உதாரணமாக, 'ஊரக வளர்ச்சித் திட்டத்'தை அரசு செயல்படுத்தப் போகிறது என்றால், அந்தத் திட்டம் எந்த விதத்தில் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும்; அதனால் எத்தனை சதவிகித மக்கள் பயனடைவார்கள்; ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படக்கூடுமா...? என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து அரசுக்கு பரிந்துரைக்கும் பொறுப்பு இக்கல்லூரி பேராசிரியர்கள்- மாணவர்கள் டீமிடம் வழங்கப்படும்.
இன்றைக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிரச்னை பீகார், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் என்று பல மாநிலங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதை, 'மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நம் இந்தியாவில் உருவாகும் வாய்ப்புள்ளது' என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துச் சொல்லிவிட்டனர் இக்கல்லூரி மாணவர்கள். அந்த அளவுக்கு நம் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் மீது ஆழமான பார்வையுடைய வர்களாக தங்கள் மாணவர்களைச் செதுக்குகிறது இக்கல்லூரி.
இப்போது பல தனியார் சேவை நிறுவனங்கள் தொடங்கி, ஐ.நா. சபை வரை இந்தியாவின் அடித்தட்டு மக்களை பலப்படுத்தும் பல கோடி ரூபாய் ப்ராஜெட்டுகளுக்கான திட்டமிடலை இவர்களின் கைகளில் ஒப்படைப்பது, குறிப்பிடத்தக்கது. இவர்களின் இந்தத் தரம், திறமைக்காகத்தான் நாட்டின் முக்கிய தனியார் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இந்த மாணவர்களை படிப்பு முடித்த கையோடு தங்களின் பணிக்கு தவமிருந்து அழைத்துக் கொள்கின்றன... செய்யும் வேலை, சேவைக்கேற்ற மரியாதையான சம்பளத்துடன்!
இந்த மூன்று வருட படிப்பில் சேர்வதற்கு ப்ளஸ் டூ-வில் ஐம்பது சதவிகித மார்க், நுழைவுத்தேர்வு, குரூப் டிஸ்கஷன், பர்சனல் இன்டர்வியூ என அடுத்தடுத்த படிகள் உள்ளன. பணம் சம்பாதிக்கும் எண்ணம், பொழுதுபோக்கு என்று இந்த கோர்ஸைத் தேர்ந்தெடுத்திருப்பவர்கள் எல்லாம் பர்சனல் இன்டர்வியூவில் வடிகட்டப்பட்டு, இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கம், சேவை மனப்பான்மை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் வழங்கப்படும்!
|