"வாலிபம் இருந்தவரை சித்தாள் வேலைக்குப் போனோம். அப்பறம் இறால் பிடிக்கறதே தொழிலாப் போச்சு. எங்க புள்ளைகளுக்கெல்லாம் கல்யாணமாகி பேரன், பேத்திங்க இருக்காங்க. அவுகளுக்கும் கூலி வேலைதான். அவுக சம்பாதிக்கற காசு அவுக புள்ள, குட்டிக்கு நல்லது - கெட்டது பாக்கவே பத்தமாட்டேங்குது. இதுல நாம வேற அவுகளுக்கு சொமையா உக்காரலாமா?
எங்கள மாதிரி வயசாளிங்க எல்லாம் இப்படி ஒண்ணா சேர்ந்து வேல பார்க்கறதால அலுப்புத் தெரியாம பொழுதும் போயிருது!" என்கிற காசிவீரம்மாளுக்கு வயது எழுபத்தைந்து.
புடவை முந்தியை தலையில் முண்டாசு கட்டி, தரையோடு நீந்தி, மூழ்கி, இறாலோடு எழுந்து என்று... அவர்கள் 'இறால் தடவு'வதைப் பார்க்கும் காட்சி, ஒரு குறும்பட அனுபவம் தருகிறது நமக்கு. ஆற்றில் கிடக்கும் கருவேல முட்களும், கெளுத்தி மீன்களும் அவர்களின் ஊறிய கால்களைக் கிழிக்கின்றன. இறால்கள் துள்ளும்போது அதில் உள்ள முட்கள் கையைக் கிழிக்கின்றன.
"தெனமும் இப்படி காயம், வலிதான். என்ன பண்றது... வயித்துப்பாட்டுக்காக தாங்கிக்கத்தானே வேணும்?!"
- கெளுத்தி மீன் குத்தி காயம்பட்ட காலில் ஒரு துணியை சுற்றிக் கொண்டு வேதனையோடு ஆற்றில் இறங்குகிறார் அறுபத்தைந்து வயது சக்கரை ஆச்சி.
வலிகளுக்குப் பழகிவிட்ட இவர்களுக்கு ஒரு கோரிக்கையும் உள்ளது.
"எங்கள மாதிரி கெழவிக மட்டுமில்லாம, குடும்பக் கஷ்டத்துக்காக நடுத்தர வயசுப் பொம்பளைகளும் கூட, கிட்டத்தட்ட நானூறு பேரு இங்க இறால் தடவறோம். எங்களுக்காக 'மீன் பிடி மகளிர் கூட்டுறவு சங்கம்' அமைச்சுத் தந்து... ஐந்நூறோ, ஆயிரமோ நிதி உதவி தந்தா, எங்க சிரமத்தைக் குறைக்க சின்ன வலைகளா வாங்கிக்குவோம். அரசு வழங்கற உதவித் தொகையும் கிடைக்கும்!"
- ஏக்கத்தோடு வேண்டுகோள் வைக்கிறார் எழுபது வயது அஞ்சம்மாள்.
ஆற்றுத் தண்ணீர் ஓய்வில்லாமல் அலையடித்துக் கொண்டே இருக்கிறது... அவர்களைப் போலவே!
|