட்டுள்ள அந்த குறியீட்டு எண்ணுக்கான அளவை, new.norfad.dk என்ற இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலான தின்பண்டங்களின் ரசாயன விவரங்கள் பதற வைப்பவையாகத்தான் இருக்கும்!" என்று ஆபத்தை உணர்த்திய ஹேமமாலினி, வீட்டில் சுவைக்காக நாம் சேர்க்கும் பொருட்களின் பாதிப்பு கள் பற்றி தொடர்ந் தார்.

"இப்போது வீடுகளிலும் பிரியாணி, நூடுல்ஸ், பாஸ்தா, சாலட், சாஸ், சூப், மஞ்சூரியன் தயாரிக்கும்போது டேஸ்ட் மேக்கர்கள் சேர்க்கப்படுகின்றன. டேஸ்ட் மேக்கர்களில் 'சோடியம் பென்சோயேட்' எனும் ரசாயனப் பொருள்தான் இருக்கிறது. இதனால் வயிற்று வலி, வாந்தி, அஜீரண கோளாறு ஏற்படலாம். கேசரி, அல்வா, கேக், ஜாம் போன்றவற்றில் சிவப்பு, மஞ்சள், பச்சை என நிறத்துக்காகச் சேர்க்கப்படும் 'சிந்தடிக் ஃபுட் கலரிங்', தோலில் அரிப்பு, அலர்ஜி, மூச்சுச் திணறல், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !

அசிடிட்டி, அல்சர் நோயாளிகள் வினிகர் சேர்த்து செய்யும் ஊறுகாயை சாப்பிடும்போது உடம்பில் நச்சுத்தன்மை அதிகமாகி வயிற்றெரிச்சல், வலி, பித்தப்பை கோளாறு என பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். மொத்தத்தில் இவைஎல்லாமே மெள்ளக் கொல்லும் விஷம் என்றே சொல்லலாம்" என்று உஷார்படுத்திய ஹேமமாலினி,

" 'ஒரு சிட்டிகை சேர்க்கறதுல இத்தனை பாதிப்பா..?' என்று சிலர் ஆச்சர்யப்படலாம். மசாலா, ஸ்நாக்ஸ், ஸ்வீட்ஸ், கூல்டிரிங்ஸ் என்று அனைத்து வகை உணவிலும் இப்போது நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ரசாயன சிட்டிகைகளை, தொடர்ந்து நாம் உட்கொள்ளும்போது அது கண்டிப்பாக கவலைக்குரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.

உண்ணும் உணவின் இயற்கை தன்மை மாறாமல் சாப்பிடுவதுதான் நிம்மதியான, நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்!" என்று முடித்தார் டாக்டர்!

பாக்கெட்டில் வரும் தின்பண்டங்களைத் தொடர்ந்து வாங்கிச் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்...

பிஸ்கட்ஸ், சாக்லேட்ஸ்

இவற்றில் சேர்க்கப்படும் ‘சோய் லெசிட்டின்ஸ்' என்ற வேதிப் பொருள்... டயரியா, வாயுத்தொல்லை, தோலில் அரிப்பு, உடல் எடை கூடுதல் (அ) குறைவு, தலைவலி, குமட்டல், வாந்தி, சோம்பல் போன்றவற்றை ஏற்படுத்தும். அமோனியம் ஹைட்ரஜன் கார்பனேட் வயிறு, தொண்டையை பாதிக்கும்.

ஓட்ஸ் மற்றும் உலர் திராட்சை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகளில் பி.ஹெச்.ஏ. (Butylated hydroxyanisole) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது, உயர் ரத்த அழுத்த நோயாளிகளை மிகவும் பாதிக்கக்கூடியது. கேன்சர் வரை கொண்டுபோகவும் வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளின் நடத்தையிலும், மனநிலையிலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிடும். தேனிலும் இந்த ரசாயனப் பொருள் கலக்கப்படுகிறது.

சிப்ஸ்

நெடுநாள் கெடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக சிப்ஸ், ஊறுகாய், ஒயின் போன்றவற்றில் சோடியம் மெட்டா பை சல்பேட் என்ற ரசாயனப் பொருள் சேர்க்கப்படுகிறது. இது, டாய்லெட் கிளீனர் தயாரிப்பிலும் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். குமட்டல், வாந்தி, பேதி, தோல் தடித்து சிவத்தல், வைட்டமின் பி-12 சத்து குறைதல் போன்றவை இதனால் ஏற்படும்.

சோடா, கூல்டிரிங்ஸ்

சோடியம் பென்சோயேட் எனும் ரசாயனம் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்படும் பானங்கள் பெரிய அளவில் பிரச்னையை ஏற்படுத்தாது. ஆனால், இதனுடன் அஸ்கார்பிக் ஆசிட் சேர்க்கும்போது உயர் ரத்த அழுத்த நோய், கேன்சர் ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் அதிகம்.

எண்ணெய் அயிட்டங்கள்

எண்ணெய் சார்ந்த உணவுப் பொருட்களில் (உருளைக்கிழங்கு சிப்ஸ், வெண்ணெய், மீன் உணவுகள், சுயிங்கம், வெஜிடபிள் ஆயில்) சேர்க்கப்படும் மிகவும் அபாயகரமான ரசாயனப் பொருள் பி.ஹெச்.டி. கடைகளில் வாங்கும்போது அதன் லேபிளில் இந்தப் பெயர் இருந்தால், கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும்!

டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !
 
டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !
டேஞ்சர் டேஸ்ட் மேக்கர்கள் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு