ஏதோ ஒரு வகையில் சமூகத்தால் அநாதைகளாக்கப்படும் இவர்களுக்காகவே தனது கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது, புனித வளனார் கருணை இல்லம். திண்டுக்கல் - மதுரை சாலையில் மெட்டூர் ரயில்வே கேட் அருகில் இருக்கும் இந்த இல்லம், கார்ப்பரேட் அலுவலகம்போல பளீரென படு சுத்தமாக இருக்கிறது. மரத்தடியிலும், திண்ணைகளிலும் முதியவர்கள் சிலர் உறங்குகின்றனர், சிலர் சாப்பிடுகின் றனர், உடலால் இயங்க முடிந்த சிலர் தங்களாலான வேலைகளில் ஈடுபடுகின்றனர், வரிசையாக போடப்பட்டிருக்கும் மெத்தைகளில் சிலர் ஓய்வு எடுக்கின்றனர். ஆனால், இது எதற்கும் அங்கே எந்த நிர்ப்பந்தமுமில்லை. இருக்க இடம், உண்ண உணவு, தேவைப்பட்டால் மருத்துவ உதவி அனைத்தும் கிடைக்கிறது - அமைதியான மரணமும் கூட!
இந்த இல்லத்தின் நிறுவனர் ஃபாதர் தாமஸிடம் பேசினோம். "பெற்ற பிள்ளைகளாலேயே பெற்றோர்கள் கொண்டு வந்து சேர்க்கப்படும், பெற்ற பிள்ளைகளிடம் இருக்கப் பிடிக்காமல் பெற்றோர்களே விரும்பி வந்து சேரும் முதியோர் இல்லங்கள் நாடெங்கிலும் உள்ளது. ஆனால், கொடுமையிலும் கொடுமையாக முதுமையில் நிராதரவாக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டு, நல்ல வாழ்வுக்கு அல்ல... நல்ல சாவுக்குக்கூட வழியில்லாமல் தெருவில் திரியும் நலிந்த முதியவர்களுக்காகவே இந்த இல்லத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினோம். இங்கே முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்..." என்ற ஃபாதர், இந்த முதியவர்கள் இங்கு இடம் பெறும் சூழல் பற்றிப் பேசினார்.
"பிள்ளைகளால் துரத்தப்பட்டு தெருவில் கிடப்பவர்கள், மருத்துவர்களால் கைவிடப்பட்டு சாகும் தறுவாயில் மருத்துவமனையில் இருந்து வெளியே தள்ளப்படும் ஆதரவற்றவர்கள், வயது முதிர்ந்த தெருவோர பிச்சைக்காரர்கள்... இப்படி ஏதோ ஒரு வகையில் நிராதரவாக்கப்பட்டவர்களைத்தான் இங்கு அழைத்து வருகிறோம். போலீஸ் மூலமாகவோ, அரசு அதிகாரிகள் மூலமாகவோ எங்காவது இப்படிப்பட்டவர்களைப் பற்றிய தகவல் கிடைத்தால், உடனே சென்று அழைத்து வந்துவிடுவோம். ஐம்பதுக்கும் மேற்பட்ட, மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு இருக்கிறார்கள்" என்றவர், இந்த இல்லத்தில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அந்த முதியவர்களின் அமைதி யான அஸ்தமனம் பற்றித் தொடர்ந்தார்.
"இங்கு வருகிறவர்கள் இரண்டு நாட்களிலோ, இரண்டு வாரங்களிலோ, ஏன் இரண்டு வருடங்களிலோகூட இறக்கலாம். ஆனால் அவங்களுக்கு நிம்மதியான, அமைதியான, மரியாதையான சாவு நிச்சயம். சராசரியாக ஒரு வாரத்தில் இங்கு நான்கு பேர் இறந்துகொண்டே இருப்பார்கள். வி.ஏ.ஓ-வுக்கு மட்டும் தகவல் கொடுத்துவிட்டு, முறைப்படி அடக்கம் செய்துவிடுவோம். அதேசமயம், மாதத்துக்குப் பத்திலிருந்து பதினைந்து பேர் புதிதாக வந்துகொண்டே இருப்பார்கள்" என்ற ஃபாதர்,
|