"பதின்மூன்றாவது வயதில் குடும்பத்தைத் தாங்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. அதனால், ஐந்தாம் வகுப்புக்கு மேலே படிக்கவில்லை. கோடியக்கரை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பாய்மரக் கப்பல் செல்லும். சிங்கப்பூர், மலேசியா, பர்மா, தாய்லாந்து, அந்தமான், சுமத்ரா என்று வெளிநாடுகளுக்கும் செல்லும். அந்தக் கப்பல்களில் நான் வேலை பார்த்தேன். சமயங்களில் பாய்மரக் கப்பலை ஓட்டியும் இருக்கிறேன். இதன் மூலம் வங்கக்கடல் மற்றும் பாக் ஜலசந்தி பகுதியின் காற்றின் போக்கும், நீரோட்டமும் எனக்கு நன்கு தெரியும். இங்கு வருடத்தில் ஒன்பது மாதங்கள் காற்று வீசியபடியே இருக்கும்.
பாய்மரங்களையே பார்த்துப் பார்த்து வளர்ந்த எனக்கு, சிறு வயது முதலே காற்று மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்பங்களில் ஈடுபாடு உண்டு. இந்தச் சூழலில் காற்றாலையைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது குறித்து அறிந்த நான், அதில் ஆர்வத்தை செலுத்தத் தொடங்கினேன். அதைப் பற்றியெல்லாம் நூல்களின் வாயிலாகவும் நேரிலும் தெரிந்துகொண்டு காற்றாலை அமைக்கும் முயற்சிகளில் இறங்கினேன்'' என்று சொல்லும் காளியா பிள்ளைக்கு அப்போது வயது 62. அன்று தொடங்கிய முயற்சி... இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது.... 82-ம் வயதில் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. இதற்கு அவருக்கு உறுதுணையாக நிற்பது மகன் மாரியப்பன் மற்றும் எலெக்ட்ரீஷியன் ராமகிருஷ்ணன் ஆகியோர்தான்!
''ஆரல்வாய்மொழி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் டென்மார்க் நாட்டின் கண்டுபிடிப்பான 90 அடி விட்டமுடைய மூன்று இறக்கைகள் கொண்ட விசிறி பயன்படுத்தப்படுகிறது. இதில் மணிக்கு பதினோரு கிலோ வாட் மின்சாரம் கிடைக்கிறது. ஆனால், நான் தெரிந்துகொண்ட அறிவியல் அறிவும், காற்றின் திசைகள் பற்றி நான் பெற்ற அனுபவ அறிவும் கைகோக்க, காற்றாலை அமைப்பில் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளேன். அதன்படி காற்றலை அமைத்தால் மணிக்கு இதைவிட பலமடங்கு கூடுதலான மின்சாரம் கிடைக்கும். இதற்கு இறக்கையில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். அதாவது அடிப்பகுதியை குறுகலாகவும், நுனிப்பகுதியை அகலமாக பாய்மரக் கப்பல் போன்று உள் வாங்கியும் அமைக்க வேண்டும். காற்றின் வேகத்துக்கேற்ப பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வது போலவே, வேகமாக வீசும் காற்று இந்த உள்வாங்கிய இறக்கைகளுக்குள் புகுந்து, காற்றாடியை வேகமாக சுழலச் செய்யும்" என்றவர், தன்னுடைய பல ஆண்டு கால ஆராய்ச்சிக்காக எழுபதாயிரம் ரூபாயை செலவிட்டிருக்கிறார். நண்பர்கள் முப்பதாயிரம் வரை உதவி வழங்கியுள்ளனர். அகமதாபாத்தில் இயங்கும் தேசிய அறிவியல் மையம் இவருடைய ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 25,000 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இப்போது ஆராய்ச்சியின் தொண்ணூறு சதவிகித வேலைகளை முடித்துவிட்டார் காளியா பிள்ளை. இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் நிறைவடைந்து, சோதனை ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கிவிடுமாம். தேசிய அறிவியல் மையத்திலிருந்து அதை பார்வையிட்டு, உறுதிப்படுத்திய பிறகு, இவருடைய முயற்சி எந்த அளவுக்கு வெற்றி என்பது தெரியவரும்.
|