கதவும் ஜன்னலும் கட்டுப்பாட்டில்!
ஜன்னலில் இரும்பு வலை வைப்பது நல்லது. யாராவது கதவைத் தட்டினால் 'யாரது?' என்று முகத்தைப் பார்த்துவிட்டே திறக்கும்படி கதவின் அருகில் ஜன்னல் இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது... கதவில் லென்ஸ், கதவை முழுமையாக திறப்பதை தவிர்க்கும் வகையிலான கொக்கி சங்கிலி அமையுங்கள். முகத்தைப் பார்த்து விசாரித்த பின்பே கதவை முழுக்க திறந்து உள்ளே விடுங்கள்.
அக்கம் பக்கத்தில் சிநேகம் தேவை!
பெற்ற குழந்தைகளே வருடத்துக்கு ஒருமுறைதான் வந்து பார்ப்பார்கள் என்ற நிலையில் உள்ளவர்கள்... அக்கம் பக்கத்து வீடுகளில் நட்பாக பழகிக்கொள்ள வேண்டியது அவசியம். முன்பின் தெரியாதவர்களை வீட்டில் வைத்து பேச நேர்ந்தால், பக்கத்து வீட்டுக்காரர்களையும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வெளியே வந்து அமர்வதையோ, பக்கத்து குடித்தனங்களுடன் பேசுவதையோ வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் திடீரென ஏற்பட்ட உடல் நோய் காரணமாக எழ முடியாமல் கிடந்தால்கூட, 'இன்னிக்கு பாட்டியக் காணாமே...' என்று உடனடி உதவிக்கு வருவார்கள் பக்கத்து வீட்டு நண்பர்கள்.
கைபேசி தேவை!
கூட்டமாக திருட வருபவர்கள், பொதுவாக முதலிலேயே தொலைபேசி இணைப்பை வெட்டி விடுகிறார்கள். எனவே, லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்பவர்கள் ஒரு கைபேசியையும் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த கைபேசியில் பொது, அவசர அழைப்பு எண்களோடு அருகில் உள்ள காவல் நிலையத்தின் எண்ணையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பழக்கங்களில் கவனம் இருக்கட்டும்...
நெடுநாட்களாக நன்றாக பழகியவர்கள்கூட சிலசமயம் சபலத்தினால் உங்களிடம் சமூக விரோதமாகச் செயல்படலாம். முன்பின் தெரியாத திருடன் கட்டிப் போட்டு கொள்ளை அடிப்பான் என்றால், நன்றாகத் தெரிந்த திருடன், தான் அடையாளம் காணப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கொலை முயற்சி வரை போவான். எனவே, நீங்கள் பழகுபவர்களிடம் பணம் குறித்த சபலத்தைத் தூண்டாதவாறு நடந்து கொள்ளுங்கள். கொத்துசாவியை எல்லோர் கண்ணிலும் படும்படி வைப்பதை தவிருங்கள். அதிகமாக நகை போடாதீர்கள். நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை பார்ப்பவர்கள் அறியும்படி நடந்து கொள்ளுங்கள்'' என்று சொன்னவர்,
''பொதுவாக அடுத்தவர்கள் உங்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதத்தை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். அதற்கு ஒரு குட்டிக் கதை சொல்வார்கள்...
ஒரு வீட்டில் எல்லா நகைப் பெட்டிகளையும் திறந்து வைத்து, நகைப்பெட்டிகள் உள்ள அறையின் நடுவே ஒரு துப்பாக்கியையும் வைத்திருந்தார்கள். இதைப் பார்த்த ஒருவர் 'எல்லா நகைப் பெட்டியையும் ஏன் திறந்து வெச்சிருக்கீங்க?' என்று கேட்க,
'எங்க வேலைக்காரங்க நாணயமானவங்க. அதான்' என்றாராம் வீட்டு உரிமையாளர்.
'பின்ன நடுவுல ஏன் துப்பாக்கிய வெச்சிருக்கீங்க?' என்று அவர் கேட்க,
'அவங்களை எப்பவுமே நாணயமா வெச்சிருக்கத்தான்!' என்றாராம் உரிமையாளர்!" என்று சிரிக்க, சிந்திக்க வைத்த மாரிமுத்து,
"முதியவர்கள், தங்களின் பாதுகாப்புக்கு காவல்துறையின் உதவியைப் பெற, வேலையாட்களின் நடத்தையில் திருப்தி இல்லை எனில், அவர் பற்றிய முழு விவரத்தையும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் ஒரு நகலை அருகிலுள்ள காவல் நிலையத்திலும் கொடுத்து வைக்கலாம். வழக்கத்துக்கு மாறாக ஏதாவது நடப்பதாகத் தெரிந்தால், அதையும் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். உடனேயே பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தபடி (முடிந்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியோடு) உங்கள் வீட்டைக் கண்காணிக்கவும். இதன் மூலம் திருட்டு நடந்தாலும் குற்றவாளியை எளிதில் பிடிக்க முடியும்.
இவை தவிர பயிற்சி பெற்ற வளர்ப்புப் பிராணி களை வளர்க்கலாம். தினசரி குறிப்பிட்ட நேரத்துக்கு யாரையாவது போனில் தொடர்பு கொண்டு, உங்கள் இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கலாம். கண்காணிப்பு கேமிரா போன்ற நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தலாம்!" என்று ஏகப்பட்ட உஷார் குறிப்புகளை வழங்கி முடித்தார்.
|