Published:Updated:

பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பிரீமியம் ஸ்டோரி

பெண்ணே...ரிலாக்ஸ் ப்ளீஸ்!
பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !
சுவாமி சுகபோதானந்தா
பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !

அவர்கள் இருவரும் புதுமணத் தம்பதி. அந்த மாப்பிள்ளை என் மாணவர்களில் ஒருவன். திருமணமாகி முழுதாக ஆறு மாதம்கூட முடியவில்லை. திடீரென்று என் முன் வந்து நின்றவன், ''தனியாக பேச வேண்டும். இல்லை... அழ வேண்டும் சுவாமிஜி!" என்று சோகம் பொங்கினான்.

''என்ன விஷயம்?" என்று கேட்டு முடிப்பதற்குள்...

''சுவாமி... அவ எடுத்ததுக்கெல்லாம் கோபப்படறா. வீட்டுக்கு லேட்டா வந்தா சண்டை. வாரம் ஒரு தடவை பைக்ல அவுட்டிங் கூட்டிட்டுப் போகலைனா சண்டை. நான் ஆபீஸ்ல இருக்கற நேரத்துல அவகிட்ட நடுநடுவுல போன்ல பேசலைனா சண்டை. இப்படி எல்லாத்துக்கும் சண்டை போட்டு, இப்பவெல்லாம் நாங்க சாதாரணமா பேசினாலே சண்டை வர்ற சூழ்நிலை வந்துடுச்சு.

'பேசினாதானே சண்டைனு கம்ப்யூட்டர்ல ஏதாவது வேலை பார்க்கலாம்'னு உட்கார்ந்தா, 'இதை கட் டிட்டு அழறதுக்கு என்னை ஏன் கட்டினீங்க?'னு அதுக்கும் சண்டை. இப்படி ஒண்ணுமே இல்லாத பிரச்னையை எல்லாம் ஊதி பெருசாக்கி, அவளும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தறா சாமி. அவளுக்கு என்னதான் பிரச்னைனும் புரியல"

-அந்த புது மாப்பிள்ளையால் வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. கண்களில் ஈரம் பொங்கியது.

அவனை ஆசுவாசப்படுத்தினேன். ''உன்னுடைய மனைவி, உன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறாள். உன்னோடு சேர்ந்து கடலை, வானத்தை, உலகத்தை ரசிக்க அவள் ஆசைப்படுகிறாள். அது நிறை வேறாத காரணத்தால் விரக்தியடைகிறாள். ஆழ்ந்து பார்த்தால், உன் மீதுதான் அதிக தவறு இருக்கிறது. உன் மனைவி, உன் மீது காட்டும் அன்பில் பத்தில் ஒரு பங்கையாவது நீ, அவளிடம் திருப்பிக் காட்டியிருந்தாலே அவள் மகிழ்ந்து போயிருப்பாள். உன்னுடைய அன்புக்காக ஏங்குகிறாள். இதுகூடவா உனக்குத் தெரிய வில்லை?" என்று கேட்டேன்.

''அவ என் மேல அளவு கடந்த அன்பு வச்சிருக்காங்கறது எனக்கும் புரியுது. ஆனா, எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, அவ கடுமை யான, காயப்படுத்தற வார்த்தைகளை பயன்படுத்துறா! அது அந்த அன் போட தரத்தையே குறைச்சுடுதே!" என்றவனை இடைமறித்தேன்.

''உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..? ஒருவர் இன்னொருவரை நோக்கி வீசும் கடும் சொற்களைவிட, ஒருவர் இன்னொருவர் மீது காட்டும் அலட்சியம்தான் அதிகமான வலியை ஏற்படுத்தக்கூடியது. அவள் உன்னிடம் பேசுவதற்காக உன் அருகில் வந்து உட்காரும்போது நீ கம்ப்யூட்டருக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்வது என்பதெல்லாம் உச்சகட்ட அலட்சியம் எனப் புரியவில்லையா?!" என்றேன்.

பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !

அவனுக்கு தன் மீதுள்ள தவறு புரிய ஆரம்பித்தது. ஆனாலும் சமாதானமடையவில்லை. ''கணவன் - மனைவி இருவரும் மன்மதன் - ரதியுமாவே இருந்தாகூட, 'ஐ லவ் யூ'னு ஒவ்வொரு நாளும் சொல்லிட்டே இருக்க முடியாது... இல்லியா? காதலைத் தவிர வாழ்கையில வேலை, நண்பர்கள், புத்தகம், இசை, பொழுதுபோக்கு இதெல்லாமும் முக்கியம்தானே?" என்று தர்க்கரீதியாகக் கேட்டான்.

அங்கே அவனுக்கு ஒரு கதை தேவைப்பட்டது...

சீன பேராசிரியர் ஒருவர் விநோதமான வடிவில் இருந்த கண்ணாடி ஜாடியை, 'மந்திர ஜாடி' என்று சொல்லி, கிரிக்கெட் பந்துகளால் நிரப்ப ஆரம்பித்தார். பத்து, பதினைந்து கிரிக்கெட் பந்துகளைப் போட்டதும் அது நிரம்பிவிட்டது. 'இதற்கு மேல் இதில் எதையாவது நிரப்ப முடியுமா?' என்று தன் மாணவர்களிடம் அவர் கேட்க, 'முடியாது' என்று ஒருமித்த குரலில் பதில் வந்து.

'இல்லை... முடியும்!' என்று சொன்ன பேராசிரியர், கோலி குண்டுகளை ஒவ்வொன்றாக பந்துகளின் இடைவெளி வழியாக ஜாடிக்குள் போட ஆரம்பித்தார். இருபது, இருபத்திரண்டு குண்டுகளை உள்வாங்கிக் கொண்ட ஜாடி மீண்டும் நிரம்பி வழிந்தது. 'இதற்குமேல் எதையுமே ஜாடிக்குள் போடமுடியாது' என்று மாணவர்கள் கோரஸாக குரல் எழுப்ப... 'முடியும்' என்ற பேராசியர், அந்த ஜாடியை நன்றாகக் குலுக்கியபடியே ஆற்று மணலை கொட்டி ஜாடியை நிரம்பினார்.

பேராசிரியர் தன் மாணவர்களிடம் விளக்கினார்-

''உங்கள் வாழ்கையும் இந்த மந்திர ஜாடி போலத்தான். இதில் கிரிக்கெட் பந்து என்பது உங்கள் குடும்பம் மற்றும் உடல்நலத்தைப் போன்றது. ஏனெனில், நீங்களே சொன்னதுபோல வாழ்கையில் மற்ற விஷயங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இவை மட்டும் இருந்தாலே போதும்... வாழ்க்கை நிறைவாக இருக்கும். கோலி குண்டுகள் என்பது ஆபீஸ், வீடு, மோட்டார் பைக் போல. மணல் என்பது டி.வி. சினிமா, பீச், பொழுதுபோக்கு போன்றது. நீங்கள் முதலில் மணலைக் கொண்டு... அதாவது சில்லறை விஷயங்களைக் கொண்டு வாழ்க்கை என்ற ஜாடியை நிரப்பிவிட்டால், அதில் குடும்பத்துக்கும், உத்தியோகத்துக்கும், அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இடமில்லாமல் போய்விடும்!"

இதைக்கேட்டு முடித்ததும், ஏதோ புரிந்ததுபோல் தலையை அசைத்துவிட்டுக் கிளம்பிய புதுமாப்பிள்ளையின் கண்களில் புத்தம்புதிதாக காதல் பூத்திருந்தது!

- அமைதி தவழும்...

சிந்தனை செய் மனமே...

கணவன்-மனைவிக்கு இடையே சண்டை, சச்சரவுகள் எழுவதற்கான காரணங்களில் முக்கியமானது, கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகள். 'அப்போ நீ என்னை இப்படி திட்டின... நீ எப்படி அந்த வார்த்தைகளை என்னைப் பார்த்து சொல்லலாம்?’ என்று துவங்கும் வாதங்கள், முடிவே இல்லாமல் நீளும். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், கோபம் பற்றிய புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், தன் சீடர்களோடு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். ஆற்றில் காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நீரின் போக்குக்கு நேரெதிர் திசையில் ஒரு மீனவன் தன் படகை செலுத்திக் கொண்டிருந்தான். அப்போது, வெள்ளநீரின் வேகத்துக்கு இணையாக ஒரு பெரிய படகு பாய்ந்துவர, பதறிய மீனவன், 'விலகிப்போ... என் மீது நீ லேசாக உரசினாலே என் படகு உடைந்துவிடும். நான் கவிழ்ந்துவிடுவேன்’ என்று பெரிய படகைப் பார்த்து கத்தினான். ஆனால், எந்தப் பலனும் ஏற்படவில்லை. பெரிய படகு, ஆக்ரோஷமாக நெருங்கி வந்தபோதுதான், அது ஆளில்லாமல் ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்த படகு என்று மீனவனுக்குப் புரிந்தது. அடுத்த கணம், துரிதமாக செயல்பட்டு தன் படகின் திசையை மாற்றி உயிர் தப்பினான்.

இதைப் பார்த்த ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ''கட்டுப்படுத்த யாருமில்லாத படகும், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதர்களும் ஒன்றுதான். ஆளில்லாத படகைப் பார்த்து என்ன சொல்லி, என்ன பிரயோஜனம். நாம் விலகி வருவதுதான் ஒரே வழி. அதேபோல, மனிதர்கள் கோபத்தின் கைப்பாவையாக மாறும்போது அவர்களின் பாதையில் இருந்து சற்றே விலகியிருப்பது நல்லது" என்று தன் சீடர்களுக்கு ஒரு பாடத்தையே நடத்தி முடித்தார்.

பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !
 
பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.....ரிலாக்ஸ் ப்ளீஸ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு