Published:Updated:

அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...

அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...

பிரீமியம் ஸ்டோரி

அன்னத்துக்குக் குறைவில்லை... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை...
அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...
அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...
அற்புத விருந்தளிக்கும் அன்னை அன்னபூரணி!

அன்னம்... பராசக்தி ஸ்வரூபம். அகிலத்தின் அத்தனை உயிர்களையும் அன்னமெனும் அமுதளித்து பேணிக் காப்பவள் பராசக்தி அன்னை. அந்த அன்னைதான் காசி மாநகரில் 'அன்னபூரணி' என அவதரித்து, வேண்டும் பக்தர்கள் வீட்டின் உணவுக் களஞ்சியத்தை, காலத்தால் வற்றாத அட்சயபாத்திரமாக்கி அருள்புரிகிறாள்!

அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...

ஆதிசக்தி, அன்னபூரணி வடிவெடுத்ததற்கு வரலாறு ஒன்று இருக்கிறது. பிரம்மனின் தருக்கு அறுக்க, அவன் தலைகளில் ஒன்றை அரிந்தான் சிவன். அதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானான். தோஷம் அவனது அடிவயிற்றில் பசிப் பிணியாகப் பற்றிக் கொண்டது. 'பரமசிவன், தன் கையில் கபாலம் தாங்கிப் பிச்சை புக வேண்டும்; பிச்சைப் பாத்திரத்தில் ஆதிசக்தி அன்னம் அளித்து நிறைய வேண்டும்' என்பது தோஷ விமோசனம். ஆதிசக்தி, அன்னபூரணி அவதாரம் எடுத்தாள். ஆண்டவன் கை கபாலத்தை அன்னமிட்டு நிரப்பினாள். அவனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது!

சரி... சிவனுக்காக அவதாரமெடுத்த அன்னபூரணி, வாரணாசி வந்தடைந்தது எப்படி?

காசியில் தேவதத்தன், தனஞ்செயன் எனும் சகோதரர்கள் இருவர் இருந்தனர். தேவதத்தன், தேவ வாழ்க்கை நடத்தி வந்தான். தனஞ்செயன் தரித்திரன். ஒருநாள் தனஞ்செயன் புசிப்பதற்கு அன்னமின்றி, பசியுடன் காசியின் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்தான். 'அன்னதோஷம் என்னைப் பீடிக்க என்ன காரணம்... எந்தப் பிறவியில், எவருக்கு, என்ன கெடுதல் ஏற்படுத்தினேன்?' எனப் பலவாறாக யோசித்துப் பசி மயக்கத்தில் உறங்கிப்போனான். அப்போது கனவில் தோன்றிய ஒரு சந்நியாசி, ''தனஞ்செயா! முன்னொரு காலத்தில் காஞ்சியில் சத்ருமர்தன் எனும் ராஜகுமாரன் இருந்தான். அவனுக்கு ஹேரம்பன் என்னும் ஒரு தோழனும் இருந்தான். இருவரும் வேட்டைக்காகக் காட்டுக்குச் சென்று, வழி தடுமாறினர். பசியால் பரிதவித்தனர். இருவரையும் கண்ட ஒரு முனிவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று, பாலில் வேகவைத்த அரிசி மாவை அளித்தார். சத்ருமர்தனுக்கு அந்த அன்னம் அமுதமாகத் தித்தித்தது. ஆவலுடன் உண்டான். தோழன் ஹேரம்பனுக்கோ அரிசி மாவுக் கஞ்சி அற்பமாகத் தோன்றியது. கொஞ்சம் உண்டான். மிச்சத்தை எறிந்தான்.

அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...

அன்னத்தை அவமானப்படுத்தியதால் அன்னதோஷத் தால் பீடிக்கப்பட்டு இந்தப் பிறவியில் தனஞ்செயனாகத் தரித்திரத்தைத் தழுவியிருக்கிறான் ஹேரம்பன். சத்ருமர்தனோ உன் சகோதரன் தேவதத்தனாகப் பிறந்து திரளான செல்வத்தையும், குன்றாத அன்னத்தையும் கொண்டிருக்கிறான். இந்த நிலை மாறவேண்டுமானால்... நேம, நியமங்களில் இருந்து வழுவாமல் விரதம் இருந்து அன்னபூரணியை ஆராதித்தால் அவள் அருளை அடையலாம்" என்றார்.

கனவு கலைந்தது. தனஞ்செயன் எழுந்தான். அன்னபூரணி விரதம் இருக்க விழைந்தான். காண்போரிடத்தில் எல்லாம் அன்னபூரணி விரதத்துக்கான நேம, நியமங்கள் என்னவென்று விசாரித்தபடி அலைந்து, அலைந்து தற்போதைய அஸ்ஸாம் பகுதியில் இருக்கும் காமரூபமெனும் இடத்தை அடைந்தான். அங்கேயும் அன்னபூரணி விரதத்துக்கான நேம, நியமங்களை எடுத்துச் சொல்பவர்கள் எவரையும் காண முடியவில்லை. வாழ்வை முடித்துக் கொள்ளும் தீர்மானத்துடன் இருட்டுக் கிணற்றில் குதித்தான். அதில் கண்களைக் கூச வைக்கும் ஓர் ஒளிப்பிரதேசம் தெரிந்தது. தனஞ்செயன் அந்த இடம் நாடிச் சென்றான். அங்கே ஓர் அழகான ஏரி. அதன் கரையில் ஸ்படிக உடலுடன் ஓர் ஆண்மகன் ஆனந்த நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் சடையில் பிறை. உடல் முழுவதையும் ஆபரணங்களாக அலங்கரித்திருந்தன நாகங்கள். அருகில் ரத்தினப் பல்லக்கில் அலங்கார ரூபிணியாக அன்னை ஒருத்தி அமர்ந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

தட்டுத் தடுமாறி நின்ற தனஞ்செயனை பல்லக்கு நாயகி தன்னருகே வருமாறு கண்களால் கட்டளையிட்டாள். அவளின் காலடியில் வீழ்ந்த தனஞ்செயனிடம், ''நீ தேடி அலையும் அன்னபூரணி நான்தான். ஈசனின் தாண்டவத்தைக் கண்டு களிக்க இங்கே வீற்றிருக்கிறேன்” என்றாள் அன்னை. தனஞ்செயன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அன்னபூரணி விரதம் மேற்கொள்ளும் முறையை இயம்பினாள்.

''தனஞ்செயா! அன்னபூரணி விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு ஒரு போதும் குறை இருக்காது. அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டும். எந்த வீட்டில் என்னைப் பூஜிக்கிறார்களோ அந்த வீட்டில் நான் வாசம் புரிவேன். நீ திரும்பிச் சென்று அன்னபூரணி விரதத்தை நேம, நியமங்களுடன் தொடங்கு. உனக்கு அருள்பாலிக்க காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பு" என்று அன்னபூரணி அருள்வாக்கு அளித்தாள்.

தனஞ்செயன், காசிக்கு வந்தான். நியமங்களைக் கடைபிடித்து விரதம் ஏற்று, அன்னபூரணி ஆராதனையைப் பங்கம் எதுவுமின்றி செய்து முடித்தான். பின்னர், அன்னையின் ஆணைப்படி அவளுக்கு ஓர் ஆலயம் அமைத்தான். அன்னபூரணி அருள்பாலித்தாள். காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கும் அதே வீதியின் முனையில்தான் அன்னபூரணி ஆலயம் அமைந்திருக்கிறது.

அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...

இடது கையில் அன்ன பாயசப் பாத்திரம், வலது கையில் வாரி வழங்கும் கரண்டி கொண்டு அன்னபூரணி நின்ற நிலையில் அருள் பாலிக்கிறாள். இந்த அன்னையை தரிசித்தால்தான் காசி யாத்திரையே பூர்த்தியாகிறது.

ஆலயத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சுரங்கம் போல் அமைந்திருக்கும் ஒரு சந்நிதியில் சக்தி வாய்ந்த யந்த்ரேஸ்வரர் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். படிகள் இறங்கிச் சென்று யந்த்ரேஸ்வரரைக் கையால் தொட்டு வணங்கி, கணநேரத்துக்கு காலத்துக்கும் மறக்க இயலாத சிலிர்ப்பை எய்தலாம். லிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

அன்னையின் மண்டபத்தில் நன்றி தேங்கிய கண்களுடன் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் பெங்களூரில் இருந்து வந்திருந்த சந்திரா வேணுகோபால்... "என் கணவருக்கு அரசுத் துறையில வேலை. ஆனா, அவருக்கு சம்பந்தமேயில்லாத ஒரு குற்றச்சாட்டுல அவர் பெயரும் சேர்க்கப்பட்டதால, அவரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ரெண்டு வருஷமா வருமானமே இல்லாம, மூணு குழந்தைங்களையும் வச்சுக்கிட்டு, சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லாம தவியா தவிச்சோம். அப்போ ஒரு மாமி எங்கிட்ட, 'அன்னபூரணி விரதம் இரு... எல்லாம் சரியாயிடும்'னு சொல்லி, விரதம் இருக்கற முறையையும் சொல்லிக் கொடுத்தாங்க. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... விரதத்தை முடிச்ச நாலாவது நாள் என் கணவர் மேல எந்தத் தப்பும் இல்லைனு கோர்ட்லயிருந்து தீர்ப்பு வந்துடுச்சு. அவர் வேலைக்குப் போக ஆரம்பிக்க, நிறுத்தி வச்சிருந்த சம்பளப் பணமும் பெரிய தொகையா வந்தது. அந்தப் பணத்துல ஒரு வீடு கட்டினோம். இப்ப சந்தோஷமா இருக்கோம். அதுலயிருந்து தவறாம அன்னபூரணி விரதம் இருந்துட்டு வர்றேன். சந்தர்ப்பம் வாய்க்கறப்பல்லாம் நேரா காசிக்கு கிளம்பிவந்து அவளுக்கு நன்றி சொல்லத் தவறுறது இல்லை!'' என்றார் நெகிழ்ச்சியுடன்!

தன் ஆலயம் தேடி வருபவர்களை மட்டுமல்ல... வீட்டிலேயே விரதமிருந்து தன்னை நெஞ்சுருகப் பிரார்த்திப்பவர்களுக்கும் வறுமை விரட்டி வளம் கொடுப்பவள்தான் அன்னபூரணி. வீட்டிலிருந்தபடியே அன்னபூரணி விரதம் மேற்கொண்டாலே போதும்!

எப்படிச் செல்வது..?

உத்தரபிரதேச மாநிலம், காசி மாநகரில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு நாட்டில் உள்ள பெருநகரங்களில் இருந்தெல்லாம் ரயில் வசதி உள்ளது. அங்குள்ள நகரத்தார் சத்திரம், சங்கர மடம் என்று தங்கிக்கொள்வதற்கான விடுதிகள் பல உள்ளன. உணவு விடுதிகளுக்கும் குறைவில்லை. தரிசன நேரம் காலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரை.

இப்படித்தான் இருக்க வேண்டும் அன்னபூரணி விரதம்!

