"முன்னெல்லாம் குடும்பங்களில் முக்கிய முடிவுகளை பெரியவர்கள் எடுப்பார்கள். இன்றோ, 'அவங்களுக்கு என்ன தெரியும்?' என்ற மெத்தனத்தில் அவர்களை கலந்தாலோசிப்பதுகூட இல்லை. இது தவறு. அவர்களுக்கு 'எதுவும்' தெரியாமலா இன்று உங்களை ஒரு ஆளாக அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்? அவர்கள் சொல்வதற்கு காதுகொடுங்கள். பிறகு, 'நீங்க சொன்னதும் சரிதான்ப்பா... ஆனா, அந்த சூழ்நிலைக்கு அது பொருந்தாததால, இந்த முடிவு எடுத்திருக்கேன்' என்று பணிவுடன் சொல்லுங்கள். உச்சி குளிர்ந்து போவார்கள்" என்ற டாக்டர்,
"பொதுவாக நம் வீடுகளில் தாத்தாக்கள் சுலபமாக குறுக்கெழுத்துப் புதிர் கட்டங்களை நிரப்பிவிடுவதையும், பாட்டிகள் நமக்கு வாசமாக கூந்தல் எண்ணெய் காய்ச்சித் தருவதையும் கவனித்துப் பாராட்டத் தெரியாது நமக்கு. அதை முதலில் தூக்கியெறியுங்கள். சிறுவயதில் இருந்து உங்களின் ஒவ்வொரு வளர்ச்சியையும் நெகிழ்ந்து ரசித்த அவர்களுக்கு, சில பாராட்டுகளைக் கொடுப்பதால் குறைந்துபோய்விட மாட்டீர்கள். 'அப்பா, அம்மா இல்லைனா நான் எல்லாம் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது" என்றெல்லாம் மனதுக்கு தோன்றுவதை ஈகோ இல்லாமல் வெளிப்படுத்துங்கள். எப்போதும் 'எமோஷனல் டச்'சில் இருங்கள்" என்ற டாக்டர்,
"சில குடும்பத்தில் குழந்தைகளிடம் 'உங்க பாட்டிக்கு ஒண்ணும் தெரியாது. அவங்ககிட்ட எதையாவது கேட்டுட்டே இருக்காத' என்று சொல்லி வைப்பார்கள். இதனால் குழந்தைகளும் தங்களின் தாத்தா, பாட்டிகளை மதிக்க மாட்டார்கள். இது பலவிதத்தில் குடும்பத்து சுவாரஸ்யத்தைக் குலைத்துப் போடும். தன் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை தன் பாட்டிக்கு, பேரன் வியப்புடன் விளக்கும் சுவாரஸ்யம், தான் அந்தக் காலத்தில் ஊர்க்குளத்தில் தொடர்ச்சியாக பத்து நிமிடங்கள் முங்கு நீச்சல் போட்டதைத் தாத்தா பெருமையுடன் பேரனிடம் கதைக்கும் அழகு... இந்த பரஸ்பர பகிர்தல்களை எல்லாம் அந்த வீட்டிலிருந்தே அழித்துவிடும்! இதனால் பேரனுக்கு தாத்தா தலைமுறை பற்றி தெரியாது, தாத்தாவுக்கு பேரனின் தலைமுறை பற்றி புரியாது. பிறகு, தலைமுறை இடைவெளி விழாமல் என்ன செய்யும்?" என்று நிதர்சனக் கேள்வி எழுப்பியவர், 'எப்ப பார்த்தாலும் நொச்சு நொச்சு...' என்று வீட்டுப்பெரியவர்கள் பற்றி சலித்துக்கொள்ளும் பேரன்/பேத்திகளுக்காக தொடர்ந்து பேசினார்.
" 'வீட்டுக்கு நேரத்தோட வரணும்' என்று அவர்கள் சொன்னால், அது பழமைவாதம் அல்ல, நீங்கள் பத்திரமாக வரவேண்டுமே என்ற அக்கறை. கெட்ட வார்த்தையெல்லாம் நல்ல வார்த்தையாகிவிட்ட உங்களின் ஃப்ரெண்ட்ஸ் அரட்டைகளில் அவர்கள் அதிர்ச்சி அடைந்து திருத்தினால், அது கண்டிப்பு அல்ல, கலாசாரம். உங்களின் மொபைல், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாத அவர்கள், 'இது என்னப்பா...?' என்று கேட்டால் அது நீங்கள் பரிகாசம் செய்ய வேண்டிய அறியாமை அல்ல; அதை அறிந்துகொள்வது குறித்த அவர்களின் துளி ஆர்வம்! எனவே, அவர்களிடம் அனைத்துக்கும் மல்லுக்கு நிற்காதீர்கள். நம் உலகத்தின் பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியாதுதான், தெரியாதுதான். எனவே, புரியும் விதத்தில் பேசுங்கள் அந்த பெரியவர்களிடம்!" என்று சொன்ன சுரேஷ்,
"என்னிடம் தங்கள் பெற்றோர்களை அழைத்துவரும் சிலர், 'எனக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா டாக்டர்? ரொம்பப் பிஸி. அதையெல்லாம் விட்டுட்டுதான் இவங்கள ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன். என்ன பண்றது...?' என்று பெருமையுடன் (!) அலுத்துக் கொள்வார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது திடீரென வீறிட்டு அழுத சமயங்களில் அதன் காரணம் தெரியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் அவர்கள் திணறிய பொழுதுகளையெல்லாம் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டார்கள் எந்தப் பெற்றோர்களும். அதையெல்லாம் உங்களைப்போல அவர்கள் சலிப்புடன் செய்யவில்லை. ஏனென்றால், அவர்கள் அதை ஒரு வேலையாகக் கருதியதில்லை, வாழ்க்கையாக வாழ்ந்தார்கள். எனவே, உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளுக்கு 'தியாக'ப் பூச்சு பூசாதீர்கள்! நாளை, உங்கள் பிள்ளைகளும் 'தியாகி' ஆவார்கள்!" என்று எச்சரிக்கை கொடுத்து முடித்தார் டாக்டர்.
|