Published:Updated:

என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...

என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...

என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...

என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...

Published:Updated:

எம்.எஸ்.ஹாசினி, படங்கள் கே.கார்த்திகேயன்
என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...
என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்..."
தள்ளாத வயதிலும் தளராத பெண் போராளி!

என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்... வாழ்க்கை முழுக்க போராட்டங்களுடனும், புரட்சிகளுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் எண்பத்தி மூன்று வயது பெண்மணி!

சுதந்திரப் போராட்டத்தில் ஆரம்பித்த இவருடைய இளமைக் காலம்... இறால் பண்ணை ஒழிப்பு, மது ஒழிப்பு, மண் குடிசை மாற்றுத் திட்டம் என்று இந்த தள்ளாத வயதிலும் தளராமல் தொடர்கிறது. இந்த காந்தியவாதியின் சேவைகளுக்காக இதுவரை ஏழு இந்திய விருதுகள், இரண்டு வெளிநாட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

நாகப்பட்டினம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தில் தற்போது வசித்துக் கொண்டிருக்கும் இவருக்கு, அமெரிக்காவின் பல்கலைக் கழகம், சமூக சேவைக்காக 'ஓபஸ்' விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது... 45 லட்சம் பரிசுத்தொகையுடன்! ஸ்வீடன் நாட்டின் நோபல் பரிசுக்கு இணையான 'மாற்று நோபல் பரிசு'ம் இவரைத் தேடி வந்தது... 35 லட்சம் பரிசுத் தொகையுடன்!

ஆப்பிரிக்க கறுப்பின விடுதலைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை சந்தித்து தன் போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வரலாறு படைத்திருக்கும் கிருஷ்ணம்மாள், தன்னுடைய நெடிய பயணத்தின் சில போராட்டப் பக்கங்களை நமக்காகப் புரட்டினார்...

"1968-ம் ஆண்டு எனது சொந்த ஊரான மதுரையில் இருந்தேன். அப்போது, நாகப்பட்டினம் அருகேயுள்ள கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், தங்களுடைய கூலியில் அரைப்படி நெல் உயர்த்திக் கேட்டனர். இதற்காக 44 தலித்துகள் குடிசையோடு சேர்த்துக் கொளுத்தப்பட்டனர். இந்தகோர சம்பவத்தைக் கேள்விப்பட்டு, நானும் என் கணவரும் துடிதுடித்துப் போய் இங்கு ஓடிவந்தோம். இருவருமே சுதந்திரப் போரட்டத்தில் பங்கேற்றவர்கள். ஆனால், அந்த சமயத்தில்கூட இப்படியரு காட்சியைக் கண்டதில்லை. எங்கு பார்த்தாலும் ரத்த சகதி, ஆறுதலுக்கு ஆளில்லா அழுகுரல்கள். கொதித்துப் போனோம்.

என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...

இந்தச் சம்பவம் எங்களை மிகவும் பாதிக்கவே... சபிக்கப்பட்ட அந்த மக்களுக்காக களமிறங்கி போராடத் தயாரானோம். ஆனால், உயர் ஜாதியினரின் முன் நிமிர்ந்தே பழக்கப்படாத அவர்களது முதுகுகளை நேர்படுத்துவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதற்காக நாங்களும் தளரவில்லை. கோயில் சொத்துக்களை அபகரித்த ஜமீன்களின் முகத்திரைகளைக் கிழித்தோம். அந்த ஆக்கிரமிப்பு சொத்துக்களில் நாட்கணக்கில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம். அடி, உதை பட்டோம். சிறை சென்றோம். எங்கள் போராட்டத்தின் தீவிரம், பப்ளிக் கோர்ட்டையே அந்த குக்கிராமத்துக்கு வரவழைத்தது. சட்டரீதியாக அத்தனை போலித்தனங்களையும் உடைத்தெறிந்து, நிலங்களை மீட்டெடுத்து நிலமில்லாத ஏழைகளுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தோம்...'' என்று சொல்லும் கிருஷ்ணம்மாளுக்கு, அதற்குப் பிறகுதான் அந்த முள்பாதை பயணத்தின் முக்கியமான அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது.

"நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் பெற்றுத் தருவதற்காக 'லாஃப்டி' என்கிற உழவனின் நில உரிமை இயக்கத்தை தொடங்கினோம். பேங்கில் லோன் பெற்று நிலத்தை வாங்கி சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் பட்டா செய்தோம். அதை நாங்கள் வைத்துக் கொண்டு, நிலத்தை மட்டும் ஒப்படைத்தோம். நிலத்தில் சாகுபடி செய்து, நிலத்துக்குரிய தொகையை எங்களிடம் கட்டிவிட்டு, பட்டாவை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வகையில் பல்லாயிரம் குடும்பங்கள் தற்போது நிலம் பெற்றுவிட்டன. இனி அவர்களுக்கு வீடு அமைத்துத் தரவேண்டும் என்பது என் ஆசை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது விருது தொகைகளை அதற்கே அர்ப்பணித்துவிட்டேன்"

- ஆணித்தரமாக பேசுகிற கிருஷ்ணம்மாளின் அந்த முயற்சிதான் இன்று 13,000 நிலமற்ற ஏழை குடும்பங்களை தலா ஒரு ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர் ஆக்கியுள்ளது. தாய் அல்லது தந்தையை இழந்த 242 பிள்ளைகள் இன்று இவருடைய ஆதரவில் வளர்கிறார்கள். இவரால் வளர்க்கப்பட்டு படிக்க வைக்கப்பட்ட பல மாணவர்கள் இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆளாகி நிற்கிறார்கள். குடிசை வீடுகளில் வாழ்ந்த 2,000 பேர் ஓட்டு வீடுகளில் நிம்மதியுடன் வசிக்கின்றனர்.

சமூக வாழ்க்கை மட்டுமல்ல... கிருஷ்ணம்மாள் - ஜெகந்நாதன் தம்பதியின் இல்லற வாழ்க்கையும் நம்மை நிமிர்ந்து பார்க்கவே வைக்கிறது.

"அவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். நானோ தலித். இருந்தும் எங்களுக்குள் காதல் பூத்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகுதான் திருமணம் என்று முடிவெடுத்து ஒருவழியாக 1950-ல் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடித்த இரண்டாவது நாளே வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்துக்காக அவர் வடநாடு புறப்பட்டுச் சென்றுவிட்டார். நான் சென்னையில் தங்கி ஆசிரியர் பயிற்சி பெற்றேன். ஆனால், அந்தச் சான்றிதழ்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, போராட்டங்களை நான் முன்னெடுத்தபோது, என்னை பெருமையுடன் பார்த்தவர் அவர். 'மனைவியின் அறிவாற்றலை அடுப்படியில் கருக்க மாட்டேன்' என்று கூறி, திருமணமாகி ஆறு ஆண்டுகள் வரை நான் இயக்கச் செயல்பாடுகளுக்காக அலைந்துகொண்டிருந்த சமயங்களில் எல்லாம், வெறும் காய்கறி உணவை மட்டுமே உண்டு வந்தார்..." எனும் கிருஷ்ணம்மாள், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்ற முதல் தலித் பெண்மணி.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக பேசும் ஆற்றல் பெற்றவர். இவரைப் பற்றிய புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் வெளிவந்துள்ளன.

96 வயதாகும் ஜெகந்நாதன், அமைச்சர் பதவி தொடங்கி தன்னைத் தேடி வந்த அத்தனை விருதுகளையும் புறந்தள்ளிவிட்டு, தரமான வாழ்க்கை வாழ்ந்த நிம்மதியுடன் இருக்கிறார்.

என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...

"இன்றும் அவர் ராட்டையில் நெய்து தரும் நூலைத்தான் தாலியாக அணிகிறேன். சேவை என்ற லட்சியம்தான் எங்களை ஒன்றிணைத்தது. இன்றளவும் சேர்த்து வைத்திருக்கிறது!" - பூரிக்கிறார் அந்த முதிய மங்கை!

இப்படிப்பட்ட பக்குவ தம்பதியின் இரண்டு வாரிசுகளும் 'தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்' என்பதற்கு சரியான உதாரணம். ஆண், பெண் என இரு வாரிசுகள். இருவருமே டாக்டர்கள். மகன் பூமிகுமார் கம்போடியா நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தனி மருத்துவமனை தொடங்கி சேவை புரிந்து வருகிறார். மகள் சத்யா குழந்தைகளுக்கான இன்குபேட்டர் கருவியைக் கண்டுபிடித்திருப்பதுடன், செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கென தனிவார்டை உருவாக்கி சேவை செய்து வருகிறார். இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல்... முழுக்க முழுக்க பொதுச்சேவைக்குத் தங்களை அர்ப்பணித்துவிட்டனர்.

என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...
-
என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...
என்றுமே தணியாது இந்தப் போராட்ட தாகம்...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism