பிரீமியம் ஸ்டோரி

"இரக்கமில்லாதவரோடு இணக்கமாக இருக்க முடியுமா?"
என் டைரி 213
என் டைரி 213
வாசகிகள் பக்கம்

"பெற்றோர் ஒரு கையில்.... காதலன் மறு கையில் !"

என் டைரி 212-ன் சுருக்கம்

என் டைரி 213

"என் அக்கா நர்ஸாக இருக்கிறார். 'குடும்ப வாழ்க்கை யில் நாட்டமில்லை' என்று சொல்லி திருமணத்தை தவிர்த்துக் கொண்டே இருக்கிறார். இதற்கு நடுவே வேலை பார்க்கும் இடத்தில், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து, இரு தரப்பு பெற்றோரின் அனுமதியையும் பெற்றுவிட்டு காத்திருக்கிறேன் நான். 'மகனுக்கு வயதாகிறது' என்று திருமணம் முடிக்க சொல்லி, காதலரின் பெற்றோர் வற்புறுத்துகின்றனர். ஆனால், என் பெற்றோர், திருமண தேதியை குறிக்காமல் ஒரு வருடமாகத் தள்ளிப் போடுகின்றனர். திருமணப் பேச்சையெடுத்தாலே என் மனதை காயப்படுத்தி, வருங்கால கணவரைப் பற்றி தவறாக பேசுகின்றனர். பெற்றோரை மீறி திருமணம் செய்ய மன தைரியம் இல்லை. அதேசமயம், காதலரின் குடும்பத்தைக் காக்க வைப்பதிலும் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன். வழி சொல்லுங்கள்...''

உன் பெற்றோர் தாமதப்படுத்துவதன் காரணம் மதப்பற்றுதான். இந்த 21-ம் நூற்றாண்டில் ஜாதி, மதம் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். நீ இப்போது கவனிக்க வேண்டியது, 'உன்னைக் கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு உன் காதலன் நல்ல மனிதனா... அவன் குடும்பத்தினர் கண்ணியம் மிக்கவர்களா?' என்பதைத்தான். இதையெல்லாம் தீர விசாரித்து, உன் மனதுக்கு சரி என்று பட்டால், நன்கு ஆலோசித்து உடனடியாக நீங்களிருவரும் மண வாழ்க்கையில் இணையலாம். இல்லறம் ருசிக்க வேண்டுமெனில் வாலிபமும், வயதும் மிக முக்கியம்.

- ஜி.கே.எஸ்.பரிமளா மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

வருங்கால மனைவியான உனக்காக ஒரு வீட்டையே வாங்கியிருக்கும் அன்பும் பண்பும் நிறைந்த பாசமுள்ள காதலன், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தன் மகன் நலன் கருதி பெற்ற மகளைப் போல் உன் மீது பாசத்தைப் பொழியும் அவரின் பெற்றோர்! ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறமுடியும்! அதுவே ஆதாயத்தையும் தரும்! எப்போது, 'எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற இடம்தான்!' என்ற ஆணித்தரமான நம்பிக்கை உன்னுள் பதிந்துவிட்டதோ அதுதான் காலத்துக்கும் உனக்கு கை கொடுக்கும்!

- வசந்தா பரமசிவம், புனலூர்

உன் பொறுமையும், பெற்றோர் மேல் நீ வைத்து இருக்கும் மரியாதையும் பாராட்டுக்குரியது. ஆறு வருடங்களாக காத்து இருக்கும் உன் காதலர் நிச்சயம் நல்லவராகத்தான் இருக்க வேண்டும். நீ திருமணம் ஆகி போய்விட்டால் உன் வருமானம் குடும்பத்துக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்றுகூட உன் பெற்றோர் நினைக்கலாம். அதுதான் காரணம் என்றால், காதலரின் சம்மதத்துடன், உன் வருமானத்தில் இருந்து ஒரு சிறிய தொகையை தருவதாக உன் பெற்றோருக்கு உறுதி கூறி, அவர்களின் மனதை தெளிவுபடுத்து. அதன் பிறகு, காதலனைக் கைப்பிடி. இதன்மூலம், காலகாலத்துக்கும் இருதரப்பு உறவும் உன்னோடு ஒடோடி வந்துகொண்டே இருக்கும்!

- என்.உமாதேவி பலராமன், திருவண்ணாமலை

என் டைரி -213

பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் என்னை, 17 வயது நிரம்புவதற்குள் தூரத்து சொந்தத்திலேயே மணமுடித்தனர் பெற்றோர். ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் புகுந்த வீட்டுக் குள் காலடி எடுத்து வைத்தேன். ஆனால், எல்லாமே நேரெதிராகப் போனது என் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

என் டைரி 213

எதையுமே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மாமியார்; எப்போதும் குறை கூறும் நான்கு நாத்தனார்கள்; இவர்களின் பேச்சையே வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் என் கணவர் என்று மிக மோசமான ஒரு சிறைக்குள் சிக்கிக் கொண்டேன். அன்போ, அனுசரணையோ துளியும் இல்லாத அந்த வீட்டில் வேற்று மனுஷியைப் போலவே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால்... ஒரு கட்டத்தில் அம்மா வீட்டுக்கே வந்துவிட்டேன்.

'வாழாவெட்டி' என்று முத்திரை குத்திப் பார்க்கும் சமுதாயத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல் இருந்த என்னை, என் பெற்றோரின் கண்ணீர் ஆட்டி வைத்துவிட்டது. 'நம் செல்லமகளுக்கா இந்த கதி?' என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் கண்ணீர் வடிக்கவே... எதிர்பார்ப்புகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மறுபடியும் கணவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தேன்.

பதின்மூன்று வருடங்கள் ஓடிவிட, 10 வய தில் மகள், 8 வயதில் மகன் என்று வாழ்க்கை நகர்ந்தாலும், எனக்கு உரிய மரியாதையை மட்டும் தரவே இல்லை கணவர். கிட்டத்தட்ட வேலைக்காரியைப் போல் நடத்தியவர், தன்னுடைய மாத சம்பளத்தை ஒரு தடவைகூட என் கையில் தந்ததில்லை. வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்கித் தந்து விடுவார். மற்றபடி உடை, இன்னபிற செலவுகளுக்கு என் பெற்றோர்தான் உதவி வந்தனர்.

இந்நிலையில், அவருடைய வேலை பறிபோக, குறைந்த வருமானத்தில் வேறு வேலையில் சேர்ந்தார். 'குடும்பச் செலவை சமாளிக்க நாமும் வேலைக்குச் சென்றால் நம் அருமை அவருக்கு புரியும்' என நினைத்து, டெய்லரிங் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். தன்னைவிட இரண்டு மடங்கு அதிகம் சம்பாதிப்பதை ஆணாதிக்க குணமுள்ள அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அடிக்கடி உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு சண்டை போட்டு, ''நீ வேலைக்கு போக வேண்டாம்'' என்று பிரச்னையை ஆரம்பித்தார். மீறிப் போவதாக இருந்தால் ''சம்பள கவரை அப்படியே என்னிடம் தர வேண்டும். ஒரு ரூபாய்க்குக்கூட கணக்கு சொல்ல வேண்டும்'' என்று நிபந்தனைகளை விதித்தார்.

கொஞ்சம்கூட மனிதாபிமானம், அன்பு, இரக்கம் இவை எதுவுமே இல்லாமல் நடந்து கொள்ளும் அவரை நம்பியிருந்தால்... குழந்தைகளின் எதிர்காலமும் பாழாகிவிடும் என்று முடிவெடுத்து மறுபடியும் தாய் வீட்டுக்கே திரும்பிவிட்டேன்.

இப்போது என் சொந்தக் காலில் நின்று குழந்தை களை நல்லபடியாக படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், குழந்தைகளுக்கு 'அப்பா' எனும் உறவு இல்லையே என்ற கவலைதான் வாட்டி வதைக்கிறது. நான் எடுத்த முடிவு சரியா... தவறா? தீர்ப்பு சொல்லுங்கள் தோழிகளே..!

- பெயர் வெளியிட விரும்பாத 'அவள்' வாசகி

என் டைரி 213
 
என் டைரி 213
என் டைரி 213
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு