ஒருநாள் தன் வீடியோகேமில் பேட்டரி தீர்ந்துபோக, தன் செவிட்டுப் பாட்டியிடம் தனக்கு பேட்டரி வாங்கித்தரச் சொல்லி கத்துகிறான் சாங் வூ. ஆனால், பாட்டியோ தன்னிடம் போதிய பணம் இல்லை என்று சைகை செய்ய, வெறுத்துப்போகும் சாங் வூ, பாட்டி கழுவிக் கொண்டுவந்து வைக்கும் பீங்கான் பாத்திரத்தை உடைக்கிறான். அவளது செருப்புகளை ஒளித்து வைக்கிறான். பாட்டியை திட்டி சுவரில் கார்ட்டூன்கள் வரைகிறான்.
ஒருநாள் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கும் சாங்வூவுக்கு 'கெண்டகி' சிக்கன் சாப்பிடும் ஆசை வருகிறது. பாட்டியிடம் 'கெண்டகி சிக்கன் வாங்கித் தா' என்கிறான். ஆனால், அவளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. ஆனாலும், அவன் சொன்னதைப் புரிந்துகொண்டு, சேவலைப் போல பாவனை செய்து 'அதுவா?' எனக்கேட்க, சாங் வூ உற்சாகமாகி 'ஆமாம்' என்கிறான்.
பாட்டி உடனே பை எடுத்துக்கொண்டு, மலைப்பாதையில் தடுமாறி சென்று, ஒரு உயிருள்ள கோழியை பேரனுக்காக மழையில் நனைந்தபடி ஆசையுடன் வாங்கி வந்து, அவன் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சமைத்து அவனை எழுப்புகிறாள். கெண்டகி சிக்கனை எதிர்பார்த்திருந்த சாங்வூவுக்கு இது பெரும் அதிர்ச்சி தர, பாட்டியைத் திட்டி சாப்பிட மறுக்கிறான். பாட்டி நெஞ்சில் கைவைத்து மூன்று முறை சுற்றுகிறாள். அப்படிச் செய்தால் 'என்னை மன்னித்துவிடு' என்பது அர்த்தம்.
ஒருநாள் பாட்டி தன் தோட்டத்தில் விளைந்த தர்பூசணி பழங்களை எடுத்துக்கொண்டு சாங் வூ உடன் சந்தைக்குப் பேருந்தில் செல்கிறாள். பழம் விற்ற பணத்தில் சாங்வூவுக்கு நூடுல்ஸ§ம் ஒரு ஜோடி ஷ¨க்களும் வாங்கித் தருகிறாள். பேரனுக்கு எல்லா காசையும் செலவு செய்துவிட்டமையால் கையிலிருந்த காசு கரைந்து போகிறது. அவனை மட்டும் பேருந்தில் ஏற்றிவிட்டு, வீட்டுக்கு நடந்தே வருகிறாள். வீட்டில் காத்திருக்கும் சாங் வூ தொலைவில் பாட்டியைப் பார்த்ததும் ஓடிச் சென்று, பின் வீடுவரை அவன் முன்னேயும், பாட்டி பின்னேயுமாக நடந்து வருகிறார்கள்.
அன்று சாங் வூ பாட்டியிடம் முடிவெட்டிக் கொள்கிறான். ஆனால் அவள் முடியை ஒட்ட கத்தரித்துவிட, கண்ணாடியை பார்த்த சாங் வூவுக்கு ஆத்திரம். பாட்டியை கடுமையாகத் திட்டிவிடுகிறான். வழக்கம்போல நெஞ்சில் கைவைத்து சுற்றிவிட்டு, அவன் படுத்தபின் ஒரு பொதியை வண்ண காகிதத்தில் சுற்றி அவன் பாக்கெட்டில் வைக்கிறாள்.
மறுநாள் தலைமேல் ஒரு துண்டை கட்டி சமாளித்தபடி தோழியின் வீட்டுக்கு விளையாடச் செல்லும் பேரன், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும்போது அவன் பாக்கெட்டிலிருந்து விழும் பாட்டி கொடுத்த பொதியை கவனிக்கிறான். அதில் அவனது வீடியோகேம்ஸ் கருவியும் பேட்டரிக்காக சில ரூபாய் நோட்டுக்களும் அவள் முடிந்து வைத்திருப்பதை பார்க்கிறான்.
'இத்தனை நல்ல பாட்டியை நாம் வேதனைப்படுத்திவிட்டோமே' என்ற குற்றவுணர்ச்சி அவனுள் பொங்கிப் பெருகுகிறது. அப்போது பட்டியும் அவனைத் தேடிவர, கண்ணீர் இவனை மீறி வழிகிறது. ஆனால்... பாட்டியோ அவன் கீழே விழுந்து அடிபட்டதன் காரணமாக அழுகிறான் என நினைத்து ஆறுதல்படுத்துகிறாள். இப்போது, அவனை அழைத்துச்செல்ல அவன் அம்மா வரப்போவதாக வந்திருக்கும் கடிதத்தை காட்டுகிறாள் பாட்டி.
|