மார்கழி மாதம் கிருஷ்ண பஞ்சமி அன்று, அதாவது பௌர்ணமியிலிருந்து ஐந்தாம் நாள் விரதத்தைத் தொடங்க வேண்டும். முதலில் தலை முழுகி ஸ்நானம் செய்யவேண்டும். பிறகு, பட்டு அல்லது பருத்தியாலான அடர்த்தியான நூல் துண்டுகளை தேவையான அளவுக்கு எடுத்து, அதைக் குங்குமத்தில் தோய்த்து, பதினேழு முடிச்சுகள் இடவேண்டும். இதுதான் நோன்புக் கயிறு. இதை பூஜையில் வைத்து, சந்தனம் தெளித்து, தூபதீபம் காட்ட வேண்டும். நோன்புக் கயிற்றின் முடிச்சுகளில் அன்னபூரணி வந்து இறங்குமாறு மனதை ஒருமுகப்படுத்தி வேண்டிக் கொள்ள வேண்டும். பின் மறுபடி நோன்புக் கயிற்றுக்குத் தூபதீபம் காட்டி, அதில் வந்து வாசம் செய்யும் அன்னபூரணியிடம் நம் பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டும். பின் நோன்புக் கயிற்றை எடுத்து, ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பூஜையைப் பதினேழு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பதினேழாவது நாள், சுக்கில சஷ்டி அன்று... அதாவது, அமாவாசை தொடங்கி ஆறாவது நாள் விரதத்தை முடிக்கும் நாள். அந்த நாளில் மட்டும் விளக்கு வைத்தபின் இரவில் பூஜை செய்ய வேண்டும். இரவு தலைமுழுகி ஸ்நானம் செய்துவிட்டு, வெள்ளை ஆடை அணிந்து, நெல்மணிகளைப் பரப்பி, அதில் கையால் கற்பக விருட்சத்தை வரைய வேண்டும். அந்த மரத்தினடியில் அன்னபூரணியின் உருவச் சிலையையோ... சித்திரத்தையோ வைக்க வேண்டும்.

ஒரு தாமரை மலரை எடுத்து அதன் இதழ்களில் நந்தினி, மேதினி, பத்ரா, கங்கா, பஹ§ரூபா, நிதிக்ஷ£, மாமா, ஹேதி, ஸ்வஸா, ரிபுஹந்திரி, அன்னதா, நந்தா, பூர்ணா, ரூசிநேத்ரா, ஸ்வாமிசித்தா மற்றும் ஹாஸினி என்ற பதினாறு பெயர்களை விரலால் எழுத வேண்டும். பழங்கள், அன்னம், அன்ன பாயாசம்... எது இயலுமோ அதனை நைவேத்தியமாகப் படைத்து, தூபதீபம் காட்டி விரதத்தை முடிக்க வேண்டும்.

அன்னபூரணி விரதத்தைத் தனியாகவும் மேற்கொள்ளலாம். அல்லது ஆண்கள், பெண்கள் சேர்ந்த குழுவாகவும் மேற்கொள்ளலாம். நோன்புக் கயிற்றை ஒவ்வொரு நாள் பூஜையின் போதும் அவிழ்த்துப் பூஜையில் வைத்து தூபதீபம் காட்டி, மறுபடி அணிந்து கொள்ளலாம். விரதம் முடிந்தபின் நோன்புக் கயிற்றை நதியிலோ, நல்ல குளத்து நீரிலோ, கடலிலோ சங்கமிக்க விடலாம்.

அன்னதோஷம் யாரைப் பீடிக்கும்?

கர்ப்பிணிப் பெண்கள் வந்து யாசகத்துக்கு நிற்கும்போது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்கள்; பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்கள்; அன்னதானமாக யாரோ அளித்த உணவை, பசியிருந்தும் ஏற்காமல் நிராகரித்து அலட்சியப்படுத்துபவர்கள்; உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களைக் கோபித்து, உணவைச் சாப்பிட விடாமல் விரட்டி அடிப்பவர்கள்; தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருக்கும்போது, யாருக்கும் பகிர்ந்து அளிக்காதவர்கள்; உணவு உட்கொள்ளும்போது கோபவசப்பட்டு, இல்லறத் துணையைக் கடுஞ்சொற்களால் ஏசுபவர்கள்; பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்கள் ஆகியோரை அன்ன தோஷம் பீடிக்கும்.

அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...
 
அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...
அன்னத்துக்குக் குறைவில்லை.... ஐஸ்வர்யங்களுக்கும் பஞ்சமில்லை ...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு