வயதான அப்பாவை தன் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொண்ட ஒரு மகன், மூன்று வேளையும் ஒரு கொட்டாங்குச்சியில்தான் அவருக்குக் கஞ்சி ஊற்றினார்.
ஒருநாள் அவர் இறந்துவிட, அவரோடு சேர்த்து, அவர் பயன்படுத்திய பொருட்களையும் மூட்டைக் கட்டினார்கள். அப்போது பேரக் குழந்தை ஓடிப்போய் அந்த கொட்டாங்குச்சியை மட்டும் ரொம்ப பத்திரமாக கையில் எடுத்துக் கொண்டான்.
'டேய், அதப்போய் எதுக்காக எடுத்துக்கிட்டு வர்றே?' என்று அவனுடைய அப்பா கோபத்தோடு கேட்க...
மழலை மொழியில் வந்து விழுந்த பதில், அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அது...
'நாளைக்கு உங்களுக்கு இதுலதானேப்பா நானும் கஞ்சி ஊத்தணும்.'
தோழிகளே... நம்மில் பலரும் இந்தக் கதையைக் கேட்டிருப்போம். தலைமுறை தலைமுறையாக கைமாற்றி விடப்பட்டு, வந்து கொண்டேதான் இருக்கிறது இந்தக் கதை. நம்முடைய குழந்தைகளுக்கு எத்தனை எத்தனையோ நல்ல கதைகளையெல்லாம் சொல்ல மறந்த நம்மில் பலர், இப்படிப்பட்ட 'நிஜக் கதை'களை மட்டும் நம்மையும் அறியாமல் தலைமுறைகளாக கடத்திக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு, வாழ்க்கை முறை மாறிப்போனதில் ஆரம்பித்து எத்தனை எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. இரு தரப்புக்குமே வாழ்க்கை பற்றிய, இயற்கை பற்றிய சரியான புரிதல் இல்லாது போனது முக்கிய காரணம் என்கிறார்கள் வாழ்க்கையியல் பேசும் நிபுணர்கள்.
ஆம்... குழந்தைப் பருவம், இளைய பருவம், நடுத்தர பருவம் என அனுபவித்து, ரசித்து சந்தோஷ மனநிலையுடன் வாழும் நாம், முதுமைப் பருவம் எட்டிப் பார்த்தால் மட்டும், அப்படி எதிர்கொள்வதில்லை! நடுநடுங்கிப் போகிறோம்... ஒதுக்கிவிட்டு ஓடப்பார்க்கிறோம். இளமைப் பருவம் எப்படி இயற்கை தந்த வரமோ... அதுபோலத்தானே முதுமைப் பருவமும்? அதை இனிமையாக்குவது... முதுமையை தொட்டவர்கள், தொட இருக்கிறவர்கள் இருவரின் கைகளில்தானே இருக்கிறது!
'நானெல்லாம் மாமியாருக்கு அடங்கின மருமகளாத்தான் இருந்தேன். ஆனா, இந்தக் கால பொண்ணுங்க படுத்துறபாடு தாங்க முடியல...' என்று அரற்றுவதற்கு முன் யோசித்துப் பாருங்களேன்... உங்கள் மாமியார் செய்த விஷயங்களில் எது உங்களை சந்தோஷப்படுத்தியது, எது உங்களை மிகவும் கஷ்டப்படுத்தியது என்று! அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே இன்றைய மருமகளும் எதிர்பார்ப்பார் என்பதைப் புரிந்து கொண்டால்... வீடு சந்தோஷக் கூடாக மாறும்தானே!
எப்போதும் மனிதர்களை, அவர்கள் உணர்வுகளைக் கொண்டாடுவோம் - அது எந்த வயதாக இருந்தாலும்!
கொண்டாடத்தானே வாழ்க்கை!
உரிமையுடன் உங்கள்
|