Published:Updated:

நம்ம வீட்டுத் தோட்டம் !

நம்ம வீட்டுத் தோட்டம் !

பிரீமியம் ஸ்டோரி

"காய்கறி கழிவே
தோட்டத்துக்கு உரமாகுது!"
நம்ம வீட்டுத் தோட்டம் !
நம்ம வீட்டுத் தோட்டம் !
நந்தினி

நம்ம வீட்டுத் தோட்டம்!

"என் அம்மா வீடு தஞ்சாவூர். எங்கம்மா வீட்டுல எப்பவுமே செழிப்பா, பசுமையா இருக்கும் வீட்டுத் தோட்டம். அதுல சாம்பாருக்கு முருங்கையும், கூட்டுக்குப் புடலையும்னு அப்பப்ப அம்மா பறிச்சு சமைச்சதைப் பார்த்து வளர்ந்த எனக்கும், தோட்டம் மேல ஆசை வந்துடுச்சு. கல்யாணமாகி புகுந்த வீட்டுக்குப் போறவங்களுக்கு என்னென்னமோ எதிர்பார்ப்பு இருக்கும். ஆனா, எனக்கு இருந்த எதிர்பார்ப்பு, 'அங்க தோட்டம் போட இடம் இருக்கணுமே’ங்கறதுதான். என் மனசுபோல கணவர் மட்டும் அமையல... காம்பவுண்ட் பாதுகாப்போட வீட்டுத் தோட்டமும்தான்!" என்று சிரிக்கிறார் சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த சுபைதா சிராஜூதின்.

நம்ம வீட்டுத் தோட்டம் !

முருங்கை, முளைக்கீரை, கற்றாழை, அவரை, புடலங்காய், பீர்க்கன் காய், தக்காளி என பலவும் அத்தனை அடர்த்தியாக, செழிப்பாக இருக்கிறது சுபைதாவின் தோட்டம்.

"காய்கறிகளோட டேஸ்ட்டும் அவ்வளவு அருமையா இருக்கும். மண்ணை அந்தளவுக்கு நான் வளமாக்கி வச்சிருக்கறதுதான் காரணம்..!" என்று கண் சிமிட்டும் சுபைதா, அந்த சீக்ரெட்டை நமக்கு சொல்லித் தந்தார்.

"தினமும் வீட்டுச் சமையலுக்கு காய் நறுக்கும்போது கழிவாப் போற காய்கறித் தோல், சொத்தை காய்கறி, பழங்களோட கழிவுகள்னு... எதையும் நான் வெளியில கொட்டறதில்ல. கொள்ளைப் புறத்துல ரெண்டடி குழியைத் தோண்டி, அதுக்குள்ள எல்லாத்தையும் போட்டு வைப்பேன். அந்தக் கழிவெல்லாம் வெயிலுக்கும், மழைக்கும் இயற்கையான முறையிலேயே கம்போஸ் ஆகி, நல்ல பக்குவமான உரமா தயாராகிடும். காசு கொடுத்து இயற்கை உரம் வாங்கத் தேவையில்ல. இதையே என் தோட்டத்து செடிகளுக்கு உரமாப் பயன்படுத்திக்குவேன்" என்று சொன்னவர், தொடர்ந்தார்...

"தாவரத்துக்குத் தேவையான சத்துக்கும், மண் பாதுகாப்புக்கும் பாக்டீரியா ரொம்ப முக்கியம். செடிகளுக்குத் தேவையான அந்த பாக்டீரியாவை இயற்கை முறையில நாமளே வீட்டுல தயாரிக்கலாம். அதைத்தான் இயற்கை வேளாண்மைனு சொல்லுவாங்க..." என்று ஒரு குட்டி விஞ்ஞானி போலப் பேசிய சுபைதா, அதற்கான வழிமுறைகளை நமக்கு விளக்கினார்.

நம்ம வீட்டுத் தோட்டம் !

"ஒரு பிளாஸ்டிக் வாளியில தண்ணீர் ஊற்றி, அதில் தினமும் நாம சாப்பிடற வாழைப் பழத்தோல், புளிச்சிப் போன வீணான தயிர், பழைய சாதம் எல்லாத்தையும் போடுவேன். ஒரு மாசத்துல அதுல நிறைய பாக்டீரியா உருவாகியிருக்கும். அதை தோட்டத்துல இருக்கற தாவரங்கள்ல தெளிப்பேன். காய்கறிக் கழிவுகள் மட்டுமில்ல... மீன், மாமிசக் கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் வாளியில சேகரிச்சு, கொஞ்சம் தண்ணி ஊத்தி, அதுல நாட்டுச்சர்க்கரை கலந்து, ஒரு மாசம் மக்க விடுவேன். அப்பறம் பஞ்சாமிர்தம் போல அதுல ஒரு வாசனை வரும்போது, அதை எடுத்து புடலங்கொடி, பீர்க்கங்கொடி, கீரைகள், மத்த செடிகள்னு எல்லாத்துக்கும் தெளிப்பேன். இதனால என் தோட்டத்துல எல்லா காயும் தனி ருசியோட விளையுது. புடலை எல்லாம் இனிக்குது!" என்று சுவைப்படப் பேசிய சுபைதா, மண்ணை வளமாக்கும் இன்னும் ஒரு டிப்ஸ§ம் சொன்னார்.

