தும்பைப் பூ போல வெளுத்துக் கிடக்கும் 'பாப்' தலைமுடி, சுருக்கங்கள் வரைந்த முகம், அசத்தலான பொக்கைவாய் சிரிப்பு என அன்பாக அறிமுகமாகிறார் ரத்தினம்மாள் பாட்டி!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தின் எழுபது வயதான சமூக சேவை ஆலமரம் இவர். தோளில் தொங்கும் கனத்த ஐஸ் பெட்டியுடன் வீடு வீடாகச் சுற்றி போலியோ சொட்டு மருந்து ஊட்டிவிட்டு வந்த களைப்பின் சுவடே தெரியாமல் வந்தவரை, அவர் நடத்தும் 'பாலர் பள்ளி'யில் சந்தித்தோம்.
"என் பிறந்த வீடும், புகுந்த வீடும் செல்வத்துல செழிச்சவங்க. அந்தக் காலத்துலயே எனக்கு கான்வென்ட் படிப்பு. அங்க எனக்கு அறிமுகமான பெல்ஜிய கன்னியாஸ்திரி ஒருத்தவங்கதான், சொகுசு, பவுசுனு இருந்த என் வாழ்க்கை, சேவையை நோக்கித் திரும்பக் காரணம். 'உங்க நாட்டுல நிலம், நகைனு சொத்தைச் சேர்த்துட்டு உங்கள மாதிரி சில பேர் சுகமா வாழலாம். ஆனா, உங்க நிலங்கள்ல விவசாய வேலை பார்க்கற கூலிக் குடும்பங்களோட புள்ளைங்க, களத்து மேட்டுல கேட்பாரற்று கிடக்குதுங்க. மரத்துத் தூளியில பசிச்சு, அழுது, கிறங்குதுங்க. அவங்களைப் பாதுகாக்க ஏதாவது வழி செஞ்சாதான் உங்க நாடு முன்னேறும்!'னு சொன்னது, என் மனசுக்குள்ள ஓங்காரமா ஒலிச்சுட்டே இருந்தது.
இந்த நிலையில, பள்ளிக்கூட படிப்போட நிறுத்திட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. நாலு குழந்தைங்க பொறந்து, அதுக வளர்ந்து பள்ளிக்கூடம் போறவரைக்கும் எனக்குள்ள அரிச்சுட்டே இருந்த அந்த நினைப்புக்கு, அதுக்கு அப்பறம்தான் வழி கிடைச்சது. எங்க வீட்டுலயே ஒரு பாலர் பள்ளி ஆரம்பிச்சேன்" என்பவர், அரண்மனை போன்ற புகுந்த வீட்டின் ஒரு விசாலமான அறையில் அன்றாடங் காய்ச்சிகளுடைய அறுபது ஏழைக் குழந்தைகளை சேர்த்துள்ளார். அந்தப் பிஞ்சுகளின் கூச்சல், ஆரவாரம் சிலருக்கு இடைஞ்சலாக இருக்கவே... அரசின் உதவியோடு ஊரின் மத்தியில் 10 சென்ட் இடத்துக்கு கோலாகலமாக இடம் மாறிய இவரின் பாலர் பள்ளி, இன்றும் தொடர்கிறது.
|