ஐரோப்பிய நாடான மால்டோவா (Moldova) போன்ற நாடுகளில் பெற்றோர் வேலை தேடி வெளியிடங்களுக்குச் செல்வது அதிகமாக உள்ளதால், அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேசி, முதியவர்களை தம்மோடு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு நிதி வழங்கி வருகிறது ஐ.நா. அமைப்பான யுனிசெஃப்!.
ஜப்பான் போன்ற நாடுகளில் மூத்தவர்கள் எவ்வளவு காலம் நலமாக வாழ்கின்றார்கள் என்பதே குடும்பத்தின் கௌரவமாகக் கருதப்படுகிறது. கடல் பாசி உணவுகளை உண்டால், நீண்ட நாள் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளதால், வாரம்தோறும் அதற்கென இரண்டு, மூன்று நாட்களை ஒதுக்கி கடல்பாசி உணவகங்களுக்கு அவர்களை அழைத்துப் போய் வருவதை ஜப்பானியர்கள் பலரும் குடும்பக் கடமையாகக் கருதுகின்றனர்.
இப்படி... முதியவர்கள் அதிக சதவிகிதம் உள்ள நாடுகளில் அவர்கள் மீது செலுத்தப்படும் கவனம்கூட, உலகிலேயே மிகக் குறைந்த சதவிகித முதியவர்களே உள்ள இந்தியாவில் செலுத்தப்படவில்லை.
வயது முதிர்ந்தவர்கள் மீது நாம் செலுத்தும் 'புறக்கணிப்பு' எப்படிப்பட்ட செய்நன்றி கொன்றதனம் என்பதை இந்த வெளிநாட்டுக் கதை விளக்குகிறது-
வயதான தந்தை, நடுத்தர வயது மகனின் வீட்டிலே வாழ்கிறார். முதுமை, அவருடைய கால், பார்வை இதையெல்லாம் பாதிக்கிறது. படுக்கையே அவருடைய உலகமாக மாறுகிறது. ஒருநாள் மகனைக் கூப்பிட்டு, "ஜன்னல்ல ஏதோ அசையுற மாதிரி இருக்கு. என்னனு பாரு" என்கிறார்.
எட்டிப் பார்த்த மகன், "ஒண்ணுமில்லப்பா... ஒரு காக்கா" என்கிறான்.
காது அடைத்த நிலையில் உள்ள தந்தை, "என்னது..?" என மீண்டும் கேட்கிறார்.
"காக்கா... காக்கா..."
"என்ன சொல்றேன்னு புரியலையேப்பா..."
"எத்தனை தடவ சொல்றது...? புரியலைனா விட்டுத் தொலைக்க வேண்டியதுதானே? அது ஒரு காக்கா... காக்கா... காக்கா..." என்று கத்துகிறான் மகன்.
சிறிய நிசப்தத்துக்குப் பிறகு, மகனை அருகிலே கூப்பிட்ட தந்தை, "நான் எழுதுன டைரிங்க எல்லாம் பீரோவுல இருக்கு, அதுல 1965-ம் வருஷ டைரிய கொஞ்சம் எடுத்துட்டு வாப்பா..." என்கிறார். அப்படியே எடுத்து வந்த மகனிடம், முதல் நாளின் குறிப்பைப் படிக்கச் சொல்கிறார். படித்து முடித்த மகனின் கண் களில் நீர் வழிகிறது.
"இன்று என் ஒன்றரை வயது மகன், என் வீட்டு ஜன்னலிலே வந்து உட்கார்ந்த காகத்தை முதல் முறையாகப் பார்த்தான். என்னிடம் ஓடோடி வந்து 'அது என்ன?' என்று கேட்டான். 'அது ஒரு காகம்...' என்று நான் சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை, மீண்டும் 'அது என்ன...?' என்று கேட்டான், நான் 'காகம்... அது ஒரு பறவை' என்று விளக்கினேன். அப்போதும் புரியவில்லை. 30 தடவைக்கு மேலே 'அது என்ன.. என்ன..?' என்று கேட்டுக்கொண்டே இருந்தான். நெடுநேரம் விளக்கிய பின்பு புரிந்து கொண்டான். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால், என் மகனுக்கு ஒரு காகத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்!"
'பெற்ற கடனை' அடைக்கும் அளவுக்கு, பணக்காரர்களாக எந்தப் பிள்ளையும் உலகில் இல்லை. குறைந்தபட்சம், அவர்களின் மனது வாடாமல் பாது காத்து, அந்தக் கடனுக்கான வட்டியையாவது அடைப்போம்!
|