நம்ம வீட்டுத் தோட்டம் !

"கடலை புண்ணாக்குல அரை கிலோ ஊற வச்சு, அதோட தண்ணி தெளிச்சு தோட்டத்து மண்ணுல தெளிச்சுட்டே வந்தா, மண்ணு வளமாயிடும்!"

"சரி, இத்தனை வேளாண் தொழில்நுட்பங்களை எங்கிருந்து பிடிச்சீங்க?" என்று கேட்டோம்.

"என் கணவர் 'பசுமை விகடன்’ வாங்கிட்டு வருவார். அதைப் படிச்சு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். எல்லாத் தையும் வெச்சு ஜமாய்க்கிறேன்" என்று சொல்லும் சுபைதாவின் மகன் ராசிக் ஃபீரீத் மற்றும் தங்கை பையன் நவாப் ஷெரீஃப் இருவரும், ஸ்கூல் விட்டு வந்தவுடன் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்களாம்! சுபைதாவின் கணவர் ஒரு அட்வகேட். அவரும் அவ்வப்போது தோட்டத்தில் ஆஜராம்!

சுபைதாவின் வீட்டுத் தோட்டத்தில் நம் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருந்தது அந்தக் கல்வாழை! "இது எதுக்கு..?" என்று நாம் புரியாமல் கேட்க,"குளிக்க, துணி துவைக்க, சமைக்கனு நாம புழங்கற நீர்க்கழிவுகள் தோட்டத்துக்கு வெளியேறும் போது, அதை இந்தக் கல்வாழை உள்வாங்கி, மண்ணை இன்னும் வளமுள்ள தாக்கும். ஒரு கல்வாழை கண்ணு நட்டா போதும்... அதுக்கு பக்கத்துல தானா நிறைய கல்வாழைகள் மண்டிடும்" என்று கூடுதல் தகவல் சொல்லி முடித்தார் சுபைதா!

"வெள்ளை பூஞ்சணம்...
செடியைக் காப்பாற்றுவது எப்படி?"

"என் தோட்டத்தில் உள்ள செம்பருத்தி செடிகளில் வெள்ளையாக பூஞ்சணம் படர்ந்துள்ளது. இதிலிருந்து செடியை எப்படிக் காப்பாற்றுவது?"

எஸ்.மோகனா செல்வகணேசன், சோழிங்கநல்லூரிலிருந்து கேட்டிருக்கிறார். பதில் தருகிறார் கோவில்பட்டி, மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் நீ.செல்வம்.

நம்ம வீட்டுத் தோட்டம் !

"உங்கள் வீட்டுச் செம்பருத்தியை தாக்கி இருக்கும் இந்த வெள்ளைப் பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி வகையை சேர்ந்தது. இதற்கு மாவுப் பூச்சி, கள்ளிப் பூச்சி எனப் பல பெயர்கள் உண்டு. பருவநிலை மாறுபாடு, தேவையான மழை இல்லாமல் போவது போன்ற காரணங்களால் இந்த பூச்சி, செடிகளில் பரவும். பூச்சியின் பரவல் ஆரம்ப நிலையில் இருந்தால், செடியை கவாத்து செய்வது நல்லது. அதாவது... பூச்சி தாக்கியிருக்கும் பகுதிகளை வெட்டிவிட வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால், வேப்பெண்ணெய் 20 மிலி, தண்ணீர் 1 லிட்டர் இவற்றைக் கலந்து தெளிக்கலாம். இந்தக் கரைசலை அப்படியே தெளித்தால் செடிகளின் மீது ஒட்டாது. எனவே, ஒரு சிட்டிகை அளவுக்கு காதி சோப்பு அல்லது ஏதாவது ஒரு சோப்புத் தூளை இதில் கரைத்து தெளிக்கலாம். செடியின் அளவுகளுக்கு ஏற்ப இந்தக் கரைசலை தயாரிக்கலாம்.

சிறிய கிண்ணத்தில் வேப்பெண்ணெய் எடுத்து, பூச்சி பாதித்த பகுதிகளில் பிரஷ் கொண்டு தடவுவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

பாதித்த செடியின் அக்கம் பக்கம் களைகள் இருந்தால், அவற்றை அகற்றிவிட வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால், அந்த பூச்சி இயற்கையாகவே மறைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை செடி முழுவதும் இந்தப் பூச்சி படர்ந்திருக்கும் பட்சத்தில், ஒன்றும் செய்ய இயலாது."

நம்ம வீட்டுத் தோட்டம் !
 
நம்ம வீட்டுத் தோட்டம் !
நம்ம வீட்டுத் தோட்டம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு